அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டால் அழிந்து கொண்டிருக்கும் பாலஸ்தீனம்!

{mosimage}பாலஸ்தீனியர்களைப் பட்டினி போட்டுப் பணியவைக்க அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டணி முன்னணியில் உள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு பாலஸ்தீனத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாலஸ்தீன மக்கள் ஹமாஸ் அமைப்பினை அரசு அமைக்கத் தேர்ந்தெடுத்தனர்.

பாலஸ்தீனப் பகுதிகளை சர்வதேச மனிதநேய விதிகளுக்கு முரணாக மண்ணின் மைந்தர்களை விரட்டியடித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேல் அரசுக்கு ஆயுத பணபலமாக  அமெரிக்க இருந்து வருகிறது. இவ்வாறு தங்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலத்தில் அமைந்த இஸ்ரேலை ஹமாஸ் அங்கிகரிக்க மறுத்து வந்தது.

இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்ததால் பாலஸ்தீன அரசுக்கு முறையாக வரவேண்டிய நிதி ஆதாரங்கள் அனைத்தையும் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் தடுத்து அரசு எந்திரத்தை மூச்சுத் திணறவைத்தன. தன் உறுதியால் பாலஸ்தீன மக்கள் நாளுக்கு நாள் பட்டினியால் செத்து மடிவதை விரும்பாத ஹமாஸ் அரசுப் பொறுப்பில் இருந்து விலகி பாலஸ்தீன அதிபராக இருக்கும் மஹ்மூத் அப்பாஸின் ஃபத்தாஹ் கட்சியுடன் இணைந்து தேசிய கூட்டணி அரசு அமைக்க ஒப்புக் கொண்டது.

இரு நாட்களுக்கு முன் இந்த அரசு பதவியேற்றது. இந்த அரசையும் அமெரிக்காவும் இஸ்ரேலும் பிரிட்டனும் அங்கீகரிக்க மறுத்து தடையைத் தொடர்வதாக அறிவித்துள்ளன. பல பாலஸ்தீனர்கள் பிழைப்புக்காக அண்டை நாடுகளுக்கும் செல்ல இயலாத நிலையில் செய்வதறியாது திகைக்கின்றனர். இஸ்ரேலிய நிறுவனங்கள் பாலஸ்தீனர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இயலாதவண்ணம் இஸ்ரேலிய அரசும் கடும் சட்டங்களை இயற்றி உள்ளது.

பாலஸ்தீனர்களில் நிலத்தின் மூலம் வருவாய் முதற்கொண்டு அனைத்து சர்வதேச மானியங்களும் இஸ்ரேல் வழியாகத்தான் பாலஸ்தீனத்தை அடைய முடியும். இந்தத் தடை நீடித்துக் கொண்டிருப்பதால் பாலஸ்தீன அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், காவல்படையினர் மற்றும் மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க இயலவில்லை. மேலும் குழந்தைகள் உண்வின்றி வாடுகின்றனர்.

ஈரான் அதிபர் இஸ்ரேல் என்னும் நாட்டை வரைபடத்திலிருந்து அழிக்க வேண்டும் என்று சொன்னாராம். அதை பல மேற்கத்திய ஊடகங்கள் பலமுறை சொல்லிக் காட்டிவிட்டன. இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகளின் இத்தகைய நெருக்கடி நிலை தொடர்ந்தால் யாரும் சொல்லாமலேயே பாலஸ்தீனம் என்றொரு நாடு அழிந்தேவிடும்.

கட்டுரை: இப்னுஹமீது