இன்டர்வியூ!

ந்த இண்டர்வியூவிற்கு வந்ததற்கு நன்றி. இப்போது நீங்கள் போகலாம். எங்கள் முடிவை விரைவில் உங்களுக்குத் தெரிவிப்போம்.” கடைசி ஆளை அனுப்பிவிட்டு, தன் இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தார் எம்ஜே எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் எம்.டி. முஹம்மது இல்யாஸ்.

மூச்சை நன்கு இழுத்துப் பெருமூச்சாக வெளியேற்றினார். மேசையில் மூடி வைக்கப்பட்டிருந்த கிளாஸிலிருந்து கொஞ்சம் நீர் அருந்தினார்.

“என்ன முடிவு பண்ணியிருக்கீங்க ஹாஜியாரே? யாரை செலக்ட் பண்ணப் போறீங்க?” என்று கேட்டார் அருகில் அமர்ந்திருந்த ஹஸன்.

“அதை நான் பிறகு சொல்றேன். உங்க கருத்து என்னன்னு நீங்க மொதல்ல சொல்லுங்க ஹஜரத்து” என்றார் இல்யாஸ்.

ஹஜரத்து என்று அழைக்கப்பட்ட ஹஸன், புறநகர் தொழிற்பேட்டை ஒன்றில் உள்ள பள்ளியின் துணை இமாம். மார்க்கக் கல்வியோடு பல்கலைக்கழகப் பட்டமும் பெற்ற துடிப்பு மிக்க இளைஞர். ஹதீஸ் தொடர்பாக சில ஆய்வுகளும் மேற்கொண்டிருக்கிறார். அவருடைய ஆய்வுப்பணிகளுக்கு வசதியாக இருக்கும் என்பதற்காகத் தன் அலுவலகத்திலேயே ஓர் இடம் ஒதுக்கிக் கொடுத்திருந்தார் பள்ளிவாசல் நிர்வாகக்குழுவின் தலைவருமான இல்யாஸ்.

இருவருக்குமிடையில் வயது வேறுபாடு இருந்தபோதிலும் ஒரு மரியாதை கலந்த நட்பு நிலவி வந்தது. இவரை அவர், ‘ஹாஜியார்’ என்றும் அவரை, இவர் ‘ஹஜரத்து’ என்றும் அழைப்பதில் ஒரு நெருக்கம் தெரியும்.

இல்யாஸ் ஹாஜியாரின் நிறுவனத்தில் எக்ஸ்போர்ட் மேனேஜர் பணிக்கு அன்று இண்டர்வியூ நடந்தது. அதில் ஒரு பார்வையாளராக பங்கேற்கும்படி ஹஸனை அழைத்திருந்தார் இல்யாஸ்.

“சரி, நான் சுருக்கமா சொல்லிடுறேன். 20 வருடமா உங்களுடைய அயராத உழைப்பில் உருவான தொழில் இது. இது நாள் வரை இதன் எல்லாப் பொறுப்புகளையும் நீங்களே சுமந்து வந்திருக்கின்றீர்கள். உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். இப்போது இன்னொரு பார்ட்னருடன் இணைந்து ஒரு தொழிற்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அந்த வேலையில் நீங்கள் அதிக நேரம் ஈடுபட வேண்டியுள்ளது. உங்களுக்கு மிகவும் பிரியமான இந்த நிறுவனத்தின் வேலைகளில் உங்களால் முன்பு போல போதிய கவனம் செலுத்த முடியவில்லை. அதனால இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த, உங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து உரிய நேரத்தில் அவற்றை நிறைவேற்றித் தர ஒரு மேலாளர் தேவை” என்று சொல்லி நிறுத்தினார் ஹஸன்.

“சரிதான். மேல சொல்லுங்க” என்றார் இல்யாஸ்.

“நீங்கள் எதிர்பார்க்கும் மேலாளர் உங்களின் இந்த ஏற்றுமதித் தொழிலில் நல்ல அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். உங்கள் வாடிக்கையாளர்களோடு நல்லுறவைத் தக்க வைப்பவராக இருக்க வேண்டும். தொழிலில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களுக்கு விரைந்து நல்ல தீர்வு காண்பவராக இருக்க வேண்டும்.”

“இதுவும் சரிதான்”

“உங்கள் எம்ப்ளாய்மெண்ட் ஏஜன்சியிலிருந்து இன்று ஐந்து பேர்களை அனுப்பி இருந்தார்கள். அதில் இருவர் புதிய பட்டதாரிகள். திருப்திகரமான கல்வித்தகுதி உள்ளவர்கள். ஆனால் இருவரிடமும் போதுமான முன் அனுபவம் இல்லை. வாய்ப்புக் கொடுத்தால் விரைவில் கற்றுக் கொள்வார்கள் என்று தெரிகிறது. ஆனால் அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான அவகாசம் உங்களுக்கு இல்லை. எனவே இவர்களை நான் இப்போதைக்கு 4-ஆம் 5-ஆம் இடங்களில் வைக்கின்றேன்.

“மற்ற மூவரும் கல்வித்தகுதியுடன் மேலாளர்களாக பணியாற்றிய அனுபவமும் உள்ளவர்கள். அதில் இருவர் உங்கள் துறை அல்லாத வேறு வேறு துறைகளில் அனுபவமிக்கவர்கள். எனவே இவர்களை 2-ஆம் 3-ஆம் இடங்களில் வைக்கின்றேன்.

“கடைசியாக உள்ளவர் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு மிகச்சரியாக பொருந்துகிறார். உங்கள் நிறுவனத்தைப் போலவே உள்ள இன்னொரு நிறுவனத்தில் பணி புரிகிறார். அங்குள்ள சம்பளம் போதவில்லை என்பதால் வேறு இடம் தேடிக் கொண்டிருக்கிறார். அதனால் இவரை முதலிடத்தில் வைக்கின்றேன்” என்று முடித்தார் ஹஸன்.

“சபாஷ் ஹஜரத்து. மிகச் சரியான அவதானிப்பு. ஒரு ஹெச் ஆர் மேனேஜர் செய்ற வேலையை நீங்க செஞ்சுட்டீங்க. என்னுடைய தேவை என்ன என்பதை புரிந்துக் கொண்டது முதல் படி. இன்று இண்டர்வியூவில் கலந்து கொண்டவர்களின் கல்வித் தகுதி மற்றும் அனுபவங்களை மதிப்பீடு செய்தது இரண்டாம் படி. அதன் அடிப்படையில் அவர்களை வரிசைப் படுத்தியது மூன்றாம் படி. ஒரு நிறுவனத்திற்கான வேலை நியமனங்கள் செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய முக்கியமான படி நிலைகள் இவை” என்று ஹஸனைப் பாராட்டிய இல்யாஸ் “ஆனால் நீங்கள் முதலிடத்தில் வைத்த அந்த நபரை நான் தேர்ந்தெடுக்கப் போவதில்லை” என்றார்.

“அப்படியா? ஏன்?” என வியப்புடன் கேட்டார் ஹஸன்.

“எத்திக்ஸ்!” என ஒரே வார்த்தையில் சொன்னார் இல்யாஸ்.

“கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்னா புரிஞ்சுக்குவேன்”

“என்ன மாதிரி விளக்கம் வேணும்னு சொல்லுங்க.. S, M, L or XL?” என்று கேட்டார் இல்யாஸ் சிரித்துக் கொண்டே.

அவரது கேள்வியைப் புரிந்து கொண்ட ஹஸன், தன் கடிகாரத்தைப் பார்த்தபடி “ளுஹருத் தொழுகைக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. நீங்க XL விளக்கத்துக்கே போகலாம்” என்றார்.

“XL கேட்ட நீங்க பிறகு அதற்காக வருத்தப்படக் கூடாது சரியா?” என்ற பீடிகையுடன் இல்யாஸ் சொல்லத் தொடங்கினார்.

“முதலாளித்துவத்திலிருந்து இதைத் தொடங்க வேண்டும். முதலாளித்துவத்தில் தொழில் நிறுவனங்களின் அடிப்படையான நோக்கம் லாபம் சம்பாதிப்பதுதான். லாப நோக்கம் இல்லாமல் செயல்படுவதென்றால் அது அரசு நிறுவனமாகவோ அல்லது சேவை நிறுவனமாகவோ இருக்க வேண்டும். அவற்றைப் பற்றி நாம் இப்போது பேசவில்லை.

“தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் அனைத்தும் இந்த அடிப்படை நோக்கத்தை மையப்படுத்தியே அமைந்திருக்கும். இவர்களின் அன்றாட நடவடிக்கைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. லாபம் பெறுவதற்கான நடவடிக்கைகள்.
  2. செலவு மற்றும் நட்டங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள்.
  3. சட்டங்கள், விதிமுறைகள் சார்ந்த நடவடிக்கைகள். உரிமங்கள், வருமான வரி, தணிக்கை போன்ற நடவடிக்கைகள் இந்த வகையைச் சார்ந்தவை.

“இவை தவிர நான்காவதாக பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பெரும் நிறுவனங்களுக்கென சில தனித் தன்மையான நடவடிக்கைகள் உண்டு. அவற்றைப் பற்றிப் பிறகு சொல்கிறேன்.

“Ethics.. தமிழ்ல சொல்லணும்னா நெறிமுறைகள், இந்த நான்கு வகையான நடவடிக்கைகளுக்கும் அப்பாற்பட்டவை. நல்ல காரியம்தான். செய்தால் நல்லது. ஆனால் அதன் மூலம் எந்த வித உடனடி உலகாதாயங்களும் கிடைக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. இதைச் செய்யலேன்னாலும் யாரும் உங்களைக் கேள்வி கேட்க மாட்டாங்க.

“நேர்மை, வாக்கு மீறாமை, வெளிப்படைத் தன்மை, நியாயமாக நடந்து கொள்ளுதல், பிறர் நலனில் அக்கறை காட்டுதல், கண்ணியம் பேணுதல், பிறருக்கு மதிப்பளித்தல், சமூகப் பொறுப்புணர்வு, செய்யும் வேலையை திறம்படச் செய்தல்.. இவையெல்லாம் எத்திக்ஸ் என்பதற்குச் சில உதாரணங்கள்.

“பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வட்டாரத்தில் இந்த எத்திக்ஸ் எனும் நெறிமுறைகள் அதிகம் பேசப்படாத ஒன்றாக இருந்தது – ‘என்ரான்’ விவகாரம் ஏற்படும் வரை”

“அது என்ன ‘என்ரான்’ விவகாரம்?”

“என்ரான் என்பது அமெரிக்காவின் பெரு நிறுவனங்களுள் ஒன்று. எண்ணை, இயற்கை எரிவாயு, மின்சாரம், தொலைத் தொடர்பு, காகிதம் எனப் பல துறைகளிலும் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். ஆண்டு வருமானம் 100 பில்லியன் டாலர்களுக்கும் மேல். அதன் நிறுவனங்களில் 29,000 பணியாளர்கள் பணி புரிந்து கொண்டிருந்தார்கள்.

“ஆனால் ‘பேருதான் பெத்த பேரு’ என்பது போல வெளிப் பகட்டுதான் அலங்காரமாக இருந்தது. நிறுவனத்தின் நிதி நிலைமை அதற்கு நேர் மாற்றமாக இருந்தது. கடன்கள் தாறுமாறாக அதிகரித்திருந்தன. ஆனால் சொத்துகளின் மதிப்பு சொல்லும்படி இல்லை. எனவே புதுமையான innovative accounting முறைகளைப் பயன்படுத்தி நிறுவனத்தின் சொத்து மதிப்புகளைப் பன் மடங்காகப் பெருக்கி வைத்திருந்தார்கள். இல்லாத லாபங்களை இருப்பதாகக் கணக்கெழுதி வைத்திருந்தார்கள். அதற்காக சட்டங்கள், விதிமுறைகளில் இருந்த ஓட்டைகள், இண்டு இடுக்குகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டார்கள்.

“ஒரு நிமிஷம்..” என்று குறுக்கிட்டார் ஹஸன். “லாபத்தை குறைத்துக் காட்டினார்கள் என்றால்கூட வரி ஏய்ப்பிற்காக அப்படிச் செய்தார்கள் என்று சொல்லலாம். ஆனால் இவர்கள் இல்லாத லாபத்தை இருப்பதாகக் கணக்கெழுதினார்கள் என்கின்றீர்கள். ஏன் அப்படிச் செய்தார்கள்? இதனால் யாருக்கு என்ன பயன்?”

“சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குத்தான் நீங்கள் சொல்வது பொருந்தும். என்ரான் போன்ற பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பெரு நிறுவனங்களின் நிலைமையே வேறு. அவர்களின் பங்கு மதிப்புச் சரிந்து விடாமல் கட்டிக் காப்பது அவர்களின் தலையாயக் கடமைகளுள் ஒன்று.

“என்ரானின் நிதி நிலைமை படு மோசமாக இருந்தது. உள்ளதை உள்ளபடி அவர்களின் பேலன்ஸ் ஷீட்டில் பதிந்து அறிக்கை தயாரித்தார்களென்றால் அறிக்கை வெளியான அடுத்த விநாடியே அவர்களின் பங்கு மதிப்புத் தடாலெனச் சரிந்து விடும். போட்டியாளர்கள் நிறுவனத்தைக் கைப்பற்றிவிடக் கூடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காகவே அத்தனை தில்லுமுல்லுகளும் செய்தார்கள்.

“கடைசியில் என்ன ஆச்சு?”

“நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருந்த ஒரு பெண்மணிக்கு இந்த விவரங்கள் தெரிய வந்தபோது அவரால் சும்மா இருக்க முடியவில்லை. நிறுவனத்தின் தலைவர் கென்னத் லே-யைச் சந்தித்து எச்சரிக்கை செய்ததெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கானது. இருந்தாலும் விவகாரம் புகைய ஆரம்பித்துப் பற்றிக் கொண்டது. வழக்கு, விசாரணை எல்லாம் முடிந்து பார்த்தபோது ‘என்ரான்’ என்ற அந்த நிறுவனமே இல்லாமல் ஆகிவிட்டது. கடைசி நான்கு ஆண்டுகளில் மட்டும் பங்கு முதலீட்டாளர்களின் பணம் 74 பில்லியன் டாலர்கள் காற்றில் கரைந்து போனது.

“என்ரான் நிர்வாகத்தின் மீது சுமத்தப்படும் முதன்மையான குற்றச்சாட்டு, கணக்கு வழக்குகளில் தில்லுமுல்லு செய்தார்கள் என்பதுதான். (Accounting Fraud). எளிய வார்த்தைகளில் சொல்வதென்றால் உண்மையை மறைத்தல், வெளிப்படைத் தன்மை இன்மை, வாக்கு மீறல், நம்பிக்கை மோசடி. இவையெல்லாம் Ethics எனும் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறியதால் ஏற்பட்ட விளைவுகள்.

“இதுபோல கணக்கு வழக்குகளில் முறைகேடு நடந்தால் அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு அந்த நிறுவனத்தின் ஆடிட்டர்களுக்கு உண்டு. ஆனால் என்ரான் நிறுவனத்தின் ஆடிட்டர்களாக இருந்த ஆர்தர் ஆண்டர்ஸன் என்ற நிறுவனம் என்ரானின் குற்றத்தில் பங்காளிகளாக இருந்தார்கள் என்பது ஒரு நகைமுரண்.

“உலகின் ஆகப்பெரும் தணிக்கை நிறுவனங்களின் பட்டியலில் முதல் 5 இடங்களில் இருந்த நிறுவனங்கள் BIG5 என்று அழைக்கப்பட்டன. இந்த 5-ல் ஒன்றாக இருந்த நிறுவனம் ஆர்தர் ஆண்டர்ஸன். உலகெங்கிலும் பல நாடுகளிலும் கிளைகள், பல்லாயிரக்கணக்கில் ஊழியர்கள், பில்லியன் டாலர்களில் ஆண்டு வருமானம் எனப் பேருடனும் புகழுடனும் இருந்த நிறுவனம் அது.

“என்ரான் நிறுவனத் தணிக்கைக்கு பொறுப்பாளராக இருந்த ஆ.ஆ.-வின் பார்ட்னர் என்ரான் நிர்வாகம் செய்த கோளாறுகளைக் கண்டுகொள்ளாமல் இருந்ததோடு மட்டுமல்லாமல் விவகாரம் புகைய ஆரம்பித்தபோது என்ரானின் கோப்புகள் பலவற்றை அழிப்பதற்கும் உதவி செய்திருக்கிறார். தடயங்களை மறைக்கின்றார்களாம்.

“என்ரான் எனும் ஒரு கிளையன்ட் விஷயத்தில் தணிக்கையாளர்களுக்கான தொழில் தர்மத்தையும் நெறிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்ட காரணத்தால் ஆர்தர் ஆண்டர்ஸன் என்ற அந்தப் பெரும் நிறுவனம் முற்றிலும் அழிந்து போனது. BIG5 இப்போது BIG4 ஆகி விட்டது.

“இந்த விவகாரத்திற்குப் பிறகே எத்திக்ஸின் முக்கியத்துவம் உலகெங்கிலும் கார்ப்பரேட் வட்டாரங்களில் பேசு பொருளானது. நான்கு வகையான நடவடிக்கைகள் பற்றி முன்பு சொன்னேனே, அவற்றோடு இந்த எத்திக்ஸ் ஐந்தாவது நடவடிக்கையாக ஆனது.”
“மிக அதிக விலை கொடுத்து இந்த எளிய நெறிமுறைப் பாடங்களை கார்ப்பரேட் உலகம் கற்றுக் கொண்டது என்கிறீர்கள்” என்று புன்னகைத்தார் ஹஸன்.

“உண்மைதான். அதுதான் முதலாளித்துவம். லாபம் சம்பாதித்தல் என்ற அடிப்படை நோக்கத்தை அடைய என்ன தேவையோ அந்த நடவடிக்கைகளையும் அதன் தொடர்பாக சட்டபூர்வமாக கட்டாயமாக்கப்பட்ட நடவடிக்கைகளையும் மட்டும் மேற்கொண்டால் போதும். மற்ற எல்லாமே தேவையில்லாத extra luggage-தான்.

“என்ரான் விவகாரத்திற்குப் பிறகு அமெரிக்காவிலும் வேறு பல நாடுகளிலும் accounting மற்றும் auditing-கான விதிமுறைகளைக் கடுமையாக்கினார்கள். புதிய சட்டங்கள் இயற்றினார்கள். இதனால் எத்திக்ஸ் குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. என்ரானுக்குப் பிறகு நடந்த பல corporate fraud-களையும் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் இது போன்ற தில்லுமுல்லுகள் நடக்காமல் முற்றிலும் தடுக்க முடிந்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

WorldCom (2002)
Tyco (2002)
HealthSouth (2003)
Freddie Mac (2003)
AIG (2005)
Lehman Brothers (2008)
Bernie Madoff (2008)

“இவையெல்லாம் என்ரானுக்குப் பிறகு வெளிப்பட்ட corporate scandal-கள். இவற்றில் பெரும்பாலானவை என்ரானைப் போலவே accounting fraud-கள்.”

“அப்படின்னா, இது போன்ற தில்லுமுல்லுகள் நடக்காமல் தடுக்க வழியே இல்லையா?”

“முற்றிலும் தடுக்க முடியாவிட்டாலும் கணிசமாகக் குறைக்க ஒரு வழி இருக்கிறது. ஆனால் முதலாளித்துவம் அதை ஒப்புக் கொள்ளாது”

“அது என்ன வழி?”

“எத்திக்ஸ் எனும் நெறிமுறைகளுக்கு முதலிடம் கொடுக்கும் நிலை ஏற்பட வேண்டும். லாபம் சம்பாதிப்பதைவிடவும், பங்கு மதிப்பைக் கட்டிக் காப்பதைவிடவும் நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

“இது போன்ற நிலைப்பாட்டை எடுப்பதைத்தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது. இஸ்லாமிய வழிகாட்டல்படி வியாபாரத்தில் லாபம் சம்பாதிப்பதைவிடவும் நெறிமுறைகளைப் பேணுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். லாபம் சம்பாதிப்பதே தவறு என்பதல்ல இதன் பொருள். ‘நெறிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கி வியாபாரம் செய்து அதன் மூலம் லாபமடையுங்கள்’ என்பதுதான் இஸ்லாமின் நிலைப்பாடு.

“இது ஒரு பெரிய டாபிக். இப்போ ளுஹர் தொழுகைக்கு நேரமாச்சு. வாங்க, போகலாம்”

“நீண்ட விளக்கத்திற்கு நன்றி ஹாஜியாரே. கதையின் ஆரம்பத்தில் போட்ட விடுகதைக்கு நீங்க இன்னும் விடை சொல்லலியே” என்று நினைவூட்டினார் ஹஸன்.

“ஓ..அதுவா? நீங்கள் முதலிடத்தில் வைத்த நபர் எங்கள் நிறுவனத்தைப் போலவே உள்ள இன்னொரு நிறுவனத்தில் வேலை செய்கிறார் அல்லவா? இன்டர்வியூவில் அவர் சொன்ன ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியவில்லை. அந்த நிறுவனம் எங்களுக்கு நேரடி போட்டியாளர்கள் அல்ல என்றாலும் ஒரே மாதிரியான வியாபாரம் செய்கிறோம். அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அனைவரையும், அவர்கள் வாங்கும் சரக்கு, அதன் விலை அனைத்தும் தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் அந்த விபரங்களை எங்கள் நிறுவன வியாபாரத்திற்குப் பயன் படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் சொன்னார். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?” என்று கேட்டார் இல்யாஸ்.

“ஆமாம்.. அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. யோசித்துப் பார்த்தால் தப்பு போலத்தான் தெரிகின்றது” என்றார் ஹஸன்.

ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது அதில் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது! என்பது நபி மொழி. நான் அந்த நபரை என் நிறுவனத்தில் சேர்த்து, அவர் சொன்னது போல வியாபாரம் செய்ய அனுமதித்தேன் என்றால் நான் அந்த நிறுவனத்தின் வியாபாரத்தில் குறுக்கீடு செய்வது போலாகி விடும். அந்த நிலை ஏற்படுவதை நான் விரும்பவில்லை. அதனால் தான் அவரை நான் தேர்ந்தெடுக்கவில்லை.”

“சரிதான். வேறு யாரை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்?”

“எம்ப்ளாய்மெண்ட் ஏஜன்சியில் சொல்லி இன்னும் சில கேன்டிடேட்ஸ் அனுப்பச் சொல்லணும். பிறகுதான் முடிவெடுக்கணும்.” என்றபடி பள்ளிக்குப் புறப்பட எழுந்தார். ஹஸனும் எழுந்தார்.

oOo