என்ன உன் தேவை? (கவிதை)

ரசாங்கத்திடம் சொல்லி
அறிவுப்பொன்னு செய்யுங்கய்யா…
சத்துணவு சரத்துகளில் சில
சலுகைகள் வேணுமய்யா!

அவித்த முட்டை எமக்கு வேண்டாம்
ஆஃப் பாயில் போடுங்கய்யா!
அப்பனுக்கு அத்தோடு
அரை பாட்டில் சாராயம்!

“ஞாயமானக் கோபம்தான்
நடந்தாலும் நடக்கலாம்
போகட்டும்
நயமான கோரிக்கை யாது?”

குடிக்காத அப்பன்
அடிக்காத ஆசான்
பசிக்காத வயிறு
புசிக்கப் பழஞ்சோறு!

வெளுக்காத வர்ணத்தில்
விலை குறைவாய்ச் சீருடை
எடை குறைவாய்ப் புத்தகங்கள்
விடை தெரிந்த கேள்விகள்!

வீட்டுப் பாடம் படிக்க
வீதிக் கம்பம் இருந்தாலும்
மின் வெட்டு பாதிக்காத
மண்ணெண்ணெய் விளக்கு!

பள்ளிக்கூடம் போகனும்
பாடங்கள் படிக்கனும்
கனவு நனவாகும்
கிழக்கொருநாள் வெளுக்கனும்!

– சபீர்

[கவிதைக்கான கரு: சென்ற வாரம் செய்தித் தாள்களில் வெளியாகியிருந்த படம் மேலே பதிவாகியுள்ளது. குழந்தையை அடிப்பதும் மிரட்டுவதுமாக தெருவில் தள்ளாடிச் சென்ற ஒரு குடிகாரத் தந்தை, சாக்கடையில் விழுந்தெழுந்து, பின் ஒருசிலரின் உதவியுடன் நாகர்கோவில் காவல்நிலையத்தில் கிறங்கிக் கிடக்கிறார். அருகில், செய்வதறியாது திகைத்து நிற்கும் சிறுவயது மகள்]