இதுவரை சங்பரிவாரங்களின் இரத்த வெறிக்கு இரையான இந்திய முஸ்லிம்களின் நிலையை ஆய்ந்தால், மீரட், பாகல்பூர், மும்பை, குஜராத் போன்ற வடமாநில முஸ்லிம்கள் அந்தத்தப் பகுதியிலேயே பிறந்து, தொழில் செய்து உள்ளூரிலேயே வாழ்ந்து வந்தார்கள். அதேபோல், கோவைக் கலவரத்தில் பாதிப்புக்குள்ளான முஸ்லிம்கள் பெரும்பாலும் தொழில் முதலீட்டாளர்களாகவே இருந்தனர். கொஞ்சம் உயிரிழப்புகளுக்கும் அதிகம் வாழ்வாதார இழப்புகளுக்கும் இலக்காயினர். ஆனால், தஞ்சை முஸ்லிம்களின் நிலையோ அதை விடப் பரிதாபமானது; அவர்கள் உயிர் மற்றும் பொருள் இழப்புகளை அதிகம் சந்திக்கும் ஆபத்திலுள்ளனர்.
தஞ்சைப் பகுதியை ஆண்ட தமிழ் மன்னர்கள் சமயப் பொறையாளர்களாக இருந்து, பக்திமான்களையும் புலவர்களையும் ஆதரித்து வந்துள்ளனர். ஆண்டாண்டுகட்கும் தங்கள் ஆட்சியின் சிறப்பு பேசப்பட வேண்டும் என்பதற்காக, தஞ்சை மாவட்டம் முழுக்கப் பரவலாகப் கோவில்களையும் வழிப்போக்கர்கள் இளைப்பாறும் சத்திரங்களையும் அன்னதானச் சாவடிகளையும் கட்டினர்.
சமயப்பற்றுள்ள தமிழ் மன்னர்களின் பக்தியைப் பயன்படுத்தி ப் பலன் பெறும் நோக்கில், கேரளாவிலிருந்து இடம் பெயர்ந்த பிராமணப் பண்டிதர்களுக்கு தஞ்சை மன்னர்கள் சைவர்களாக இருந்ததும் வசதியாகப் போய்விட்டது. கடவுளுக்கு வேதம் மட்டும் ஓதுவதற்காகவே பிரம்மனின் தலையிலிருந்து படைக்கப் பட்டதாகக் கதைகட்டிய புராணப் புரட்டுகளை நம்பிய தஞ்சை மன்னர்கள், மண்ணின் மைந்தர்களான உள்ளூர் தமிழ்ப் பூசாரிகளைவிட கேரளாவிலிருந்து புலம்பெயர்ந்த பிராமணப் பண்டிதர்களுக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டு, பிராமணர்கள் கோவில்களை ஆக்கிரமித்தனர். கேரள பிராமணர்களின் வரவால் உள்ளூர் பூசாரிகள் ஊரெல்லைக்கு உடுக்கையுடன் விரட்டப்பட்டனர். இவ்வாறாக பிராமணர்கள் ஆக்கிரமித்த கோவில்களின் அண்மையில் தங்குவதற்காக உண்டாக்கப் பட்டவையே “அக்ரஹாரங்கள்” என்ற பிராமண வசிப்பிடங்கள்.
பிராமண அக்ரஹாரங்கள் சோபை இழந்ததற்கு, தஞ்சை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களைக் கட்டிக் கொண்டதை ஒப்பிட்டு, பள்ளிவாசல்களால் அக்ரஹாரங்கள் அழிந்தது போன்ற மாயையை விஜய பாரதம் எனும் விஷ(ம)ப் பத்திரிக்கை சமீபத்தில் எழுதி இருந்தது. (சென்னை புத்தக விற்பனைக் கண்காட்சியிலும் கூட இந்தகைய விஷமங்களை இலவசப் பிரசுரங்களாக விநியோகித்து, முடிந்த மட்டும் முஸ்லிம்களை ஒழித்துக் கட்டும் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளனர்.)
அக்ரகாரங்கள் அழிந்ததற்குப் பிரதானக் காரணம், 1990-2000 வருடங்களில் இந்தியக் கணினி மென்பொருள் வல்லுனர்களுக்கான உலகளாவியத் தேவையைச் சரியாகப் பயன்படுத்தி, உயர் கல்விகளில் தேர்ச்சி பெற்றிருந்த பிராமணர்கள், தங்கள் அக்ரஹாரத்து ‘ஆத்து’களை விற்று விட்டு, அமெரிக்கா-ஐரோப்பா என ஜாகையை மாற்றிக் கொண்டு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தனர். அமெரிக்காவில் இருக்கும் இந்திய மென்பொருள் வல்லுனர்களில் பெரும்பாலோர் உயர் சாதி இந்துக்களே! எஞ்சி இருந்த ‘கடல்தாண்டக் கூடாத’ பிராமணர்களும் தங்கள் மணப்பெண்களுக்கு “அமெரிக்கவாழ் மணமகன் தேவை!” என்று திருமண வரன்-விளம்பரங்களை ஹிண்டுவிலோ எக்ஸ்பிரஸிலோ கொடுத்து, முடிந்தவரை அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்கள்.
ஆக, அக்ரஹாரங்கள் வணிக வளாகங்களாக மாறியதற்கு அமெரிக்க மோகமே காரணம். பிராமணர்களால் கைவிடப்பட்ட அக்ரஹாரங்களுக்காகக் கவலைப்படும் மலர் மன்னன், அமெரிக்காவில் குடும்பத்துடன் தங்கி விட்ட ‘டமில்’ பிராமணர்களை மீண்டும் தஞ்சைக்கே வரவழைக்க முயலாமல், முஸ்லிம்களுக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் செய்வதன் மூலம் தன்னை ஒரு ஆசார மதவெறியாக இனங்காட்டிக் கொண்டுள்ளார்.
ஹிந்துஸ்தானம் முழுவதையும் ஹிந்துகலாசாரத்தையும் சமய நம்பிக்கை, அதனை ஒட்டிய சம்பிரதாயங்களையும் பாதுகாப்பதற்கான பிரத்தியேக ஸ்தலமாக ஐக்கிய நாடுகள் அவை ஒருமித்து பிரகடனம் செய்ய வேண்டும் என்று சுவாமி தயானந்த சரஸ்வதி சொன்னார்கள். இதுவரை நடந்த ஆபிரகாமிய மத மாற்றங்கள் நடந்துபோனவையாக இருக்கட்டும். இதுவரை நிறுவப்பட்ட ஆபிரகாமிய வழிபாட்டுத் தலங்கள் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் ஹிந்துஸ்தானத்தில் புதிதாக மேலும் மேலும் மத மாற்றங்களோ , பிற சமய வழிபாட்டுத் தலங்களோ நேராதவாறு ஐக்கிய நாடுகள் அவையேபார்த்துக்கொள்ள வேண்டும் என்று சுவாமிஜி விருப்பம் தெரிவித்தார்கள் – மலர்மன்னன் |
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா உடன்படிக்கையின்படி உலக நாட்டுமக்கள் தாங்கள் விரும்பிய மதத்தவராக இருக்கவும், தேவைப்பட்டால் அதற்கான வழிபாட்டுத்தலங்களைக் கட்டிக் கொள்ளவும் அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இதை ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக உள்ள இந்தியாவும் ஒப்புக் கொண்டிருக்கும்போது சுவாமி தயானந்த சரஸ்வதியின் கோரிக்கை நகைப்பிற்கு உரியது .
மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் திராணியுள்ளதாக இந்து மதம் என மலர்மன்னன் போன்ற துவேச எழுத்தாளர்களால் சொல்லப்படும் பார்ப்பனீய சமயம், மதமாற்றத்தைக் கண்டு பதறுவது ஏனோ? வடநாட்டிலாவது மொகலாயர்களால் ஈர்க்கப்பட்ட, ஆதிக்கவெறிக்குள்ளான கடைசாதி இந்துக்கள் முஸ்லிம்களாக மதம் மாறினர். ஆனால், மொகலாயரின் இந்தியப் பேரரசில் வந்திராத தஞ்சையில் இஸ்லாம் பரவிய வரலாற்றைப் பின்னோக்கினால், பிராமண ஆதிக்கத்திலிருந்து இந்துக்கள் விடுபட இஸ்லாம் அருமருந்தாக இருந்ததை அறியலாம்.
மேற்கொண்டு மதமாற்றங்கள் நிகழாமல் இருப்பது எஞ்சியுள்ள இந்துக்களையும் சமமாக மதிப்பதில் தான் இருக்கிறது என்பதை சுவாமி தயானந்த சரஸ்வதிக்கு மலர்மன்னன் எடுத்துச் சொல்லி இருக்கலாமே! பாபர் மஸ்ஜித் இடிப்பு, குஜராத் இனச்சுத்திகரிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு தேவையற்ற இரத்தக்களரிகளில் கவனம் செலுத்தியதை விட , முன்னரே இதனைச் செய்திருந்தால் சமீபத்தில் முப்பது இலட்சம் தலித் சகோதரர்கள் பவுத்த மதம் தழுவி இருக்க மாட்டார்கள் என்ற இரகசியத்தை சங் பரிவாரங்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கலாமே!
தஞ்சை மாவட்ட முஸ்லிம்களில் பலர் மனைவி -மக்களை விட்டுப் பிரிந்து சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் நீண்டகாலம் பணியாற்றும் நிர்ப்பந்தத்தில் உள்ளனர் . பெரும்பாலான குடும்பங்கள் ஆண்களின் பாதுகாப்பின்றியே இருக்கின்றன. இதுகாலம் வரை தாயாய், பிள்ளையாய், சகோதரர்களாய்ப் பழகி வந்த இப்பகுதி இந்துக்களின் மீதான நட்பாலும் நம்பிக்கையினாலும் ஆண்கள் வெளிநாட்டில் சம்பாதிக்கச் சென்றாலும் பெண்கள் அச்சமின்றி இருந்து வருகின்றனர் . இந்த ஒற்றுமைதான் சங் பரிவாரங்களுக்குக் கண்ணையும் கருத்தையும் உறுத்துகிறது என்பது சொல்லிப் புரிய வேண்டிய ஒன்றல்ல.
மேலும், முஸ்லிம் அமைப்புகள் பேரணி, ஊர்வலம், மாநாடு ஆகியவற்றிற்கு, தமிழகத்தின் மத்தியிலுள்ள தஞ்சை மாவட்டத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். கடற்கரையோரப் பகுதிகளிலிருந்தும் திருச்சி-தஞ்சை மாவட்டங்களில் உள்ள கிராம முஸ்லிம்களும் எளிதில் கலந்து கொள்ளும் தொலைவில் தஞ்சை உள்ளதே இதற்கு முக்கியக் காரணம் . முஸ்லிம்கள் ஒன்று கூடுவதும், இந்து-முஸ்லிம் மக்கள் அமைதியாக இருப்பதும் பொறுக்காத சங்பரிவாரங்களின் குறிக்கு தஞ்சை முஸ்லிம்கள் இலக்காகியுள்ளதற்கான பிரதானக் காரணம்.
முன்பு ஒன்றாக இருந்த தஞ்சை மாவட்டம், தஞ்சை-நாகை-திருவாரூர் என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், தொழில், திருமண உறவுகளால் இணைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் தமிழக முதல்வரின் சொந்த மண்ணில் இந்து-முஸ்லிம் கலவரத்தை உண்டு பண்ணினால் கணிசமான இந்து ஓட்டு வங்கியை தி.மு.கவுக்கு எதிராகத் திருப்பி ஆதாயம் அடையலாம் என்ற திட்டத்தில் தஞ்சை முஸ்லிம்களுக்கு எதிரான விஷமப் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டு இருக்கின்றன.
தமிழக முஸ்லிம் அமைப்புகள் அரசியல் காரணங்களைப் புறந்தள்ளி , சங் பரிவாரங்களின் சூழ்ச்சித் திட்டத்தால் ஏற்படவிருக்கும் பேராபத்தை எதிர் நோக்கியுள்ள தஞ்சைப் பகுதி முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஒன்றிணைய வேண்டிய நேரம் இது!
தொடர் நிறைவடைந்தது.
ஆக்கம்: N. ஜமாலுத்தீன்
< முன்னுரை | பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 >