அடிமைத்தனமல்ல… அருட்கொடை!

திறந்து கிடப்பதுதான் சிறந்தது என்றால்
அந்தச் சிறப்பு எம் பெண்டிர்க்குத் தேவையில்லை!

கணவன் காண வேண்டியதைக்
கண்டவனும் காண்பதுதான் சுதந்திரம் என்றால்
என் மனைவி அடிமையாகவே இருக்கட்டும்!

வரைமுறையற்று வாழ்வதுதான் பெண்ணியம் என்றால்
என் சகோதரிக்குப் பெண்ணியம் வேண்டாம்!

உடலைக் கடைவிரித்துதான் உலகை வெல்ல வேண்டுமா?
இல்லை என்பதற்கு அன்னை தெரசா அற்புதச்சான்று!

திறந்து கிடக்கும் பண்டத்தை
ஈக்கள்தான் மொய்க்கும்!

மூடித்திறந்த மலர்களையோ
தேனீக்கள் கூட்டம் மொய்க்கும்!

மேகம் மறைத்தால்தான் வானம் அழகு!
மோகம் மறைத்தால்தான் காதல் அழகு!

சிப்பிக்குள் இருப்பது முத்தின் அருமை!
அங்கம் மறைப்பதில்தான் பெண்ணின் பெருமை!

ஹிஜாப் என்பது அடிமைத்தனத்தின் அடையாளமல்ல;
அது ஓர் அருட்கொடை!

ஓராயிரம் கோடிப் பார்வைகளாயினும்
உட்புக விடாமல் காக்கும் கவசம்!

அபுல் ஹசன் R
9597739200