மாபெரும் சுமைதூக்கி விண்கலம் விண்ணில் பாய்கிறது!

Share this:

ஐரோப்பிய விண்ணாய்வு மையம் (European Space Agency – ESA) உருவாக்கியுள்ள மாபெரும் சுமைதூக்கி விண்கலம் (Freighter Spacecraft) நாளை (9/3/2008) ஞாயிறன்று மக்கா நேரப்படி காலை 07:03 மணியளவில் பிரெஞ்சு கயானாவிலிருந்து ஏவப்பட ஆயத்தமாக உள்ளது. இந்த விண்கலம் விண்ணில் உலாவந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்ணாய்வு நிலையத்திற்குத் (International Space Station – ISS)தேவையான பொருள்களை எடுத்துச் செல்லவும், அங்கிருந்து கழிவுகளை எடுத்துக் கொண்டு திரும்பவும் தற்போது ஏவப்படுகிறது.

தானியங்கிப் பரிமாற்று வாகனம் (Automated Transfer Vehicle – ATV)  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் 7.6 டன் வரை எடையுள்ள பொருள்களை எடுத்துச் செல்ல வல்லது. இக்கலம் மனிதக் குறுக்கீடின்றியே ISS நிலையத்தைத் தானே கண்டறிந்து தன்னை இணைத்துக் கொள்ளவும் அங்கிருந்து விடுபடவும் வல்லது என்று ESA அறிவித்துள்ளது. இதில் இணைக்கப்பட்டுள்ள ஒருங்கொளி (Laser) உணர்விகளின் மூலம் இதனைச் செய்து கொள்கிறது என்றும் ESA தெரிவித்துள்ளது.

இந்த வாகனம் ஐரோப்பாவின் ஏரியன் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ISS-உடன் இணைந்திருக்கும் ATV அங்கிருந்து கழிவுகளை ஏற்றிக் கொண்டு புவியின் வளிமண்டலத்தில் மீள்நுழையும் போது பல்வேறு சிறு துண்டுகளாக உடைந்து எரிந்து போகுமாறும் எரிந்த சிதைவுகள் பசிபிக் பெருங்கடலில் வீழுமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

20 டன் மொத்த எடையினைக் கொண்ட இந்த வாகனம் கடந்த 11 ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்டு உருவாக்காப்பட்டுள்ளது. இந்த வாகனத்திற்குச் சென்ற நூற்றாண்டின் பிரபல அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்னே-யின் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது தனித் தகவல்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.