இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!

இறைத்தோழர்
இபுறாஹிம்நபி
உள்ளிருந்து
ஒளிர்ந்த உண்மையால்
நம்ரூதின்
நெருப்புக்கரங்களும்
அணைக்க இயலாத
நன்னெறிப் பேரொளி
அகிலமெங்கும் படர்ந்தது
அன்பின் மார்க்கமாய்!

அன்று அது
சிந்தனையாய் பூத்த
இறைமையின் தேட்டம்.

இன்று வெடிக்கும்
சிந்தனைப் பருக்களிலோ
தான்மையெனும் சீழின் ஓட்டம்

அன்று
கற்களைச் சிதறடித்த
கத்தி
கழுத்தை அறுப்பதில்
தோற்றுப் போனது
ஆன்மிக உயிர்
அங்கே குடிகொண்டிருந்ததால்!

‘வந்துவிட்டேன், இறைவா
இதோ வந்துவிட்டேன்’
அன்று முழங்கிய
ஓர் அர்ப்பணிப்பின் குரல்
காலந்தோறும்
கணீரென்று ஒலித்தபடியிருக்க…

இன்றோ
நாவெனும் வாளாலே
நல்லிணக்கம் அறுப்பதற்கும்
ஒற்றுமை சிதறடித்து
உபத்திரவம் செய்வதற்கும்
ஆணவ முழக்கங்களல்லவா
அதிகமாகிக்கொண்டிருக்கின்றன

அன்று
பாலகனுக்காய்
நீர் தேடிய
தாயின் ஓட்டம்
சத்தியத் தேடலுக்கோர்
சரியான பாதை வகுத்தது
சாட்சியாய்  சரித்திரம்
காலந்தோறும்!

இன்றோ
தேடலற்ற ஓட்டங்களில்
சந்தோசமடைவதோ
சாத்தான் தான்

அறுக்கப்படவேண்டிய
மனோ இச்சைகளை
அறுத்துவிட்டாலே
அப்போது தெரியும்
தியாகத்தின் பலன்!

இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!


கவிதை: சகோதரர் பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)