சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரர்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு |
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினராய் இனி கியாமத் நாள்வரை உள்ள மக்கள் அனைவரிலும், நபித்தோழர்கள்தாம் ‘முதன்மை’ மக்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள்தான் குர்ஆன் உருவாக்கிய முன்னுதாரணச் சமுதாயமாகத் திகழ்கிறார்கள். முதன்மை மக்கள் எனும் பெயர் எடுக்கும் முன் அவர்களின் வாழ்வும் பண்பாடும் கலாச்சாரமும் மோசமாகவே இருந்துள்ளது.
எத்தனை விதமான மோசமான பெயர்களைச் சூட்டினாலும் அவர்களுக்குத் தகும். உலகம் தவறு எனக் கூறும் செயல்கள் அனைத்தும் அவர்களிடமிருந்து தான் உருவானதோ என்று கூட எண்ணத்தோன்றும். அவர்களின் அறியாமைக் கால வாழ்க்கையைக் குறித்து அதீத மதிப்பீடு செய்து இவற்றை எழுதிவிட்டதாகக் கருதி விடவேண்டாம். தீமையான குணங்களும் செயல்களும் அண்ட விடாமல் வளர்க்கப்பட்ட ஒருவனை “நல்லவன்” என்று எளிதில் கூறிவிடலாம். தீய குணங்களும் தீய செயல்களும் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒருவன், “நல்லவனாக மாறினான்” என்று ஒற்றை வரியில் கூறிவிட முடியாது. காரணம், மாறினான் என்று கூறும்போது, அப்படி மாறுவதற்கு முன்னர் அவனுடைய பழைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பதையும் கூறுவதே பொருத்தமாக இருக்கும். நபித்தோழர்கள் மாறினர்; அவர்களை மாற்றியது குர்ஆன். மாறுவதற்கு முன்னர் அவர்கள் எப்படியிருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமெனில் அவர்களது முந்தைய வாழ்வைப்பற்றி கூறித்தான் ஆகவேண்டும்.
சிலைவணங்கிகள், வழிகெட்டவர்கள், வினோத வழிபாட்டையுடையவர்கள், இன வெறியர்கள், மூடநம்பிக்கையாளர்கள், மோசடி வியாபாரிகள், சுயநலவாதிகள், நாகரீகம் இல்லாதவர்கள், ஒழுக்கமற்றவர்கள், மதுப்பிரியர்கள், விபச்சார விரும்பிகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள், மனிதனை அடிமையாக்கி வாழ்வதில் பேரின்பம் கண்டவர்கள், துவேஷமிக்கவர்கள், மொழி மற்றும் நிற வெறியர்கள், இன வெறிக்காகப் பல வருடக்கணக்கில் நீடிக்கும் யுத்தங்களை செய்தவர்கள், சுருங்கக்கூறின் வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் தரம் தாழ்ந்தவர்களாகவே பெரும்பாலான நபித்தோழர்களின் அறியாமைக் கால வாழ்க்கை அமைந்திருந்தது.
பாதைமாறிச் சென்று கொண்டிருந்த அவர்களைச் சரியான பாதைக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமை அல்குர்ஆனுக்கு மட்டுமே உண்டு.
இதோ அல்குர்ஆன் நபித்தோழர்களது முந்தைய வாழ்வைப்பற்றிக் கூறுகின்றது :
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருள் கொடைகளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவராய் இருந்தீர்கள் – உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள் இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள். அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் – நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை – வசனங்களை உங்களுக்குத் தெளிவாக்குகிறான். (அல்குர்ஆன் 3:103)
பிறகு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபின் அவர்களின் உன்னத நிலையைப் படம்பிடித்துக் காட்டும் போது,
முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே கனிவானவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும் அல்லாஹ்விடமிருந்து அருளையும் திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை (நபியே) நீர் காண்பீர் … (அல்குர்ஆன் 48:29)
என்று அருள்மறை கூறுகிறது.
தவறான வழியில் உழன்று கொண்டிருந்தவர்கள் உத்தமர்களாய் மாறியபின் உலகத்திற்கோர் முன்மாதிரியாய்த் திகழ்ந்தனர் என்பதுதான் வியக்கத்தகு செய்தியாகும். இஸ்லாத்திற்காக செந்நீரைத் தண்ணீராக்கி, களம் பல கண்ட தியாகச் செம்மல்கள் அவர்கள். இம்மையில் நல்விதை விதைத்து மறுமையில் நன்மைகளை அறுவடை செய்வதே தம் இலட்சியம் எனச் செயல்பட்ட செயல்வீரர்கள் அவர்கள். பசி, பட்டினி, பிணி மூப்பு, துன்பம், துயரம் இன்னும் உலகில் அவர்களின் வாழ்நாளில் ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தையும் சுவனத்திற்கு விலையாகக் கொடுத்தவர்கள் அவர்கள். இறைவனின் உதவி எப்போது வரும் என்று கேட்கும் அளவுக்கு அலைக்கழிக்கப்பட்ட சோதனைகளைச் சாதனைகளாக மாற்றியவர்கள் அவர்கள். கொண்ட கொள்கைக்காக ஈட்டிமுனையில் நிறுத்தப்பட்டும் ஈமான்தனை இழக்காதவர்கள் அவர்கள். தீச்சுவாலைகள் அவர்களை முத்தமிட்டபோதும் அதனைப் பூஞ்சோலையாக மாற்றிக்கொண்டவர்கள் அவர்கள்.
சீர்கெட்ட பாரினைச் சீராக்கிட முனைந்தவர்கள் அவர்கள். மின்னிடும் வாளாயுதங்களுக்கு நடுவில் நிராயுதபாணியாக நின்று வென்றவர்கள் அவர்கள். இறைவனின் மார்க்கத்தை நானிலத்தில் நிலைநாட்டிட, போர்க்களத்தில் தன் சரீரம் சாய்த்தவர்கள் அவர்கள். ‘தவ்ஹீத் தென்றல் தாராளமயமாக்கல் கோட்பாட்டிற்காக உயிரைக் கையில் ஏந்தி புறப்பட்டவர்கள் அவர்கள். மின்னிடும் வாளின் நுனியிலும் இனிய தவ்ஹீதின் கீதத்தை இசைத்தவர்கள் அவர்கள்.
இன்றோ – உலகமே மாற்றாருக்கு உரியதாகிவிட்டது. முஸ்லிம்களுக்கோ, அது ஒரு கனவு உலகமாக மாறிவிட்டது. முஸ்லிம்கள் ஓய்வு எடுக்க மாற்றாரோ உலகப்பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். ஏகத்துவம் இல்லாத உலகம் வெறுமையாகிவிட்டது. ஆனால் அன்றோ ‘கைபர்’ கோட்டையின் பெரும் கதவுகள் உடைத்தெறியப்பட்டன. ‘கய்ஸர்’ மன்னரின் நகரங்கள் முஸ்லிம்கள் காலடியில் வீழ்ந்தன. மனிதர்களால் உருவான உருவச்சிலைகள் உருத்தெரியாமல் போயின. ஈரான் நாட்டு அக்கினிக் குண்டங்கள் அணைந்தன. தவ்ஹீத் முழக்கத்தால் உலகமே எழுச்சியுற்றது.
இத்தனைக்கும் காரணம் அந்தச் சமுதாயம் குர் ஆன் உருவாக்கிய சமுதாயம்.
இன்றோ முஸ்லிம்கள் தடம் பிறழ்ந்து வழிதவறினார்கள். இறைவனின் திசையாம் காஃபாவை முன்னோக்குவதில் இதயத்துடிப்பே இல்லாமல் இருக்கின்றனர். குர்ஆன், ஹதீஸ் எனும் இரு ஒளித்தீபங்கள் இல்லாததால் முஸ்லிம்களின் இல்லங்கள் பழுதடைந்து இருண்டு கிடக்கின்றன.
ஆனால் அன்றோ ஏகத்துவத்தின் ஏற்றமிகு முத்திரை அவர்களின் உள்ளத்தில் குத்தப்பட்டிருந்தது. தவ்ஹீதை மீறியோர் தம் தாய்-தந்தையாக இருந்தாலும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். குர்ஆன் ஹதீஸைத் தம் இதயத்தோடு இணைத்துக்கொண்டனர். ஈமானின் சுடரைத் தம் இதயத்தில் ஏற்றி வைத்திருந்தனர். காலத்தின் ஏட்டிலிருந்து அசத்தியத்தை அழித்தனர். பள்ளிவாயில்களை சிரவணக்கம் செய்து நிறைத்தனர். ஒவ்வொருவரும் அசத்தியத்தின் நரம்புகளை அறுக்கும் கூர்வாளாகத் திகழ்ந்தனர்.
காரணம் அவர்கள் குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்.
இவ்வாறு அவர்களைப்பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம். சுருங்கக்கூறின் முழுக்க முழுக்க செயல்திறன் பெற்ற அவர்களின் வரலாறு இன்றளவும் மக்களுக்கு நினைவில் இருக்கின்றது. அவர்களின் சத்திய வாழ்க்கை ஏடுகளில் இன்றும் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.
மறுமைதான் அவர்களின் தாரக மந்திரம்
சொல்லமுடியாத அளவுக்குத் தரம் தாழ்ந்து வாழ்ந்தவர்கள் ஈடு இணையற்ற சமுதாயமாகப் பிற்காலத்தில் பிரகாசித்தார்கள் என்றால் அதற்கு என்ன காரணம் என்று நாம் ஆய்வு செய்து பார்த்தால் அதற்குப் பல காரணங்கள் இருந்தன. அதில் பிரதானமாக இருப்பது மறுமையின் மீதுள்ள அச்சமே. மறு உலகின் வெற்றிதான் அவர்களின் பிரதான நோக்கம். மனித உள்ளத்தின் கற்பனைக்குக் கூட எட்டாத அழகு பொதிந்த அற்புத சொர்க்கம்தான் அவர்களின் இலட்சியம். கருணை அருள் (குர்ஆன்) வந்து தம்மை வந்து ஆட்கொண்ட பின்னர், நரக நெருப்பின் பிடிகளில் துவண்டு விடாமல் இருப்பதே அவர்களின் எண்ணம். மண்ணாகிப்போன மனிதர்கள் அனைவரும் எழுப்பப்படும் அந்நாளில், ஒவ்வொருவரும் தங்களின் செயல்களுக்கேற்பக் கூலி வாங்கக் காத்திருக்கும் அந்நாளில், உலகத்தில் செய்த தீய செயல்களுக்காகத் தீயவர்கள் தலை குனிந்து நிற்கும் அந்நாளில், சுந்தரச் சுவனம்தான் மேன்மக்களின் ஒரே எதிர்பார்ப்பாக இருக்கும்.
அதனால்தான் புதுமனைவியின் பஞ்சணையில் உறங்கிக்கொண்டிந்தபோது சொர்க்கத்திற்கு அழைப்புவர பஞ்சணையில் கிடக்கும் தன் மனைவியைவிட சொர்க்கத்தின் ‘ஹுருல் ஈன்கள்’ எவ்வளவோ சிறந்தவர்கள் எனக்கருதி, ஓடோடிச்சென்று சமர்க்களத்திலே குதித்து வானவர்களால் தொழவைக்கப்பட்ட ஹன்ழலா; இதோ சொர்க்கத்தின் வாசனையை உஹது மலையின் அடிவாரத்தில் நுகர்கின்றேன் என்று கூறிக்கொண்டே சிதறியோடி பின்னோடிய படைகளுக்கு நடுவே உஹது மலையை நோக்கி முன்னேறிச்சென்று சின்னாபின்னமாக்கப்பட்ட அனஸ்பின் நழ்ர்; இரண்டு கைகளும் வெட்டப்பட்டு கீழே விழுந்த நிலையில் தன் கக்கத்தில் கொடியை இடுக்கிக்கொண்டு சுமந்தவாறு எதையும் இழப்பேன் ஆனால் சொர்க்கத்தைமட்டும் இழக்கவே மாட்டேன் என்று பறைசாற்றி சிந்துகின்ற குருதியையும் பொருட்படுத்தாது ‘மூத்தா’ வின் ரோமப் படையினரை எதிர்கொள்ளும் முயற்சியில் கால்களையும் இழந்து பின்னர் மண்ணில் சாய்ந்த ஜாஃபர் பின் அபீதாலிப்!
இதேபோன்று எத்தனையோ சாகசங்கள், வீரதீரங்கள். எல்லாமே சொர்க்கத்திற்காக அதன் பேரின்பத்திற்காக. சொர்க்கத்திற்காகவே அவர்களை குர்ஆன் உருவாக்கியது என்றால் அது மிகையாகாது. அவர்களுக்கு நிகராக யாரும் இல்லை; இருக்கவும் முடியாது. என்பதை பறைசாற்றும் முகமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்:
“என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் என் தோழர்களான அவர்கள் இறைவழியில் செலவு செய்த இருகை அளவு அல்லது அதில் பாதி அளவைக்கூட அவர்களின் அந்தத் தர்மம் எட்டமுடியாது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ சயீத் அல் குத்ரி (ரழி) அவர்கள் – நூல் : புஹாரி (3673)
அவர்களைப்போன்று ஒரு சமுதாயம் அவர்களுக்குப் பிறகு இதுவரை உருவாகவில்லை. நாம் இல்லாவிட்டாலும், இஸ்லாத்தின் பெருமை நானிலத்தில் நின்று நிலைக்கவேண்டும் என்பதை உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்து நிரூபித்த பெருமைக்குரிய அந்த சமுதாயம் எங்கே? சுவனத்தின் முகவரியைத் தொலைத்து விட்டுத் தடுமாறும் நம் சமகால முஸ்லிம் சமுதாயம் எங்கே?
இனியாவது படிப்பினை பெறுவோம், குர் ஆன் வழிவாழ முற்படுவோம். அல்லாஹ் அதற்கு நற்கிருபை செய்வானாக!
___________________________________
துணை நின்ற ஆதார நூல்கள் :
அஸ்ஸீரத்துஸ் ஸஹாபா (இப்னு ஹிஷாம்- அரபி)
சவ்த்துல் ஹக் (அரபி மாத இதழ்)
முஸ்லிம் பெண்மணி (தமிழ் மாத இதழ்)
அல் ஜன்னத் (தமிழ் மாத இதழ்)
ஆக்கம்: சகோதரர் ஷரஃபுத்தீன்
2007-ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் ஆண்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற சகோதரர் ஷரஃபுத்தீன் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! – சத்தியமார்க்கம்.காம் |
2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்.