“70 ஆண்டுகளாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளராக இருக்கிறது… உலகமும் மௌனம் காக்கிறது!” – ஒவைசி

Share this:

“இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு ஒரு அரக்கன், போர்க் குற்றவாளி. 21 லட்சம் ஏழை காஸா மக்களில் 10 லட்சம் பேர் வீடிழந்துவிட்டனர்.” – ஒவைசி

இஸ்ரேலின் நாட்டின் மீது அக்டோபர் 7-ம் தேதியன்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதன் காரணமாக, ‘நாங்கள் எதிர் தாக்குதல்தான் தொடுக்கிறோம், மொத்த ஹமாஸும் முற்றிலுமாக அழிக்கப்படும்’ என்ற நோக்கத்தில், பாலஸ்தீனத்தின் வடக்கு காஸா பகுதியில் ராணுவ பீரங்கிகள், எழுகணைகள், வெடிகுண்டுகள் போன்றவற்றுடன் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

காஸா வாசிகள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக ஐ.நா முகாம்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இரு நாடுகளிலும் மொத்த இறப்பு எண்ணிக்கை 3,000-ஐ கடந்துவிட்டது.

ஐ.நா-வின் கூற்றுப்படி, காஸாவில் 1,300-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரை மட்டமாக்கப்பட்டு விட்டன. இவ்வாறான கொடுமையான போரில் அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் ஒருசார்பு நிலைப்பாட்டை எடுத்துவருவது போரை நீள வைக்கிறது. இந்த நிலையில், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒவைசி, 70 ஆண்டுகளாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளராக இருக்கிறதென்றும். இதைக் கண்டு உலகமும் மௌனமாக இருக்கிறதென்றும் கூறியிருக்கிறார்.

நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டமொன்றில், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்துப் பேசிய ஒவைசி, “இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு ஒரு அரக்கன், போர்க் குற்றவாளி. 21 லட்சம் ஏழை காஸா மக்களில் 10 லட்சம் பேர் வீடிழந்துவிட்டனர். உலகமே இதைப் பார்த்து மௌனம் காக்கிறது. கொல்லப் பட்டவர்களைப் பாருங்கள், காஸாவின் இந்த ஏழைகள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்கள்… இந்த விவகாரத்தில் ஊடகங்கள் ஒருதலைபட்சமான செய்திகளை வெளியிடுகின்றன.

70 ஆண்டுகளாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளராக இருந்து வருகிறது. இத்தகைய ஆக்கிரமிப்பையும், அட்டூழியங்களையும் வேறெங்கும் பார்க்க முடியாது. பாலஸ்தீனம் என்பது முஸ்லிம்களைப் பற்றிய பிரச்னையல்ல, மனிதாபிமானப் பிரச்னை. எனவே, பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடத்தப்படும் இந்த அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்துமாறு பிரதமர் மோடியிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார்.

மேலும், உத்தரப்பிரதேசத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதை எதிர்த்துப் பேசிய ஒவைசி, “கேளுங்கள் முதல்வரே, நான் பாலஸ்தீனத்தின் கொடியையும், நமது மூவர்ணத்தையும் பெருமையுடன் அணிந்திருக்கிறேன். நான் பாலஸ்தீனத்துடன் நிற்கிறேன்” என்று கூறினார்.

Courtesy: Vikatan.com


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.