எத்துணை எடுத் தியம்பியும்
இசையாத இனத்தோர்க்கு – ஏக
இறைவன் ஒருவனே யென்று
ஏற்காத குலத்தோர்க்கு,
இனியும் எத்தி வைப்பீர்
இறைச் செய்தி என்னவென்று – அந்த
நம்பிக்கை அற்றோர்க்கு
நல்வழி விட்டோர்க்கு,
“வரைந்தவை வார்த்தவையென
வணங்குவீர், அவற்றையெலாம் -புனித
மார்க்கமும் மறையும் பெற்ற
நான் வணங்க மாட்டேன்!
நான் உரைக்கும் மீட்சியை
நீங்கள் ஏற்க மாட்டீர் – நித்தம்
நான் வணங்கும் இறையை
நீவிர் வணங்க மாட்டீர்!
விழி யற்றோர் நிலையிலேயே
வழி கெட்டோர் விரைய – நேர்
வழி பெற்ற எம்மை
இழி நிலையோர் ஏற்கார்!
அன்றியும்…
கலைஞரும் சிற்பியும்
கலந்து படைத்ததைக் – கடவுளெனக்
கையெடுத்து நீங்கள் வணங்க,
நான் வணங்க மாட்டேன்!
அதுபோல்…
உலகங்களைப் படைத்த
இணையற்ற இறைவனை
ஒருவன் என் றேற்பேன்;
நீங்கள் ஏற்க மாட்டீர்!
உலக வாழ்க்கையில் இலயித்த
உங்கள் வழி உங்களுக்கு
ஏக இறைவனை ஏற்ற
எம் வழி எமக்கு!”
oOo
(மூலம்: அல் குர்ஆன் / சூரா: 109 அல் காஃபிரூன்)
-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்