சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 66

Share this:

66. அஸாதுத்தீன் ஷிர்குஹ்வின் வெற்றி

நைல் நதியின் மேற்குக் கரையில் அஸாதுத்தீன் ஷிர்குஹ்வின் தலைமையில் நூருத்தீனின் படையும் கிழக்குக் கரையில் அமால்ரிக்கின் தலைமையில் எகிப்து-பரங்கிய கூட்டணிப் படையும் ஒன்றை ஒன்று பார்த்தபடி நின்றிருந்தன. வஸீர் ஷவாரை நெட்டித்தள்ளி, ஃபாத்திமீ கலீஃபாவின் கையுறையை உருவி, தாம் நினைத்ததை சாதித்து, தீனார்களைப் பெற்றுப் பையையும் நிரப்பிக்கொண்டதுடன் அமால்ரிக்கின் பிரதான நோக்கம் நிறைவேறி இருந்தது. எனவே அவர், கூட்டணியின் பலத்தைக் கண்டு ஷிர்குஹ் சண்டையிடாமல் ஒதுங்கிவிட்டால் போதும் போருக்கான தேவை இருக்காது; வியர்வையும் இரத்தமும் சிந்தும் அவசியம் இருக்காது என்று கருதினார். ஆனால், பரங்கிய வரலாற்று ஆசிரியரான டைரின் வில்லியம், ‘அமால்ரிக்கின் கனவில் இரண்டாம் சிலுவையுத்தத்தின் காரணகர்த்தா முனிவர் பெர்னார்ட் தோன்றினார்; அமால்ரிக்கின் கோழைத்தனத்தைத் தூற்றினார்; அதன் விளைவாக ஷிர்குஹ்வுடன் போரிடுவது என்று துணிந்தார் அமால்ரிக்’ என்று எழுதி வைத்துள்ளார்.

அது உண்மையோ, பொய்யோ? விழித்தெழுந்த அமால்ரிக்கின் மனத்தில், சிரியாவிலிருந்து கிளம்பி வந்து, தம்முடைய எகிப்துக் கனவுக்குத் தீராத உபத்திரவமாக இருக்கும் ஷிர்குஹ்வை நிரந்தரமாகத் தீர்த்துக்கட்டினால்தான் நிம்மதி என்று தீயாய்க் கோபம். ஆனால் எதிரே அந்தத் தீயின் மீது நீர் தெளிக்கும் நைல்.

நதியைக் கடக்கத் தோதான இடத்தைத் தேடினர் பரங்கிப் படையினர். தூரத்தில் ஓரிடத்தில் பெரிய தீவு ஒன்று நைல் நதியை இரு கிளைகளாகப் பிரித்தது. அங்கு மிதவைப் பாலம் அமைத்து எகிப்து-பரங்கியப் படை கிழக்கிலிருந்து மேற்குக் கரைக்கு நதியைக் கடக்கும் ஏற்பாட்டில் இறங்கியது. இப்படி ஏதாவது ஒரு முயற்சியில் அவர்கள் இறங்குவார்கள், மும்முரமாக முனைவார்கள் என்பதை ஷிர்குஹ் அறிந்தே இருந்தார். அதனால் முன்னரே திட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தார். அவர் காத்திருந்த தருணம் அதுதான். உடனே அவர் தம் படையைக் கிளப்பிக்கொண்டு தெற்கு நோக்கி ஓடினார். அவரிடமிருந்தது குதிரைப்படை மட்டுமே. அதன் எண்ணிக்கையும் வெறுமே இரண்டாயிரம். புழுதி பறக்க நாலுகால் பாய்ச்சலில் பறந்தன குதிரைகள். ‘அஞ்சிப் பின் வாங்கி ஓடுகிறார்கள் பார்’ என்ற குதூகலத்தில் அமால்ரிக் தம் குதிரைப்படையினரைத் திரட்டிக்கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்து ஓடினார்.

கெய்ரோவிலிருந்து ஒரு வாரத் தொலைவில், சற்றொப்ப 250 கி.மீ. உள்ள மினியா நகரை அடுத்துள்ள அல்-அஷ்மூனீன் என்ற இடத்தின் அருகே வந்ததும் மின் விசை தடைபட்டது போல் ஷிர்குஹ்வின் படை சட்டென்று நின்றது. தம் படையினரிடம், “வெற்றியின் தருணம் நம் கைவசமாகி விட்டது” என்று முழங்கினார் ஷிர்குஹ். அவரது திட்டத்தை அறியாமல் அவர் விரித்த வலையில் விழ, திபுதிபு என்று விரைந்து வந்தது அமால்ரிக் தலைமையிலான படை.

oOo

ஜீஸாவில் நிற்கும் போது எதிர்க் கரையில் திரண்டிருந்த எதிரிப் படையினர் எண்ணிக்கையைச் சிறப்பாகவே கணக்கிட்டிருந்தார் ஷிர்குஹ். குதிரைப் படையும் காலாட் படையுமாகப் பெருத்து நின்றிருந்த சேனை அது. கெய்ரோவின் கூப்பிடு தூரத்தில் திரண்டிருக்கும் அவர்களுக்கு உதவிப் படை, ஆயுதத் தளவாடங்கள், உணவு என, தேவைப்படும் அனைத்தும் கிடைக்கக் கூடிய அனுகூலம் அமைந்திருந்தது. அவர்களது ஊர்; அவர்களது திடல். அங்கு அவர்களைத் தமது சிறிய குதிரைப்படை எப்படிச் சமாளிக்க முடியும்? பின் வாங்கித் தஞ்சம் புக இடமும் இல்லை; நூருத்தீன் உதவிக்கு உடனே படை அனுப்பி வைக்கும் தூரத்திலும் டமாஸ்கஸ் இல்லை. எனவே எதிரிகளை அவர்களுடைய காலாட் படையிலிருந்து பிரித்து, அவர்களது ஊரை விட்டு நெடுந் தொலைவு பிரித்து இழுத்து, அவர்களது படை எண்ணிக்கையையும் குறைப்பது என்று திட்டமிட்டிருந்தார் ஷிர்குஹ். அது அப்படியே நிகழ்ந்தது. ஆனாலும் அமால்ரிக்கின் குதிரைப்படை எண்ணிக்கை?

நூருத்தீனின் உளவாளிகள் விரைந்து வந்தனர். ‘எதிரிகளின் எண்ணிக்கை மிக அதிகம். உங்களைப் பிடித்துத் தீர்த்துக் கட்டும் வெறியில் விரைகின்றனர்’ என்று தெரிவித்தனர். ஷிர்குஹ் தம் படையினருடன் ஆலோசனை நிகழ்த்தினார். அவரது படையினரிடம் பதற்றம் தொற்றியிருந்தது. டமாஸ்கஸ் திரும்பி விடுவதே உசிதம் என்று கருதினர். அவர்களும் அதை மறைக்கவில்லை. மனத்தில் உள்ளதைத் தெரிவித்தனர்.

‘பெரும் எண்ணிக்கையில் சுற்றி வளைக்கும் எதிரிகள் நம்மைத் தாக்கப் போகிறார்கள். நமது படை எண்ணிக்கையோ இரண்டாயிரம் மட்டுமே. நாம் தோற்கடிக்கப் படுவோம் என்பது சந்தேகமின்றித் தெரிகிறது. அப்படித் தோல்வியுறும்போது நாம் எங்குப் புகலிடம் தேடுவது? யாரிடம் உதவி கோருவது? நாம் நமது நாட்டை விட்டுப் பல காத தொலைவில் உள்ளோம். இங்குள்ள ஒவ்வொருவரும், குடியானவன், விவசாயி என்று அனைவரும் நமக்கு எதிரியாக உள்ளனர்; நமது உதிரத்தைக் குடிக்க விரும்புகின்றனர். இந்நிலையில் நமக்கு ஏற்படும் கவலையும் அச்சமும் இயற்கையானதே. எனவே கரையைக் கடந்து கிழக்கே சென்று அங்கிருந்து அப்படியே சிரியா திரும்பி விடுவோம்’

பெரும்பாலானவர்களின் கருத்து அதுவாகவே இருந்தது.

அந்தப் படையில் நூருத்தீனின் அடிமை ஷர்ஃபுத்தீன் புஸ்ஃகுஷ் என்பவர் இருந்தார். அவரது வீரம் வெகு பிரபல்யம். அவர் இறுதியில் பேசினார்:

‘மரணத்திற்கும் காயத்திற்கும் அஞ்சுபவரெல்லாம் மன்னர்களுக்கு சேவகம் புரியக்கூடாது; மாறாக விவசாயம் பார்த்துக்கொண்டோ, பெண்டிருக்குத் துணையாக வீட்டிலோ இருந்துவிட வேண்டும். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் அல்-மாலிக் அல்-ஆதில் நூருத்தீனிடம், இந்தப் போரில் வெற்றியடையாமலோ, குறைந்தபட்சம் போரிட்டு முயற்சி செய்யாமலோ திரும்புவீர்களேயானால், உங்களது நிலங்களை அவர் பறிமுதல் செய்வார். ‘முஸ்லிம்களின் செல்வத்திலிருந்து சம்பளமும் உபகாரமும் பெற்றுவிட்டு, எதிரிகளிடம் புறமுதுகிட்டு ஓடி வருகின்றீர்களா? அதுவும் எகிப்தை இறை மறுப்பாளர்களிடம் ஒப்படைத்துவிட்டீர்களா?’ என்று தூற்றுவார்’

“ஆம்! இதுதான் எனது கருத்தும். நான் போரிடுவேன்” என்றார் ஷிர்குஹ். தயக்கமே இன்றி அதை அப்படியே ஆமோதித்தார் ஸலாஹுத்தீன். ஒவ்வொருவராக அது அனைவரையும் தொற்றி, படையினரிடம் மனமாற்றத்தை நிகழ்த்தி… போருக்கு தயாரானது படை. உயர்ந்தன ஆயுதங்கள். சிலிர்த்து நின்றன குதிரைகள்.

அல்-அஷ்மூனீன் என்பது பஹ்ரு யூஸுஃப் கால்வாய்க்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கு. அது கி.மு. 2000இல் கட்டப்பட்ட ஆதிகாலக் கால்வாய். வடக்கே உள்ள ஃபாயும் எனப்படும் பள்ளத்திற்கு நைல் நதியிலிருந்து நீரைக் கொண்டுவர அது கட்டப்பட்டிருந்தது. அங்கே ஷிர்குஹ்வின் படை தங்களது ஓட்டத்தை நிறுத்தியிருந்த இடம் இரண்டு மலைக்குன்றுகளுக்கு இடையே உள்ள மேடான பகுதி.

படையின் மத்தியில் அனைவரது உடைமைகளையும் போட்டார் ஷிர்குஹ். அந்த மையப் பகுதி அணியின் தலைமைப் பொறுப்பை ஸலாஹுத்தீனிடம் அளித்தார். அவர்களிடம், ‘எதிரிப் படையினர் நான் படையின் மையத்தில் இருப்பதாகத்தான் நினைப்பார்கள். விளைவாக அதைக் குறிவைத்தே மும்முரமாகத் தாக்குவார்கள். நீங்கள் தற்காப்புடன் போரிட்டால் போதும். அவர்களை நோக்கிப் பாய வேண்டாம். அவர்கள் பின்வாங்கினால் மட்டும் துரத்துங்கள். ஆனால், அவர்களை அவர்களது படையின் இதர அணியிடமிருந்து பிரித்து உள் இழுக்கும் வகையில் பின் வாங்கிச் செல்லுங்கள்’ என்று கட்டளையிட்டார்.

அடுத்ததாக, முக்கியமான வீரர்களை உள்ளடக்கிய வலப்புற அணி உருவானது. ஷிர்குஹ் அந்த அணியில் கலந்தார்.

18 மார்ச் 1167. துவங்கியது போர்.

ஷிர்குஹ் எதிர்பார்த்தது போலவே, பாய்ந்து வந்த எதிரிப் படை, மையப் பகுதியைக் குறி வைத்துதான் சண்டையிட்டது. ஷிர்குஹ் அங்குதான் இருக்கிறார் என்று நினைத்தது. ஸலாஹுத்தீன், தமக்கு இடப்பட்ட கட்டளையைச் சரியாகப் பின்பற்றினார். ஷிர்குஹ்வுக்கும் அவருடைய படைப் பிரிவுக்கும் எதிரிகளின் வலப்புற அணியைச் சிதறடிக்கப் போதுமான அவகாசத்தை ஏற்படுத்தித் தந்தார். தற்காப்பாகப் போரிட்டவாறு, ஸலாஹுத்தீன் மெதுமெதுவே மலையின் மீது பின்வாங்கிப் பரங்கியர் படைகளை இழுக்க, அவர் இழுத்த இழுப்பிற்கு மலையின் மீது ஏறியது எகிப்து-பரங்கிய குதிரைப்படை.

துரிதமாக விரையும் ஆற்றல் கொண்ட சிறு குதிரைகளில் துருக்கிய வில்வீரர்கள் ஒரு புறத்திலிருந்தும் ஒட்டகங்களில் பதுஉ வீரர்கள் மற்றொரு புறத்திலிருந்தும் அந்த இரு மலைகளின் பின்புறமிருந்தும் வெளியேறி வந்து, கீழே நின்றிருந்த எதிரிகளின் படையைச் சுற்றி வளைத்தனர். அவர்கள் பின்வாங்கி ஓட முடியாதபடி சூழ்ந்தனர். ஆக்ரோஷமாகப் பாய்ந்தனர். அடுத்து-

சடசடவென்று வெட்டு, குத்து, கொத்துக் கொத்தாய் தலை சீவல். நிலமெங்கும் இரத்தம். களமெங்கும் மரண ஓலம். எதிரிகள் பலர் கொல்லப்பட்டனர். பலர் சிறைபிடிக்கப்பட்டனர். எதிரிகளின் படை துவம்சம் செய்யப்பட்டது.

ஸலாஹுத்தீனைத் துரத்திய பரங்கியரின் குதிரைப்படை திரும்பி வந்து பார்த்தால், அங்குக் கூட்டணி எகிப்தியர் துடைத்து அழிக்கப்பட்டிருந்தனர். ஜெருசல ராஜா அமால்ரிக் மயிரிழையில் உயிர் பிழைத்து, அவர்களுடன் தப்பித்து ஓடினார்.

வெறுமே இரண்டாயிரம் முஸ்லிம் வீரர்கள் கொண்ட அணி, வலிமையான எகிப்து-பரங்கியக் கூட்டு அணியை வென்று, பலரைக் கொன்று போட்டிருந்தது எதிரிகளைப் பெரும் திகைப்பில் ஆழ்த்தியது. ஆத்திரத்திலும் ஆவேசத்திலும் இயலாமையிலும் மூச்சிரைக்க வைத்தது. தொங்கிய முகத்துடன் கெய்ரோ திரும்பிய அமால்ரிக் இத்தோல்விக்கு விரைந்து பழி தீர்க்க வேண்டும் என்று துடித்தார்.

ஷிர்குஹ்வுக்கு அது முழு வெற்றி என்ற போதிலும், பின் தொடர்ந்து சென்று கெய்ரோவில் வலிமையுடன் உள்ள எதிரிகளின் மீதப் படையைத் தாக்க அவர் விரும்பவில்லை. அது சற்றும் உசிதமில்லை என்பதும் அவருக்குத் தெரியும். எனவே அவர் மின்னல் வேகத்தில் மற்றொரு காரியம் செய்தார். தலையில் இடி விழுந்ததைப் போல் திகைத்தது கெய்ரோவிலிருந்த எதிரிகள் படை.

அது-

(தொடரும்)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.