சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 67

Share this:

67. அலெக்ஸாந்திரியாவில் ஸலாஹுத்தீன்

லெக்ஸாந்திரியா!

நபித் தோழர்கள் எகிப்தைக் கைப்பற்றி, அங்கு இஸ்லாம் மீள் அறிமுகமானதும் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு, கடற்கரை நகரமான அலெக்ஸாந்திரியாவும் நைல் நதிப் படுகையில் அரபியர்கள் உருவாக்கிய ஃபுஸ்தத் நகரும் முக்கியமானவையாக இருந்து வந்தன. காஹிரா எனப்படும் கெய்ரோ, பின்னர் ஃபாத்திமீக்கள் ஆட்சிக்கு வந்ததும் ஃபுஸ்தத் நகருக்கு வடக்கே அவர்கள் உருவாக்கிய புதிய தலைநகரம். ஆயினும் சிலுவைப்போர் நிகழ்ந்த காலத்தில் பண்டைய நகரமான அலெக்ஸாந்திரியாவே எகிப்தியப் பொருளாதாரத்தின் மையப் புள்ளியாகத் திகழ்ந்தது. அதன் கலங்கரை விளக்கம் ஓர் உலக அதிசயம்

‘கடற்கரை நகரமெனில் துறைமுகம் இருக்கும்; அங்கு கலங்கரை விளக்கமும் இருக்கும். இதிலென்ன அதிசயம்?’ வியப்பவர்களுக்குத் தகவல் உள்ளது.

மாவீரர் அலெக்ஸாந்தர் நிர்மாணித்த அந்நகரம் அவரது பெயரையே சூடிக்கொண்டு அலெக்ஸாந்தரியா என்றானது. அதை ஒட்டி அமைந்துள்ளது ஃபேரோஸ் (Pharos) தீவு. அது தீவு என்ற போதிலும் நகரையும் தீவையும் ஒரு குறுக்குப் பாலம் இணைத்திருந்தது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு – அதாவது இருபத்து நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் – அலெக்ஸாந்திரியா உருவாகியதுமே ஃபேரோஸ் தீவில் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டு விட்டது. சுமார் 130 மீட்டர் உயரம்; ஒன்றோடு ஒன்றை இணைத்துக் கோத்துக் கட்டப்பட்ட கட்டுமானம்; அது நிறைவடைய பன்னிரெண்டு ஆண்டுகள் என்ற சிறப்புகளுடன் உயர்ந்த அதன் பிரம்மாண்டம் அதை உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக ஆக்கிவிட்டது. கலங்கரை விளக்கம் என்பது கிரேக்க மொழியில் ஃபாரோஸ் (pharos) எனப்படும்.

அந்தக் கலங்கரை விளக்கத்தைச் சுற்றிப் பார்த்த ஸ்பெயின் நாட்டுப் பயணி இப்னு ஜுபைர் அதன் உட்புறத்தின் வடிவமைப்பைப் பார்த்து மூச்சுத் திணறிவிட்டார். ‘படிக்கட்டுகளும் வாயில்களும் குடியிருப்புகளைப் போன்ற பற்பல இடங்களும் அதனுள் ஊடுருவுபவர்களை அலைந்து தொலைந்து போகச் செய்துவிடும்’ என்று விவரித்து வைத்திருக்கின்றார்.

ஸலாஹுத்தீன் அய்யூபியின் காலத்தில், பூகம்பங்கள் அதன் கட்டுமானத்தைப் பலவீனப்படுத்தியிருந்தாலும் அப்பொழுதும் அது தலை நிமிர்ந்துதான் நின்றுகொண்டிருந்தது. அதன்பின், பதினைந்தாம் நூற்றாண்டில் அது முற்றிலும் சிதிலமடைந்து, அவ்விடத்தில் காயித்பே கோட்டை (Citadel of Qaitbay – قلعة قايتباي) கட்டப்பட்டது.

தற்போது அது சுற்றுலா மற்றும் அருங்காட்சியக அமைச்சகக் கட்டடம் ஆகியுள்ளது.

oOo

இந்தியப் பெருங்கடலுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையே வளர்ந்து வந்த வர்த்தகத்தால் அலெக்ஸாந்திரியாவுக்குச் செல்வச் செழிப்பு. ஆசியாவிலிருந்து பட்டு, மிளகு, கிராம்பு, ஏலக்காய் போன்ற பொருட்கள் செங்கடல் மார்க்கமாக ஐரோப்பா செல்வதற்கு அலெக்ஸாந்திரியாதான் துறைமுகம். அதனால் இத்தாலிய, பைஸாந்திய வர்த்தகர்கள் புழக்கம் அங்கு ஏராளம். விளைவாக அலெக்ஸாந்திரியா எகிப்திற்கு அள்ளி அளித்த வரி வருவாய் அபரிமிதம்.

அத்தகு பெருமதிப்பிற்குரிய அலெக்ஸாந்திரியாவைக் குறி வைத்தார் ஷிர்குஹ். எகிப்திய-பரங்கியக் கூட்டணியைத் தோற்கடித்துத் திருப்பி அனுப்பிய போதிலும் ஷிர்குஹ் அதைத் தமது வெற்றியாகக் கருதவில்லை. தோல்வியுறாமல் மீண்டோம். அவ்வளவே என்பது அவரது எண்ணம். எனவே அவருக்கு ஒரு வெற்றி தேவைப்பட்டது. எதிரிகளை நிலைகுலைய வைக்கும் வெற்றி. அதற்கு அவருக்கு அலெக்ஸாந்திரியாவே அம்சமான வெற்றிக் கனியாக, ‘வா, வந்து பறி’ என்று காய்த்துத் தொங்கியது. காரணங்கள் இருந்தன.

இஸ்லாமியப் பகுதிகளுக்குள் பரங்கியர்கள் நுழைய இடமளித்த தம் நாட்டு வஸீர் ஷவாரின் மீது அலெக்ஸாந்திரியா நகர மக்கள் ஏகப்பட்ட ஆத்திரத்தில் இருந்தனர். அது ஒன்று. கெய்ரோவில் வஸீர் ஷவார் நிகழ்த்திய அட்டூழியங்களிலிருந்து உயிர் பிழைத்து ஓடிவந்த நயீமுத்தீன் என்பவர் அலெக்ஸாந்திரியாவில் தஞ்சம் புகுந்திருந்தார். அவர் ஷிர்குஹ்வை வரவேற்கவும் அனைத்துவிதப் பொருளாதார உதவிகள் அளிக்கவும் தயாராக இருந்தார். அது மற்றொன்று. மொத்தத்தில், சிரியாவிலிருந்து ஷிர்குஹ்வின் தலைமையில் எகிப்திற்கு வந்துள்ள நூருத்தீனின் படை, தங்களை விடுவிக்க வந்த பேருதவி என்று கனிந்து காத்திருந்தது அலெக்ஸாந்திரியா.

எனவே, வலிமையான மீதப் படையுடன் தம்மை எதிர்பார்த்திருக்கும் எகிப்து-பரங்கியக் கூட்டணியை அப்படியே தவிர்த்துவிட்டு, கெய்ரோவுக்கு வடமேற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள அலெக்ஸாந்திரியாவுக்கு, கெய்ரோவுக்குத் தெற்கே சுமார் 250 கி.மீ. தொலைவில் இருந்த ஷிர்குஹ் கைகாட்ட, புழுதி கிளப்பி விரைந்தது அவரது குதிரைப்படை. ஒரு நாள் கூடத் தாமதிக்காமல், எதிரிகள் சுதாரித்து எழுவதற்குள், எகிப்தின் முழு நீளத்தையும் தெற்கிலிருந்து வடக்காக, சுமார் 400 கி.மீ. தொலைவை மின்னல் வேகத்தில் கடந்தது. அவர்களைக் குதூகலித்து வரவேற்றது அலெக்ஸாந்திரியா. அப்படியே ஷிர்குஹ்வின் தோளில் மாலையாக விழுந்தது.

oOo

ஷிர்குஹ்விடம் தோற்று, ஏராளமானவர்களைப் பலி கொடுத்து கெய்ரோ திரும்பியிருந்தது எஞ்சிய எகிப்து-பரங்கியப் படை. மயிரிழையில் உயிர் பிழைத்த ஜெருசல ராஜா அமால்ரிக்கின் முகம் தொங்கிவிட்டது. இத்தோல்விக்கு விரைந்து பழி தீர்க்க வேண்டும் என்று அல்லாடியது மனம். படை வலிமையை அதிகரிக்கவும் அடுத்தக்கட்ட போருக்கான நகர்வைத் திட்டமிடவும் அவரும் ஷவாரும் கெய்ரோவில் தலையில் கை வைத்துப் பேசிக்கொண்டிருக்க அலெக்ஸாந்திரியாவைப் பிடித்து விட்டார் ஷிர்குஹ் என்ற செய்தி அவர்களது மண்டைகளில் இடியைப் போட்டது.

ஷிர்குஹ்வின் வேகமும் திட்டமும் நடவடிக்கைகளும் ஷவார்-அமால்ரிக் கூட்டணிக்கு நரக வேதனை ஆகிவிட்டன. ‘என்ன இவன்? சிறு படையை வைத்துக்கொண்டு இவன் கொடுக்கும் குடைச்சல் பெரும் பிரச்சினையாக இருக்கிறதே? இவனை என்னவாவது செய்தால்தான் ஆச்சு’ என்று துடித்தார்கள்.

கூட்டணிப் படை எழுந்தது. அலெக்ஸாந்திரியாவை அடைந்தது. நகருக்கான சாலைகள் யாவும் அடைக்கப்பட்டன. அந்நகர் தனது பண்ட பரிவர்த்தனைக்கு முக்கியமாக நைல் நதியையே சார்ந்திருந்தது. அதன் முகத்துவாரம் பொத்தப்பட்டது. கடல் கப்பல் படையால் சூழப்பட்டது. தோட்டங்கள் வெட்டப்பட்டு மரக்கட்டைகள் திரட்டப்பட்டன. கவண் இயந்திரங்கள் உருவாயின. மூச்சுத் திணறும் முற்றுகைக்கு உள்ளானது அலெக்ஸாந்திரியா.

ஷிர்குஹ் காரியத்தில் இறங்கினார். அலெக்ஸாந்திரியாவின் தற்காப்புகளை மேற்பார்வையிட்டுவிட்டு, நகரின் தலைமைப் பொறுப்பைத் தம் சகோதரரின் மகன் ஸலாஹுத்தீனிடம் ஒப்படைத்தார். தம் படையை இரு பகுதியாகப் பிரித்து, ஒரு பகுதியை அலெக்ஸாந்திரியாவில் ஸலாஹுத்தீனிடம் நிறுத்திவிட்டு, மறு பகுதியினருடன் வேகவேகமாக எகிப்தின் தெற்கு நோக்கி விரைந்தார். பதூஉ வீரர்களின் உதவியைப் பெற்று உதவிப்படை ஒன்றை உருவாக்குவது; எதிரிகளுக்கு மறுமுனையிலிருந்து குடைச்சல் அளித்து அவர்களின் முற்றுகையைக் கலகலக்க வைப்பது என்பது அவரது திட்டம்.

நில வழியும் கடல் போக்குவரத்தும் அடைபட்டு விட்டால் என்னாகும்? அலெக்ஸாந்திரியாவினுள் கடுமையான உணவுத் தட்டுப்பாடு; பஞ்சம். ஸலாஹுத்தீனின் பொறுமையையும் தலைமைத் திறனையும் உருப்போடும் கடினச் சோதனையாக அமைந்தது அந்த முற்றுகைப் போர். அவரது சேனையோ மிகச் சிறியது. தகவல் தொடர்பும் முற்றிலும் அறுந்து போயிருந்தது. நகர மக்களின் ஆதரவு மட்டுமே அவருக்கிருந்த ஒரே ஆறுதல். மக்களும் பொறுமை காத்தனர். ஸலாஹுத்தீனும் நிலைமையைத் திறம்பட சமாளித்தபடி இருந்தார். அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தப் புதிய தலைமைப் பொறுப்பும் எதிரிகளின் பெரும் சேனையை எதிர்த்து மாபெரும் நகரைக் காக்கும் சவாலும் வெகு கடினமான அச்சூழலும், பிற்கால வீர வரலாற்றுக்கு அவரைத் தங்க மகனாகப் புடம்போடத் துவங்கின.

அக்கடினச் சூழலில் ஸலாஹுத்தீனுக்கு மீதமிருந்த ஒரே நம்பிக்கை, தம் சிற்றப்பா ஷிர்குஹ் உதவிக்கு வருவார் என்பது மட்டுமே. ஆனால், தெற்கே 650 கி.மீ. தொலைவில், ஷிர்குஹ்வின் நிலைமை அப்படி ஒன்றும் சிறப்பாக அமைந்து விடவில்லை. சில பதூஉக்களைத் திரட்ட முடிந்தது. கொஞ்சம் பணம், சிறிது உணவு தேறியது. ஆயினும் கெய்ரோவைக் கைப்பற்றவோ, அலெக்ஸாந்திரியாவை விடுவிக்கவோ இயலாத நிலை.

நீடிக்கும் முற்றுகையினால் வஸீர் ஷவாருக்கோ இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை. முற்றுகையில் ஸலாஹுத்தீனிடம் தோற்றால் அவமானம்; பறிபோகும் அலெக்ஸாந்திரியா. வென்றால், அது பரங்கியர்களின் உதவியுடன் என்பதால், அவர்களது ஆதிக்கம் இங்கும் அதிகரித்துவிடும். அது மட்டுமின்றி, ஷிர்குஹ்வோ தெற்கே தம்மிஷ்டத்திற்குத் திரிந்து தம்மாலான அழிவுகளை நிகழ்த்துவார். அவரை வெல்வது முடியாத காரியமாகவே ஆகிவிடும். இதை எப்படி எதிர்கொள்வது என்று இக்கட்டில் தவித்தார் வஸீர் ஷவார்.

ஜெருசல அமால்ரிக்கும் நிம்மதி குலைந்தார். பொறுமை குறையத் தொடங்கியது. ஷிர்குஹ் அலெக்ஸாந்திரியாவுக்குள் சிக்கிக்கொள்ளாமல் தெற்கே மற்றொரு போர்முனையை உருவாக்கி, கட்டுப்பாடற்றுத் திரிகிறார்; ஜெருசலத்தின் மறுபுறம் நூருத்தீன் முன்னேறும் சாத்தியம் இருக்கிறது; அந்நகரும் போதுமான தற்காப்புப் படையினருடன் இல்லை. யோசிக்க, யோசிக்க அவருக்குப் பதற்றம் அதிகரித்து, இந்த முற்றுகையை எப்படியாவது விரைந்து முடித்துக்கொண்டு ஊர் திரும்பினால் போதும் என்று அவருக்குத் தவிப்பு.

இவ்வாறாக – மீண்டும் அனைவரும் வெற்றி-தோல்வியற்ற சம நிலையில் இருந்தனர். அனைவருக்கும் முடக்கம். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற கவலை.

அனைத்தையும் சரியாகக் கணித்த ஷிர்குஹ் அடுத்தொரு காரியம் செய்தார்.

வஸீர் ஷவாருக்கு எதிராகப் பரப்புரை செய்தபடி, மக்களிடம் எழுச்சியைத் தூண்டி இழுக்க, விவசாயிகளும் கூட ஆயுதம் ஏந்தியபடி அவர் பக்கம் இணைவது தொடங்கியது. சிறுகச் சேர்ந்த துருப்புகளுடன் கெய்ரோவை நோக்கி முன்னேறியபடி, சாமர்த்தியமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தகவலை ஜெருசல ராஜா அமால்ரிக் சமூகத்திற்கு அனுப்பினார்.

‘நீர் அமைதியாக யோசித்துப் பாரும். என்னை இங்கிருந்து விரட்டியடிப்பதால் பயனும் லாபமும் வஸீர் ஷவாருக்குத்தானே தவிர, உமக்கோ எனக்கோ அல்ல என்பது புரியும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்த அம்மடலின் மையக் கரு, ‘நாம் இருவரும் இங்கு எகிப்தில் நேரத்தை வீணடிக்கிறோம்’ என்பதே.

அமால்ரிக்கை அத்தகவல் அசைத்தது. வஸீர் ஷவாரும் பேச்சு வார்த்தைக்குத் தலை அசைத்தார். ஷிர்குஹ் அலெக்ஸாந்திரியாவை எகிப்திடம் ஒப்படைக்க ஐம்பதாயிரம் தீனார் என்றது அத்தரப்பு. ‘ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், பரங்கியர்கள் எகிப்தில் தங்கக்கூடாது’ என்றார் ஷிர்குஹ். அலெக்ஸாந்திரியாவைத் திறம்படக் காத்ததால் அதை வஸீர் ஷவாரிடம் ஒப்படைக்கும்போது அதன் காரியங்களை ஒழுங்குபடுத்தும் வாய்ப்பு ஸலாஹுத்தீனிடம் அளிக்கப்பட்டது. தங்களுக்கு உதவிய அலெக்ஸாந்திரியக் குடிமக்களை ஷவார் பழிவாங்கக் கூடாது என்று அவருக்கு அழுத்தம் கொடுத்து ஒப்புதல் வாங்கிவிட்டு, காயமுற்றிருந்த சிரியப் படையினரை கப்பலில் ஏக்கர் நகருக்குக் கொண்டு செல்ல அமால்ரிக்கிடம் பேசி ஏற்பாடு செய்தார் ஸலாஹுத்தீன். பேச்சுவார்த்தை நடைபெற்ற நாட்களில், ஸலாஹுத்தீன் நடந்து கொண்ட விதமும் ஏற்படுத்திக்கொண்ட நட்பும் பரங்கியர் மத்தியில் அவரது முன்னறிமுகமாக – அதுவும் நல்லறிமுகமாக அமைந்து விட்டது. பின்னர் அவரது குணாதிசயங்களை வியந்து, பாராட்டி எழுதும் மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளில் இந்நிகழ்வு முக்கியமான ஒரு தருணமாக, காட்சியாக இடம் பெற்றுவிட்டது.

மூன்று தரப்புக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டது. அலெக்ஸாந்திரியா முற்றுகை முடிவுற்றது. கவண் இயந்திரங்கள் கொளுத்தப்பட்டன. போர்க் கைதிகள் பரிமாறப்பட்டனர். பரங்கியர்களிடம் தாக்குப் பிடித்து நகரைக் காப்பாற்றியதற்காக, மக்களின் ஏகோபித்த பாராட்டுதலுடன் ஸலாஹுத்தீன் அய்யூபி நகரிலிருந்து வெளியே வந்தார்.

ஆகஸ்ட் 1167. மூன்று ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததைப் போல் ஷிர்குஹ்-அமால்ரிக் படைகள் தத்தம் ஊர் திரும்பின. இரண்டாம் சுற்றும் எத்தரப்பிற்கும் வெற்றி-தோல்வி இன்றி முடிவுற்றது.

தம் படை நலமே திரும்பி வந்ததில் நூருத்தீனுக்கு திருப்தியே. எனினும், எகிப்திய படையெடுப்புகள் பெரும் பலனின்றி வீணாகவே முடிகின்றனவே என்றொரு சோர்வு. ஆனால் விதி நூருத்தீனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியது. அடுத்த ஆண்டே நைலுக்கான போட்டி நூருத்தீனுக்கும் அமால்ரிக்குக்கும் இடையே தொடங்கியது. அது இறுதிச் சுற்றாகவும் முடிந்தது. அதைத் தொடங்கி வைத்தது?

அலெக்ஸாந்திரியாவிலிருந்து ஜெருசலம் திரும்பும் முன் ராஜா அமால்ரிக் வஸீர் ஷவாரிடம் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை.

அது-

(தொடரும்)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.