வீசி எறியப்படும் வளைகுடா அடிமைகள்!

Share this:

டந்த 1960 களில் வளைகுடா நாடுகளில் பெட்ரோல் படுகைகள் கண்டுபிடிக்கப் பட்டபோது வறண்ட பாலைவனமாக இருந்த இப் பிரதேசங்களைக் கட்டமைக்க இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து கை நிறையச் சம்பளத்துடனும் கவர்ச்சியான சலுகைகளுடனும் பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். அந்த நேரத்தில் போதிய உள்நாட்டு வேலை வாய்ப்புகளற்று இருந்த இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள், வளைகுடா நாடுகளிலிருந்து வரத் துவங்கிய அந்நியச் செலவாணிகளில் சுகம் கண்டு, கிடைத்தவரை லாபம் என்ற மனநிலையில் நாடு திரும்ப நேரிடும் வெளிநாடுவாழ் மக்களுக்கான உருப்படியான திட்டங்கள் ஏதுமின்றி இருந்தன.

2010-2011 ஆம் ஆண்டில் துனீஷியா, எகிப்து, லிபியா போன்ற வட ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் காரணமாக ஆட்சியாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. மேற்கத்திய நாடுகள் இதனை “வளைகுடா வசந்தம்” என்று குறிப்பிட்டனர். பெட்ரோலிய வளம் மிக்க ஏனைய அரபு நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் புரட்சி ஏற்படும் சூழல் இருந்தாலும் அரேபிய மன்னராட்சியாளர்கள் அவற்றை ஓரளவு சமாளித்து வருகின்றனர். எனினும், இங்கொன்றும் அங்கொன்றுமாக அவ்வப்போது புரட்சிக்குரல் எழுவதும் அவற்றைத் திரைமறைவுப் பேரங்கள் வாயிலாகவோ அல்லது தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளின் பெயரில் சாம/பேத/தண்ட நடவடிக்கைகள் வாயிலாகவோ ஒடுக்குவதும் நடைபெற்று வருகின்றன.

நாம ஊர் விட்டு இங்கே பொழக்க வந்திருக்கோம்… இந்த நாட்டு கவர்மெண்ட்டு போகச் சொன்னா போயிட வேண்டியது தானே? இதிலே என்ன எதிர்ப்பு வேண்டிக் கிடக்கு?

இந்நிலையில் எஞ்சியுள்ள அரேபிய நாடுகளிலும் வளைகுடா வசந்தம் பரவி, இதுநாள் வரை அனுபவித்து வந்த சுகபோக வாழ்வுகள் பறி போய்விடுமோ என்ற கவலை அரபு ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டதால், தம் குடிமக்களை வசப்படுத்த பல்வேறு சலுகைகளை, நலத் திட்டங்களை அவர்கள் அறிவித்தனர். ஏற்கனவே குடிமக்களுக்கு நிலம், வீடு, நீர், மின்சாரம், உயர்கல்வி, திருமணம் என்று அனைத்து அடிப்படைத் தேவைகளையும் வளைகுடா அரசுகள் இலவசமாக வாரி வழங்குவது கவனிக்கப் பட வேண்டியதாகும். எனினும், தற்போது அதிகம் இளைஞர்கள் படித்துப் பட்டம் பெற்று வருவதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பின்மை சிறிது சிறிதாகப் பெருகியதால், இத்தகைய நலத் திட்டங்களில் மக்களுக்குத் திருப்தி ஏற்படவில்லை.

இதனைக் கண்டு கொண்ட ஆளும் வர்க்கம், குடிமக்களுக்கு மேலும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது தன் பார்வையைத் திருப்பியது.. அவர்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை ஆள்வோர் விதித்தனர். இதன் விளைவாக, சவூதியின் நிதாகத் (Nitaqat/அறநெறி) சட்டத்தைத் தொடர்ந்து குவைத்திலும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது கிடுக்கிப் பிடி சட்டம் பாய்கிறது. இது, உள்நாட்டு மக்களுக்கு உயர் பதவிகளில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதற்காக அமைக்கப்பட்ட Saudization, Omanization, Qatarization, Emiratization போன்றவற்றின் புதிய பதிப்பு என்றாலும், இம்முறை சற்று கூடுதல் கெடுபிடிகள் உள்ளன.

{youtube}EjJBEkZhAos{/youtube}

சவூதியின் நிதாகத் சட்டத்தின்படி ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை வாய்ப்பினை இழந்த செய்திகளைக் கடந்த சில மாதங்களாக அறிந்து வருகிறோம். அதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக முன்னறிவிப்பின்றி, குவைத்தும் களத்தில் இறங்கியுள்ளது. இதில் சிக்கியவர்களுள் தாய்நாடு திரும்பத் தயங்குபவர்கள், மறுபரிசீலனைக்கு விண்ணப்பிப்பவர்கள், நிபந்தனைக் காலத்திற்குள் வெளியேறாதவர்கள் என எந்தப் பேதமுமின்றிக் கொத்தாக அள்ளிச் சென்று சிறையில் அடைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தாய்நாட்டிற்குத் திரும்ப விமானங்களில் இடம் கிடைக்காத குறுகிய கால இடைவெளியில் பல்லாயிரக் கணக்கானோரை வெளியேற்றிக் கொண்டிருப்பது இந்தியத் தூதரகங்களுக்கே சவாலான விசயமாக உள்ளது. காலக் கெடுவை நீடிக்கக் கோரி இந்தியத் தூதரகம், தமிழக அமைப்புகள், மற்றும் பேரவைகள் சார்பாக முன் வைக்கப்பட்ட வேண்டுகோளும் நிராகரிக்கப் பட்டுள்ளது.
 
(வெளியாகும் செய்திகளின்படி, குவைத்தில் இருந்து மட்டும் வருடத்திற்கு ஒரு லட்சம் வீதம் என மொத்தம் 10 இலட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை, பலவந்தமாக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் மட்டும் மொத்தம் 6.5 இலட்சம் இந்தியர்கள் பணிபுரிகின்றனர் என்பதும் அதில் சரிபாதி கேரள மாநிலத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)
 
வளைகுடா நாட்டு அரசுகள் மேற்கொண்டு வரும் இந்த அடக்குமுறை, சரியென்றும் தவறென்றும் இருவிதமான கருத்துக்கள் இந்தியர்களிடையே நிலவி வருவதைக் காண்கிறோம்.  “நாம ஊர் விட்டு இங்கே பொழக்க வந்திருக்கோம்… இந்த நாட்டு கவர்மெண்ட்டு போகச் சொன்னா போயிட வேண்டியது தானே? இதிலே என்ன எதிர்ப்பு வேண்டிக்கிடக்கு?” என்பது போன்ற கமெண்ட்டுகளோடு வளைகுடா அரசுகளின் இச்செயல் மிகச் சரிதான் என்று ஓட்டளித்த நபர்கள், நல்ல ஸ்திரமான வேலைகளிலும் உயர் பதவிகளிலும் கை நிறைய சம்பாதிப்பவர்கள்; அதிர்ஷ்டவசமாக இத்தகைய சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதவர்கள்.
 
கடைமட்டத்தில் தொடங்கியுள்ள இந்தச் ‘சுத்திகரிப்பு’ நடவடிக்கை மேல் மட்டத்திலும் தொடர்வதற்கு அதிகக் காலமில்லை. இப்போதே 60 வயதைத் தொட்ட சீனியர்களுக்குக் குடியேறல் (இக்காமா) புதுப்பித்தல் இல்லை என்று சொல்கிறார்கள். அடுத்து, தொழில் மற்றும் வர்த்தகச் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்லும் திறனாளிகள் தவிர்த்து மற்ற பணிகள் மண்ணின் மைந்தர்களுக்கே என்றும் தகவல்கள் வருகின்றன. வெளிநாட்டவர்களுக்கான விசாவிற்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல் துவங்கி டிரைவிங் லைசன்ஸ் வரை கழுத்தை நெரிக்க வைக்கும் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நேரத்தில், நம் அடி மனதில் எழும் கேள்விகளைத் தடுக்க இயலவில்லை. ஆனால், இந்தக் கேள்விகள் மூலம் எழுந்து நிற்கும் “யானைக்கு மணி கட்டுவது யார்?” என்ற கேள்வி அதைவிட பூதாகரமாய் நிற்கிறது.

  • ஒரு நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படுவது, அங்கு பணியாற்றச் சென்றவர்களின் கடமை. இதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தம் நாட்டின் அடிப்படைக் கட்டமைப்புகள் சீரடைந்தவுடன் பிழிந்து போட்ட கரும்புச் சக்கையாய், இதுநாள்வரை அந்த நாடுகளின் முன்னேற்றத்தின் முதுகெலும்பாய் இருந்தவர்கள் மீது இப்படிக் கடுமை செலுத்தி வெளியேற்றுவது எவ்வகையில் நியாயம்?
  • ஸ்பான்ஸரின்கீழ் வேலை செய்யாமல் ஏதோ ஒரு காரணத்திற்காக அவரிடமிருந்து வெளியேறிச் “சட்டத்தை மீறிவிட்ட குற்றத்திற்காக” நாட்டை விட்டுத் துரத்தப்படும் அவல நிலை ஒரு பக்கம் இருக்கட்டும். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வேலைக்குவந்த தொழிலாளி, என்ன காரணத்தால் தப்பித்து ஓடினார் என்று நடுநிலையாக இருதரப்பிலும் விசாரணை மேற்கொண்ட பிறகு, தவறு செய்தவர் பக்கம் நடவடிக்கை எடுப்பதுதானே சரியான அணுகுமுறை?
    • தாய், தாரம், சகோதரிகள் கழுத்தில் கிடந்த கருகமணி / தாலி உட்பட அனைத்தையும் விற்று அடகுவைத்து, டிராவல்ஸ் புரோக்கர் – ஏஜண்ட்டுக்கும் விமான டிக்கெட் என்றும் பணம் கட்டி வளைகுடா கனவில் வரும் தொழிலாளிகள், ரத்தம் சிந்திச் சம்பாதிக்கும் பணத்தில் பெருந்தொகையை உள்நாட்டு ஸ்பான்ஸருக்குக் கப்பம் கட்டும்படியான ஃப்ரீ விஸா (ஆஸாத் விசா) எனும் அடிமை வியாபாரத்தை வளரச் செய்த இத்தகைய ஸ்பான்ஸர்களுக்கு என்ன தண்டனை அளிக்கப் போகின்றன இந்த அரசுகள்?

(நாம் அறிந்த இந்திய டிரைவர் ஒருவர், 800 ரியால்கள் மட்டுமே சம்பளம் தரும் தமது ஸ்பான்ஸர் வீட்டுக் கொடுமை தாங்க முடியாமல், வெளியில் சென்று வேலை செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த அடிமையை “விடுதலை” செய்வதற்காக ஸ்பான்ஸர் கேட்ட கப்பத் தொகை 8 ஆயிரம் ரியால்கள் முதல் 10 ஆயிரம் ரியால்கள் வரை. இந்தக் கடனை அடைக்க எத்தனை மாதங்கள் தனியே உழைக்க வேண்டியிருக்கும் என்பதையும் அந்தக் கடன் தொகை அடைந்த பிறகே அவருடைய குடும்பத்தினருக்காக உழைக்கத் தொடங்க வேண்டும் என்பதையும் சிந்தித்தால் முதுகுத் தண்டு சில்லிடும். இவருக்காவது ஒரு முறையோடு ஆயிற்று. வருடந்தோறும் கப்பம் கட்டும் “கத்தாமா” (பணிப்பெண்கள்) கண்ணீர்க் கதைகள் இங்கே நிறைய உண்டு. இந்நாட்டுக் குடிமகன்களுக்கு மில்லியன் கணக்கில் லாபம் ஈட்டித் தரும் அநியாயத் தொழில் இது என்பதை அரசுகள் “அறியாமல்” போனது துரதிருஷ்டம்) – வாசிக்க: கல்ஃப் ரிட்டர்ன்: http://www.satyamargam.com/597)

இந்தக் கொடுமையெல்லாம் கடைநிலைத் தொழிலாளிகளுக்கு மட்டும் தான் என்றில்லை. படித்துப் பட்டம் பெற்ற மேல்தட்டு அலுவலர்கள் கூட இந்த அடிமை வியாபாரத்தில் சிக்கி வாழ்க்கையில் சில வருடங்களை இழந்துள்ளனர்.

  • இத்தகைய நாடுகளில் இயங்கும் தொழிலாளர்களுக்கான அமைச்சகங்கள் (Ministry of Labor) மற்றும் மனித உரிமை மீறல்பற்றி ஏட்டளவில் பேசும் ஐ.நா, ஸ்பான்ஸர் மீதுள்ள தவறுகளைக் காணும் சூழல்களில் மவுனித்து விடுவது அதன் பாரபட்சத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.
  • நாட்டை விட்டு ஒரு தொழிலாளியை வெளியேற்றும் தகுதிகள் என்னென்ன என்று குவைத் அரசு விளம்பரப் படுத்தியிருக்கும் பட்டியல் வியப்பை ஏற்படுத்துகிறது. கீழே காண்க:
  • காரை சரியான இடத்தில் பார்க் செய்யவில்லை என்றாலும் நாடு கடத்தல்
  • சீட் பெல்ட் போடவில்லை என்றாலும் நாடு கடத்தல்
  • தமது PRO வின் மொபைல் எண் கையில் இல்லை என்றாலும் நாடு கடத்தல்

என்று நீளும் பட்டியல் மிரள வைக்கிறது. இந்தப் பட்டியலின் அடிப்படையில் சிக்கும் அப்பாவிகள் எவரையும், எந்த ஒரு காரணத்தையும் சொல்லி நாடு கடத்தி விட இயலும். இவ்வளவு தூரம் சுற்றி வளைப்பதை விட “வெளிநாட்டவர் என்று சொன்னாலே நாடுகடத்தல்” என்று நேரடியாக அறிவித்திருக்கலாம்.

  • மேற்கூறிய பட்டியலில் குறிப்பிட்டுள்ள சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் உள்நாட்டவர்களா அல்லது பிழைக்கவந்த வெளிநாட்டவர்களா என்று ஆதாரங்களுடன் உள்ள புள்ளி விபரங்களைப் பார்வையிட்டால் விடை என்ன என்று தனியே சொல்லத் தேவையில்லை. விபத்துகளின்போது விசாரணைக்குக் காவல்துறை அழைத்துச் சென்றால் உள்நாட்டவரோடு வெளிநாட்டவர் எவ்வாறு நடத்தப்படுவர் என்பதிலும் ரகசியம் ஏதுமில்லை.

இத்தகைய கெடுபிடிச் சட்டநடவடிக்கை மூலம் கடைநிலை வெளிநாட்டுப் பணியாளர்களைப் பலவந்தப்படுத்தி வெளியேற்றி விட்டாலும் வளைகுடா வசந்தம் வீசப் போவதில்லை என்று உறுதியாகச் சொல்லி விட முடியாது. ஏனெனில் இவ்வாறு வெளியேற்றப்படும் கடைநிலைப் பணியாளர்களால் ஏற்படும் வெற்றிடத்தை உள்நாட்டுப் பணியாட்கள் கண்டிப்பாக நிரப்பப் போவதில்லை. தீயாய்க் கொளுத்தும் வெயிலில் கட்டுமானப் பணிக்கோ, நிரம்பி வழியும் குப்பை கூளங்களை அள்ளவோ அரபு குடிமக்கள், பணியாளர்களாக முன் வரப் போவதில்லை.
 
மேலும், ஓரளவு படித்த அரபு இளைஞர்களும் ஆசிய நாட்டவர்களைப் போன்று எல்லாச் சூழலுக்கும் இயைந்து பணியாற்றும் திறமையும் பொறுமையும் பெற்றவர்களல்லர். சாதாரணமாகவே இவர்களது வேலை நேரம் 3-5 மணி நேரங்களே என்பதையும் கவனத்தில் கொண்டால் இத்தகைய கெடுபிடிச் சட்டங்கள், உள்நாட்டு மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகங்களே அன்றி வேறில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இங்குள்ள ஆட்சியாளர்கள் தங்கள் சுகபோக அதிகாரங்களைத் தக்க வைப்பதற்காகவும் உள்நாட்டுக் கலவரம் – மக்கள் புரட்சி என்ற சிந்தனைகள் குடிமக்களுக்கு வந்து விடாமல் செய்வதற்காகவும் பல்வேறு மானியங்களை அள்ளி வீசுகின்றனர். மேலே சொன்னபடி,  திருமண உதவி, இலவச வீடுகள், இலவச உயர்கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைத் தொடர்ந்து வழங்க வேண்டுமெனில் வெளிநாட்டவர்களின் இருப்பு அவசியம். எனவே, அவர்களைத் துடைத்து விரட்டிவிட்டு,  பெட்ரோலை மட்டுமே நம்பியிருக்கும் உள்நாட்டு உற்பத்தி பெரிதாய் ஏதுமற்ற அரபு நாடுகளால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது என்பதே யதார்த்தம். குடிமக்களுக்கான சலுகைகளுக்குச் சிறிதளவு குறைவு ஏற்பட்டாலும் வளைகுடா வசந்தம் எழுச்சி அடையும் அளவிற்கே இங்கே நிலைமை பலவீனமாக உள்ளது.

இச் சூழலில் இந்திய அரசுக்கு நாம் வேண்டுகோள் விடுப்பது யாதெனில், கோடிக்கணக்கான ரூபாய்களை அந்நியச் செலாவணியாக ஈட்டி, இந்திய நாட்டிற்குப் பெரும் வருவாய்க் கேந்திரமாக இதுநாள் வரை திகழ்ந்த வளைகுடா தொழிலாளர்கள் அடுத்த 10 வருடங்களுக்கு இவ்வாறு கொத்துக் கொத்தாக மூட்டை கட்டி அனுப்பப்படுவது இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் அடியாக அமையும் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்ட நிலையில், உரிய தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதும் – ஆயிரக்கணக்கில் வந்து குவியும் வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்த இளம் முதியோர்களின் மறுவாழ்விற்கான நலத்திட்டங்களை அமைத்து அவர்களை அரவணைப்பதும் இந்திய அரசுக்கு இந்த நிமிடத்திய அவசியமாக உள்ளது.

– அபூ ஸாலிஹா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.