கோமாதாவைக் கொன்று முஸ்லிம்கள் மீது பழி போட்ட பஜ்ரங்தள் தலைவர்! சிக்கியது எப்படி?

கோமாதாவைக் கொன்று முஸ்லிம்கள் மீது பழி போட்ட பஜ்ரங்தள் தலைவர்! சிக்கியது எப்படி?
Share this:

உத்தரப்பிரதேசம் (02 பிப்ரவரி 2024): கோமாதாவைக் கொன்று முஸ்லிம்கள் மீது பழி போட்ட பஜ்ரங்தள் மாவட்ட தலைவர் சிக்கியது எப்படி?

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வின் சங்பரிவார அமைப்புகளில் ஒன்றான பஜ்ரங்தள் தீவிர இந்துத்துவா எனும் பெயரில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் அமைப்பாகும்.  அப்பாவி இந்துக்களின் பசு மீதான நம்பிக்கையைப் பயன்படுத்தி, தனக்குத்தானே திட்டத்தில் பசுக்களைக் கொன்று அதனை முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி பெரும் கலவரங்களை நாடுமுழுக்க ஆங்காங்கே நிகழ்த்தினாலும், ஒரு சில இடங்களில் காவல்துறையினரிடம் சிக்கிக் கொள்வது வழக்கம்.

கலவரம் நிகழ்த்த திட்டம் தீட்டிய பஜ்ரங்தள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஹரித்வாரா போன்ற கோயில்களுக்கு இந்து பக்தர்கள் செல்லும் சாலையான கன்வார் பாதையில், ஜனவரி 16-ம் தேதி பசுவின் தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பசுவதையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஜ்ரங் தளத்தின் மொராதாபாத் மாவட்டத் தலைவர் உட்பட பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, ஜனவரி 28-ம் தேதி அன்று இரவு, பசுத் தலை கண்டுபிடிக்கப்பட்ட அதே காவல் நிலையப் பகுதியான செத்ரம்பூர் கிராமத்தில் மற்றொரு பசு வதை சம்பவம் நடந்தது.

முதல் சம்பவத்துக்கும் இரண்டாவது சம்பவத்துக்குத் தொடர்பு இருப்பதாகவும், இது திட்டமிட்டு நடத்தப்படுவதாகவும் காவல்துறை சந்தேகித்தது. அது தொடர்பாக விசாரணையையும் தொடங்கியது. இதற்கிடையில், இரண்டாவது சம்பவம் நடந்த இடத்தில் ஒரு நபரின் கால்சட்டையும், ஒரு பர்சும் கிடைத்தது. அதில் மெஹ்மூத் (Mehmood) என்பவருடைய புகைப்படம் இருந்தது.

அது தொடர்பாக மெஹ்மூத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் விசாரித்ததில், தனக்கு வேண்டாத எதிரிகள் இதைச் செய்திருக்கலாம் என சேத்ரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷஹாபுதீன் என்பவரின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் காவல்துறை விசாரித்ததில், அதற்குப் பின்னால் இருந்த பெரும் சதி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

இஸ்லாமியரை சிக்க வைக்க நடந்த சதி அம்பலம்:

இந்த வழக்கு குறித்துப் பேசிய மொராதாபாத், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஹேம்ராஜ் மீனா (எஸ்எஸ்பி),

“சந்தேகத்தின் அடிப்படையில், ஷஹாபுதீனிடம் விசாரித்தோம்.

இதன்மூலம், பஜ்ரங் தளத்தின் மொராதாபாத் மாவட்டத் தலைவர் மோனு பிஷ்னோய் என்ற சுமித், பஜ்ரங் தள அமைப்பின் தொண்டர்கள் ராமன் சவுத்ரி, ராஜீவ் சவுத்ரி ஆகியோருடன் இணைந்து மெஹ்மூத்தினை சிக்க வைக்க சதித் திட்டம் தீட்டியது தெரியவந்தது.

ஜனவரி 14-ம் தேதி முதல் சம்பவத்தைத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதன்படி, ஷஹாபுதீனின் கூட்டாளியான நயீமிடம் ரூ.2,000 கொடுத்து, எங்கிருந்தோ பசுவின் தலையை எடுத்து வந்து சாஜ்லெய்ட் காவல் நிலையப் பகுதியில் வைக்கச் செய்திருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து, பஜ்ரங் தளத்தின் மொராதாபாத் மாவட்டத் தலைவர் மோனு பிஷ்னோய் சட்ட விரோத நடவடிக்கையைத் தொடங்கினார்.

கலவரம் வெடிக்கும் – பஜ்ரங்தள் காவல்துறைக்கு கெடு!

அது குறித்து காவல்துறை விசாரிக்கும் போதெல்லாம், `பசு வதையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் இல்லையென்றால்..!’ என தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளை மிரட்டியிருக்கிறார்.

மேலும், காவல்துறைக்கு நெருக்கடியை உருவாக்கும் வகையில், இதே பஜ்ரங்தள் அமைப்பினர் ஒரு வீட்டில் பசுவைத் திருடி, அதைக் கொலை செய்துவிட்டு, காவல்துறைக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர். இது தொடர்பாக, கண்காணிப்பு கேமராக்கள், மொபைல் இருப்பிடம் ஆகிய ஆதாரங்களின் அடிப்படையில் சதித்திட்டம் அம்பலமாகியிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, IPC பிரிவுகள் 120B (குற்றச் சதி), 211 (காயப்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்ட குற்றத்திற்கான பொய்யான குற்றச்சாட்டு), 380 (குடியிருப்பு வீட்டில் திருட்டு), 457 (வீடு அத்துமீறி நுழைதல் அல்லது வீட்டை உடைத்தல்), 411 (திருடப்பட்ட சொத்தை நேர்மையற்ற முறையில் பெறுதல்) மற்றும் பசு வதை சட்டத்தின் பிரிவு 3,5,8 ஆகிய பிரிவுகளின் கீழ் இரண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் சிக்கியவர்களில் சிலர் கிரிமினல் வழக்கு பின்னணி கொண்டவர்கள். இந்த விவரங்கள் தெரியவந்த பிறகே, மெஹ்மூத் விடுவிக்கப்பட்டிருக்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

நன்றி: விகடன்

https://www.vikatan.com/government-and-politics/bajrang-dal-for-allegedly-slaughtering-cows-to-implicate-a-muslim-man-in-a-false-case

https://www.tamilmurasu.com.sg/india/uttar-pradesh-vhp-moradabad-head-nabbed-slaughtering-cow-create-tension

 


கலவரம் செய்துவிட்டு பிற மதத்தினர் மீது பழி சுமத்தும் பாஜகவினரின் பட்டியலை, சத்தியமார்க்கம்.காம் தளத்தில் #தனக்குத்தானே என்ற TAG மூலம் தொகுப்பாக வாசிக்கலாம். (லிங்க்)



Share this: