உலகின் அதிவேக விரைவுக் கணினி (Fastest Supercomputer) அறிமுகம்!

தற்போதைய அதிவிரைவுக் கணினி ரோட்ரன்னரின் ஒரு பகுதி!

நொடிக்கு ஒரு பெட்டாஃப்ளாப்ஸ் (Petaflops) கணக்கீடுகளை நிகழ்த்தும் அதிவிரைவுக் கணினி (Supercomputer) களை உருவாக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அமெரிக்க நிறுவனம் IBM, தற்போது அதனைச் சாத்தியப் படுத்தியுள்ளது.
 
கணினி உலகில் நன்கு அறியப்பட்ட IBM நிறுவனமும், நியூ மெக்சிகோவிலிருக்கும் லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வுச் சாலையும் இணைந்து இந்தக் கணினியை உருவாக்கியுள்ளன. `ரோட்ரன்னர்' (Roadrunner) என்று அழைக்கப்படும் இந்த கணினி 100 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

IBM இதற்கு முன் உருவாக்கிய அதிவிரைவுக் கணினியான ப்ளூ ஜீன் (Blue Gene)-ஐக் காட்டிலும் இது இருமடங்கு வேகமாக செயல்படும். ஓர் ஒப்பீட்டிற்காக ப்ளூ ஜீன் அதிவிரைவுக் கணினி அதற்கடுத்த அதிவிரைவுக் கணினியைவிட மும்மடங்கு வேகத்தில் கணக்கீடுகள் செய்ய இயலும்.

தற்போதைக்கு அமெரிக்க அணு ஆற்றல் சோதனைக் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப் பட இருக்கும் இக்கணினி, அது மட்டுமல்லாது கட்டுமானப் பொறியியல், மருத்துவ ஆய்வு, இயற்கை எரிபொருள் உருவாக்கம், எரிபொருளை மிச்சப்படுத்தும் வாகனங்களை வடிவமைத்தல், மருத்துவ சிகிச்சை, மற்றும் நிலத்தடி எரிபொருள் ஆய்வு உள்ளிட்ட பற்பலப் பயன்பாடுகளுக்காகவும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய உலகின் மிக அதிக ஆற்றல் கொண்ட மடிக்கணினியைப் போல் ஒரு லட்சம் மடங்கு ரோட்ரன்னரின் கணக்கிடும் ஆற்றல் உள்ளது என IBM தெரிவித்துள்ளது. இந்தக் கணினியை உருவாக்க சுமார் 6 ஆண்டுகள் ஆனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவிரைவுக் கணினிகள் இயங்கும் வேகத்தை "ஃப்ளாப்" என்ற அலகில் அளப்பர். ஒரு ஃப்ளாப் என்பது ஒரு நொடியில் செய்யப்படும் பின்னக் கணக்கீடுகள் FLoating-point Operations Per Second – FLOPs).


ஒரு ட்ரில்லியன் (பத்தாயிரம் கோடி) பின்னக் கணக்கீடுகளை ஒரு கணினி ஒரு நொடியில் செய்ய இயன்றால் அதன் செயல் திறன் கிகாஃப்ளாப் (Gigaflops) என்றும், ஆயிரம் ட்ரில்லியன் பின்னக் கணக்கீடுகளை ஒரு நொடியில் செய்ய இயன்றால் அதன் செயல் திறன் டெராஃப்ளாப் (Teraflops) என்றும் ஒரு மில்லியன் ட்ரில்லியன் பின்னக் கணக்கீடுகளை ஒரு நொடியில் செய்ய இயன்றால் அதன் செயல் திறன் பெட்டாஃப்ளாப் (Petaflops) என்றும் அளக்கப்படுகிறது. ரோட் ரன்னரின் மீஉயர் கணக்கிடும் திறன் 1.7 பெட்டாஃபிளாப்" (Petaflop) ஆகும்.


இந்தியாவிலும் அதிவிரைவுக் கணினிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேம்பட்டக் கணினியக மையம் (Center for Advanced Computing – CDAC) உருவாக்கிய அதிவிரைவுக் கணினியின் செயல்திறன் 1005 கிகாஃப்ளாப்கள் என்பது தனித் தகவல்.

 

வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது; அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள்; அவன் மீதே (பாரஞ்சாட்டி) உறுதியான நம்பிக்கை வையுங்கள் – நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை. (அல்குர்ஆன் 11:123)

 

இந்த அண்ட சராசரத்தில் படைப்பாளன் மறைத்து வைத்துள்ள அருட்கொடைகள் எண்ணிலடங்காதவை இன்னும் உள்ளன. அவற்றைக் கண்டறியும் ஆற்றலை ஒவ்வொரு மனிதனின் மூளைக்கும் கொடுத்துள்ளான். அந்த மூளையின் ஆற்றலை எவர் சரியாகப் பயன்படுத்துகின்றாரோ அவரால் இன்னும் இன்னும் பல்வேறு கண்டுபிடிப்புகள் இவ்வுலக முடிவு நாள் வரை இம்மனித சமூகத்திற்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

 

கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்! (அல்குர்ஆன் 12:76)