காவல்துறையினரால் கொல்லப்பட்ட புதுதில்லி மதரஸா இமாம்

{mosimage}மதரஸாவில் பணிபுரியும் இமாம் காவல்துறையினரின் கடும் தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். இறந்த இமாமின் உடம்பில் இருந்த காயங்கள், அவர் மீது போலீஸ் நிகழ்த்திய கொடூரத் தாக்குதலை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போலீஸ் ஸ்டேஷன் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர்.

 

புதுதில்லியின் சுல்தான்பூர் நகரைச் சேர்ந்த 36 வயதான இமாம் ஹாஃபிஸ் கமாலுத்தீன் மௌலவி, காவல் நிலையத்தில் விசாரணைக் கைதியாக இருக்கையில் கொல்லப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வீதியில் இறங்கிய பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷனை சூழ்ந்து தாக்கியுள்ளனர். தாக்குதலில் காவல் நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மக்கள் திரளைக் கலைக்க போலீஸ் தடியடி நடத்தியுள்ளது.

 

பல வருடங்களாக சுல்தான்பூரில் உள்ள மதரஸாவில் ஆசிரியராக பணியாற்றி வரும் கமாலுத்தீன், அனாதைக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதில் தலைமை ஏற்று முன்னின்று நடத்தி வந்து கொண்டிருந்தார்.

சம்பவம் நடந்த தினத்தின் முன் இரவில் சுல்தான்பூர் காவல்துறையினர் இவரைக் கைது செய்து காவலில் வைத்திருந்தனர். "மனநிலை பாதிக்கப்பட்ட கமாலுத்தீன் சிலரை தாக்கியதால் கைது செய்யப்பட்டார்" என போலீஸ் தரப்பு காரணம் கூறியுள்ளது. ஆனால் இதனை உறுதியாக மறுத்துள்ள கமாலுத்தீனின் மனைவியும் மற்ற உறவினர்களும், காவல்துறை பொய் கூறுவதாக தெரிவித்துள்ளனர். பிணையில் இருந்த இமாம் கமாலுத்தீனை காவல்துறையினர் மிருகத்தனமாகத் தாக்கி கொடுமைப்படுத்தியதாகவும், உடம்பில் துணி இல்லாமல் கைகளை பின்பக்கம் கட்டிய நிலையில் காவல்துறையினரே கமாலுத்தீனை மருத்துவமனையில் சேர்த்ததாகவும் கமாலுத்தீனின் உறவினர் சலீம் கூறியுள்ளார்.

 

இரவு உணவு முடிந்த பின் சிறிது நேரம் நடக்கும் பழக்கமுள்ள இமாம் கமாலுத்தீன், நீண்ட நேரத்திற்குப் பின்னரும் வீட்டிற்குத் திரும்பாததைத் தொடர்ந்து இரவு முழுவதும் அவரைத் தாங்கள் தேடியதாகவும், காலை வரை எந்த தகவலும் கிடைக்காததால் காவல்துறையில் புகார் செய்ய சென்றபொழுது அவர் ஏற்கனவே காவல்துறையினரின் பிணையில் கைது செய்த விபரமும், அதன் பின் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விரமும் குடும்பத்தில் அறிந்ததாக தெரிவித்தனர்.

 

காவல்துறை வளாகத்தில் கொல்லப்பட்ட கமாலுத்தீன் அப்பகுதி மக்களிடம் மிகுந்த ன்மதிப்பையும், அன்பையும் பெற்ற இமாமானதால் சுல்தான்பூர் பிரதேசத்தில் தொடர்ந்து நிலவும் பதட்டத்தைக் குறைக்க சுற்றுப்புற மாவட்டத்திலிருந்து அதிகப்படியான காவல்துறையினரும், அதிரடிப்படையும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

 

விசாரணைக் கைதியாக பிணையில் வைக்கப்பட்டு இருந்த சுல்தான்பூர் பகுதி இமாம் காவல்துறையினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இருப்பதன் பின்னணியும், இந்திய குற்றவியல் சட்டத்தை மீறி தனிச்சையாக அதிகாரத்தைக் கையில் எடுத்து விசாரணைக் கைதியாய் அழைத்து வந்த ஒருவரைக் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்த சுல்தான்பூர் காவல்துறையினரின் மீதான ஒழுங்கு நடவடிக்கை என்ன என்பதே புதுதில்லி மக்கள் மனதில் எஞ்சியுள்ள கேள்விகளாகும்.