வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் தன் நெஞ்சார்ந்த இனிய ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’
மெய்யை உணர்த்தும் ரமளானே!
உணவே இருந்தும் உண்ணவில்லை
..உண்மை அன்றி உரைக்கவில்லை
நினைவில் கொண்டோம் இறையவனை
..நேரம் வீணில் போக்கவில்லை
உணர்வில் இலங்கும் வாய்மையிலே
..உலகம் உய்யும் எண்ணமதே
மணக்கும் வணக்க வழிபாடு
..மகிழ்வாய்ப் பூத்த ரமளானே..!
நாவை அடக்கும் பயிற்சியிலே
..நன்மை விளையக் கண்டிருந்தோம்
நோவு கண்ட உள்ளமுமே
..நலமே காண வாய்த்ததுவே!
மேவும் இறைமை உணர்வுடனே
.. மேலும் மேலும் செல்வதற்கே
ஆவல் கூட்டும் வெற்றியினை
.. அழகாய் ஈந்த ரமளானே!
ஆன்மா வெல்லும் வழியிங்கே
…ஆன்ற மறையை ஏற்பதுவே
நோன்பு செல்லும் இச்செய்தி
…நெஞ்சில் வைத்தோம் நோக்கமென.
தான்மை தொலைத்த இறையடியார்
…தன்மை அறிந்த இறைவலிமை.
மேன்மை எல்லாம் பணிவதிலே
…மெய்யை உணர்த்தும் ரமளானே!
கண்ணின் மணியாய் நோன்பளித்த
…கருத்துப் பாடம் உளத்தூய்மை
மின்னி மறைந்து போகாமல்
…மீத காலமும் இறைவழியில்
எண்ணி எண்ணி வாழ்ந்துவர
…எல்லாம் நலமே ஈருலகில்
வண்ண வாழ்வும் மறுமையிலே
…உறுதி செய்வோம் பெருநாளில்.
கவிதை: இப்னு ஹம்துன்
http://www.satyamargam.com/author/fakhrudeen/