புவியை ஒத்த புதிய வெளிக்கோள் கண்டுபிடிப்பு

நாம் வாழும் புவி அங்கம் வகிக்கும் சூரியக் குடும்பம் (Solar system) பங்குபெறும் பால்வழித்திரள் (The Milky Way)  எனும் பேரண்டத்திலிருந்து (Galaxy) சுமார் 20.5 ஒளியாண்டுகள் (light-years) தொலைவில் புவியை ஒத்த இயல்புகள் கொண்ட இன்னொரு வெளிக்கோள் (Exoplanet) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியனைச் சுற்றிவராத கோள்கள் வெளிக்கோள்கள் என அழைக்கப்படும். இந்தக் கண்டுபிடிப்பைத் தென் ஐரோப்பிய  விண் ஆய்வகம் (European Southern Observatory) அறிவித்துள்ளது.

கிலிசே (Gliese) 581 c  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெளிக்கோள் கிட்டத்தட்ட பூமியின் தன்மையை ஒத்து இருப்பதால் இங்கு நீர் திரவநிலையில் இருப்பதற்கும் அதனால் உயிர்கள் இருப்பதற்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறிவியலார் கருதுகின்றனர். புவியைப் போல் 5 மடங்கு நிறை கொண்ட இந்த வெளிக்கோள் சூரியனை விட மும்மடங்கு நிறையில் சிறியதான ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது. எனினும் இது புவியைப் போல் அல்லாமல் தனது சுற்றுப்பாதையின் மைய நட்சத்திரத்திற்கு 14 மடங்கு குறைவான தொலைவில் உள்ளது. மேலும்  இது ஒருமுறை தன் மைய நட்சத்திரத்தைச் சுற்றிவர பூமியின் கால அளவுப்படி வெறும் 13 நாட்களே ஆகும்.அதாவது இந்தக் கோளில் ஓர் ஆண்டுக்காலம் என்பது நம் புவியின் கால அளவுப்படி 13 நாட்கள்.

தற்போது இருக்கும் நிறமாலைமானிகளிலேயே (Spectrograph) மிகத் துல்லியமானதாக நம்பப்படும் ஹார்ப்ஸ் HARPS (High Accuracy Radial Velocity for Planetary Searcher) நிறமாலைமானி மூலம் இந்த வெளிக்கோள் கண்டறியப்பட்டது.

நம்மிடம் கைவசம் இருக்கும் தற்போதைய விண்வெளிப்பயண முறைகளைக் கொண்டு இந்த வெளிக்கோளை அடைவது தற்போதைக்கு சாத்தியமில்லை. ஏனெனில் தற்போது விண்வெளி ஓடங்கள் பயன்படுத்தும் வேதியியல் எரிபொருளில் இயங்கும் ராக்கெட்டுகள் ஒளியின் வேகத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்தில் ஒருபங்கு வேகம் தான் மிக அதிக பட்சமாக அடைய முடியும். 20.5 ஒளியாண்டு தொலைவைக்கடக்க ஒளியின் வேகத்தில் பயணித்தாலும் இருபதரை ஆண்டுகள் ஆகும் என்றால் தற்போதைய மீஉயர் அதிவேக ராக்கெட்டில் பயணித்தாலும் கிட்டத்தட்ட 31 லட்சம் ஆண்டுகள் பிடிக்கும்.

தகவல்: அபூஷைமா