இன்னுமொரு நிஜம்! (கவிதை)

வளைகுடா நாட்டில்
வாழ்க்கை தேடல்களுக்காக
வாலிபங்கள் இங்கு
விலை பேசப்படுகின்றன!

இல்லை இல்லாள் அருகில்!
இணைவதோ தொலைபேசியில்!
இருதலை கொள்ளி எறும்பாய்

இதயங்களின் துடிப்பு இரட்டிப்பாய்!

தாயகப் பயணம் தந்தது தவிப்பை, மனத் துடிப்பை!
சுமந்து வந்தது நினைவுகளை, எதிர்பார்ப்புகளை!
செலவழித்தது வியர்வைத் துளிகளை!

கொண்டு செல்வது…?

சீரான "செல்வங்கள்" சில
சிறப்புடன் சேர்த்தோம்!
இத்தனை நாள் உழைப்பில் இல்லை,
இடையில் சென்ற விடுப்பில்!

செல்வங்கள் சிரிக்கின்றன,
"
சித்திரத்தில்" – புகைப்பட சித்திரத்தில்!
விசித்திரமாய் வியக்கின்றேன் – காணாமல்

விடுபட்ட செல்வங்களின் வளர்ச்சி கண்டு!

வலிக்கின்றன "சித்திரம்" தடவும் என்
விரல்கள் – காலம் காலமாய்
விசும்பும்
நிழலோடு மட்டுமே பழகிய
விழிகள் இறைஞ்சுவது நிஜத்தை!

வரும் ஒரு நாள்!
வாழ்க்கையை வாழ்வதற்கு!
வசப்படாத மனம்
வசந்தத்திற்கு ஏங்குகிறது!

வளைகுடா நாட்டில்
வாழ்க்கை தேடல்களுக்காக
வாலிபங்கள் இங்கு
விலை பேசப்படுகின்றன!

தேடுகின்ற மனதின் தேம்பல்களுக்கு
தோதாய் மகத்தான மருந்தொன்றை
தேடியலைந்து  பெற்றுக் கொண்டோம்
திருமறையாம் குர்ஆனை ஆய்ந்து பார்ப்பதில்!

இம்மை வாழ்க்கையை மறந்து – மனம்
இலேசாக, வாரத்தில் சில மணித்துளிகளை

செவிசாய்க்கிறோம் நபிமொழிக்கு – சிந்தனையை

சீராக்க, நபிவழியை வேராக்க – "உண்மையான வாழ்க்கைக்கு"!

கவிதை: உம்மு ஹிபா