சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 65

Share this:

65. எகிப்து – இரண்டாம் சுற்று

ரபு மொழியை நன்கு கற்றிருந்த பரங்கிய சேனாதிபதிகள் இருவரை ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதிதைச் சந்திக்க அழைத்து வந்தார் வஸீர் ஷவார். அவ்விருவரையும் தம் தூதுவர்களாக அனுப்பி வைத்திருந்தார் ஜெருசல ராஜா அமால்ரிக்.

ஃபாத்திமீ கலீஃபாக்கள் வாழ்ந்த அரண்மனை, அதன் கட்டுமானம், வசதி, சொகுசு, ஆடம்பரம் அனைத்தும் பிரம்மாண்டம் என்ற வார்த்தையின் மெய் வடிவம். அனைத்திலும் கலை நுணுக்கச் சிறப்பு பொதிந்து இருந்திருக்கிறது. பரங்கித் தூதர்கள் வந்த காரியத்தை எளிதில் முடித்துக்கொண்டு போய்விடாமல், ஃபாத்திமீக்களின் படோடபத்தைப் பறைசாற்றி அவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்த வேண்டும் என்பது ஷவாரின் உள்நோக்கம். அது, அத்தூதர்களுடன் நாமும் அந்த அரண்மனைக்குள் உள்நுழைந்து பார்க்க ஒரு வாய்ப்பை நமக்கு அளித்துவிட்டது.

அவர்களை, ஆகச் சிறப்பான அலங்கரிப்புடன் திகழ்ந்த அரண்மனை வரவேற்றது. ஆயுதம் தரித்த காவலர்கள் அணிவகுத்து நின்ற பாதையினூடே அவர்களை வழி நடத்திச் சென்றார் வஸீர் ஷவார். வெளிச்சம் ஊடுருவ முடியாத குவிமாடக் கூரையின் கீழ் முடிவற்று நீண்டிருந்தது கூடம். அங்கு அவர்களது நடைப் பயணம் தொடர்ந்தது. அதன் முடிவில் மிகப் பெரிய சிற்ப வாயில். அது முன்மண்டபத்திற்கு வழிவிட்டது. அதைக் கடந்ததும் மற்றொரு வாயில். அதையடுத்து, ஆடம்பர அலங்காரத்துடன் அறைகளின் வரிசை. விழிகள் விரிய அதைக் கண்டு கடந்தால் பளிங்கு பதிக்கப்பட்டமுற்றம் வரவேற்றது.
அதைச் சுற்றிலும் பொன்னிறத் தூண்கள். அவற்றின் நடுவே தங்கத்தாலும் வெள்ளியாலுமான குழாய்களின் நீரூற்று. ஆப்பிரிக்காவின் நான்கு மூலைகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட பல வண்ணப் பறவைகள் அங்குப் பறந்துகொண்டிருந்தன.

அங்குப் பரங்கியர்களின் தூதர்களை ஃபாத்திமீ கலீஃபாவின் அந்தரங்க அலிகளுக்குக் காவலர்கள் அறிமுகப்படுத்தினர். அதையடுத்து மீண்டும் ஆடம்பர அறைகளின் வரிசை. அதன் முடிவில் அமைந்திருந்தது பெரியதொரு தோட்டம். அங்குச் செல்லப் பிராணிகளாய், நன்கு பழக்கப்படுத்தப்பட்ட மான், சிங்கம், கரடி, சிறுத்தை. கலீஃபா பொழுதுபோக்க சிறியதொரு வனவிலங்குப் பூங்காவையே ஏற்படுத்தி இருந்திருக்கின்றார்கள்.  காலும் பாதமும் நோக அனைத்தையும் கடந்தபின் இறுதியாக அவர்கள் வந்து சேர்ந்த இடம் ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதிதின் வசிப்பிடம். தை வசிப்பிடம் என்று சுருக்குவது இழுக்கு. அது உள்ளளவில் மற்றொரு அரண்மனை.

நுழைந்தால் மிக விசாலமான அறை. அங்குத் தங்கம், மரகதம், மாணிக்கம் பதிக்கப்பட்ட, பட்டுத் திரைச்சீலை தொங்கியது. வஸீர் ஷவார் அதை நெருங்கி, மும்முறை குனிந்து வணங்கி, தம்முடைய வாளைத் தரையில் கிடத்தியதும் திரைச்சீலை உயர்ந்தது. ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதித் பிரசன்னமானார். அவரது உடலைப் பட்டு அங்கி போர்த்தியிருந்தது. முகம் திரையிடப்பட்டிருந்தது. வஸீர் ஷவார் கலீஃபாவை அண்மினார்; அவரது காலடியில் அமர்ந்தார்; ஜெருசல ராஜா அமால்ரிக் முன்மொழிந்திருந்த உடன்படிக்கையை விவரித்தார். பதினாறு வயதே நிரம்பியிருந்த அல்-ஆதித் அமைதியாக அதைக் கேட்டுக்கொண்டார்; ஆமோதித்தார்; ஏற்றுக்கொண்டார்.

வந்த வேலை சுபம் என்று வஸீர் ஷவார் எழ, அவ்விரு பரங்கியர்களும் சிறு குண்டை வீசினர். ஃபாத்திமீ கலீஃபா ஆதித், இந்தக் கூட்டணி உடன்படிக்கைக்கு விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும் என்றனர். கலீஃபாவுக்குத்தான் மக்கள் சத்திய பிரமாணம் செய்வார்கள். கலீஃபாவே சத்திய பிரமாணம் செய்ய வேண்டும் என்றால்? அதுவும் பரங்கியர்களிடம்? அது அப்பட்டமான அவமரியாதையா, இல்லையா?

அல்-ஆதிதைச் சுற்றியிருந்த பிரமுகர்கள் அதைக் கேட்டுத் திகைத்து, கொதித்துவிட்டனர். அல்-ஆதிதுக்குமேகூட அதிர்ச்சி. காரியம் கெட்டு குட்டிச்சுவராகி விடுமோ என்ற அச்சத்தில் அவசர அவசரமாகக் குறுக்கிட்டார் வஸீர் ஷவார். “ஜெருசலத்துடனான இந்த உடன்படிக்கை, நமக்கு வாழ்வா சாவா எனும் தேர்வு; பரங்கியர்களின் சத்தியப் பிரமாண வேண்டுகோள் தங்களை அவமரியாதைக்கு உள்ளாக்கும் நோக்கம் என்று கலீஃபா கருத வேண்டாம்; அது அந்த மேற்கத்தியர்களின் அறியாமை; நமது சம்பிரதாயங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை” என்று மன்றாடினார்.

அதைக் கேட்டு அல்-ஆதித் எந்தளவு திருப்தியுற்றார் என்று தெரியாது. ஆனால், புன்னகைத்தார். பட்டுக் கையுறை அணிந்த தம் கையை நீட்டினார். அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதாகப் பிரமாணம் அளித்தார். ஆனால் அடுத்த குண்டை வீசினான் அத்தூதர்களுள் ஒருவன்.

‘வெறும் கையுடன் மட்டுமே பிரமாணம் அளிக்க வேண்டும். கையுறைக்குள் மறைந்த கை என்பது நாளை ஒருக்கால் நீங்கள் துரோகம் இழைப்பதற்கான அடையாளம்’ என்று ஆட்சேபித்தான்.

அந்த மண்டபம் இரண்டாம் முறையாகப் பேரதிர்ச்சிக்கு உள்ளானது. ‘கலீஃபாவுக்கு இது பேரவமானம். அவரை இழிவாகப் பேசிய அத்தூதனைத் தண்டிக்க வேண்டும்’ என்று கொதித்தார்கள் பிரமுகர்கள். மீண்டும் தலையிட்டு சமாதானப்படுத்தினார் வஸீர் ஷவார். அல்-ஆதித் அமைதியாகத் தமது கையுறைகளை நீக்கிவிட்டு, அமால்ரிக்கின் அத்தூதுர்கள் வாசித்த பிரமாண வாக்குறுதியைச் சொல்லுக்குச் சொல் பின்பற்றி ஒப்பித்து முடித்தார்.

என்னதான் அந்த உடன்படிக்கை? கலீஃபா அதை ஏற்றே ஆகவேண்டும் என்று வஸீர் ஷவாருக்கு அப்படி என்ன அடம்?

oOo

மீண்டும் சிரியாவிலிருந்து வருவோம்.

தமது உதவியுடன் எகிப்தில் அதிகாரத்தை மீட்டுக்கொண்டு, கறிவேப்பிலைபோல் தம்மைத் தூக்கி எறிந்துவிட்டு, முழு வெற்றியுடன் கெய்ரோவில் வீற்றிருக்கும் வஸீர் ஷவாரை அப்படியே விட்டுவிடுவாரா அஸாதுத்தீன் ஷிர்குஹ்? தவிரவும் எகிப்தின் பலவீன அரசியல் சூழ்நிலையையும் அதன் வசம் உள்ள அபரிமித செல்வ வளத்தையும் மனித வளத்தையும் ஷிர்குஹ்வும் அமால்ரிக்கும் நேரடியாகக் கண்டுவிட்டதால், அதன் கட்டுப்பாடு யார் வசம் வருகிறதோ அவருக்கே ஆளுமை அதிகரிக்கும், ஃபலஸ்தீன் கட்டுப்பாட்டுக்கு அது ஆக முக்கியம் என்பதை இருவருமே உணர்ந்திருந்தனர். எனவே, திரும்பி வந்த நாளாக எகிப்தின் மீது படையெடுத்துச் செல்லும் எண்ணமே ஷிர்குஹ்வின் பேச்சும் மூச்சுமாக மாறிவிட்டது.

எகிப்தின் மீதான முதல் படையெடுப்பின்போது ஷிர்குஹ்வுக்கு அங்கிருந்த ஸன்னி முஸ்லிம் அறிஞர்களின் அறிமுகமும் ஃபாத்திமீ கிலாஃபத்திற்கு எதிரானவர்களின் நட்பும் ஏற்பட்டிருந்தன. போதுமான படையினருடன், தகுந்த ஏற்பாடுகளுடன், கச்சிதமாகத் திட்டம் தீட்டினால், எகிப்தை எளிதாகக் கைப்பற்றி விடலாம் என்று அவருக்கு வலுவான நம்பிக்கை. அதை நூருத்தீனிடம் தொடர்ந்து பேசி, வலியுறுத்திக்கொண்டே இருந்தார்.

நூருத்தீன் ஒரு பணி நிமித்தமாக ஷிர்குஹ்வை பக்தாதுக்கு அனுப்பி வைக்க, அங்கு அவர் அப்பாஸிய கலீஃபா முஸ்தன்ஜித் பில்லாஹ்வைச் சந்தித்து எகிப்து விவகாரங்களை விலாவாரியாக விவரித்தார். எகிப்திலுள்ள செல்வ வளம், ஃபாத்திமீக்களால் அடக்கி வைக்கப்பட்டுள்ள ஸன்னிமுஸ்லிம் அறிஞர்களின் அவலநிலை போன்ற தகவல்கள் சரியான விகிதத்தில் தெரிவிக்கப்பட்டன. மட்டுமின்றி, தலைநகர் மக்கள் மத்தியிலும் எகிப்து விவகார விழிப்புணர்வை ஏற்படுத்த, தம் பக்தாதுப் பயணத்தைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார் ஷிர்குஹ்.

அவை யாவும் சேர்ந்து – எகிப்து படையெடுப்புக்கு அங்கீகாரம் அளித்தது பக்தாத். அப்படையெடுப்புக்குப் ‘புனிதப் போர்’ என்ற அந்தஸ்து உருவானது.

இதற்கிடையே அங்கு எகிப்தைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த வஸீர் ஷவார் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமது நிலையை உறுதிப்படுத்திக்கொண்டார். தமக்கு ஆகாதவர்களைத் தம் இஷ்டத்திற்குக் கொல்வதும் மக்களின் செல்வத்தைச் சுரண்டுவதுமாக அவர் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட, பொறுக்க முடியாமல் போன பதினாறு வயது ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதித் ஒரு கட்டத்தில் தமது உதவிக்கு வரும்படி நூருத்தீனுக்குத் தூது அனுப்பினார் என்கிறது ஒரு தகவல். ஷவாரின் கொலை வெறியிலிருந்து தப்பித்த சிலரும் டமாஸ்கஸுக்கு ஓடி வந்து முறையிட்டனர்.

அவை வஸீர் ஷவாருக்குத் தெரியுமோ தெரியாதோ, தம்முடைய துரோகத்தை ஷிர்குஹ் மன்னித்து விட்டுவிடப் போவதில்லை என்பது மட்டும் நன்றாகத் தெரியும். அதற்கேற்ப, ஷிர்குஹ் நூருத்தீனிடம் எகிப்தின் மீதான படையெடுப்பிற்குத் தூண்டிக்கொண்டே இருக்கிறார் என்ற செய்தியும் அவரை அடைந்தபடி இருந்தன. திடீரென ஷிர்குஹ் அதிரடி நடவடிக்கை நிகழ்த்தக்கூடும் என்று ஷவாரின் மனத்திற்குள் குறுகுறுப்பு. அதனால் அமால்ரிக்குடன் புதிய உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டார்.

இந்த உடன்படிக்கை, எகிப்தின் மீது அமால்ரிக்குக்கு எத்தகு பிடிமானத்தையும் ஆளுமையும் அளித்துவிடும், பரங்கியர்கள் அங்கு ஊடுருவி நிலைபெற்றுவிட வாய்ப்பு அளித்து விடும் என்பது நூருத்தீனுக்கு நன்றாகவே தெரியும். அவருக்குள் எச்சரிக்கை மணி ஓங்கி ஒலித்தது. எகிப்து மீதான படையெடுப்பு தவிர்க்க முடியாத கட்டாயமானது. எனவே அதன் மீதான இரண்டாம் படையெடுப்பிற்கு உத்தரவளித்தார். ஷிர்குஹ்வின் தலைமையில் நூருத்தீனின் படை தயாரானது. அவருடன் முக்கியமாக இடம் பெற்றார் அவருடைய சகோதரர் யூஸுஃபின் மகன் ஸலாஹுத்தீன் அய்யூபி. அந்தப் படையெடுப்பில் ஸலாஹுத்தீனுக்கு உரிய முக்கியப் பங்கு, அவரது திறமையைப் புடம் போட்டு வார்க்கும் வாய்ப்பு எகிப்தில் அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தது.

ஹி.562/கி.பி.1167 ஜனவரி. இரண்டாயிரம் எண்ணிக்கை கொண்ட குதிரைப்படை சிரியாவிலிருந்து எகிப்து நோக்கிக் கிளம்பியது.

இத்தகவலை அறிந்த ஷவார் உடனே அமால்ரிக்குத் தகவல் அனுப்பினார். எகிப்தின் மீது தீராக் காதலுடன் காத்திருந்த அவருக்கு அத்தகவல் இனித்தது ஒருபுறம் என்றால், நூருத்தீன் எகிப்தில் தன் கொடியை நாட்டிவிட்டால் அது ஜெருசல ராஜாங்கத்திற்கு எத்தகு அபாயம் என்ற எச்சரிக்கை மற்றொரு புறம். மூன்று ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் தங்களது படை இருக்கும்போது நூருத்தீன் பரங்கியர்களின் பகுதிகளைச் சுற்றி வளைத்துத் தாக்கி, பலரைக் கொன்று தலைகளைக் காட்சிப்படுத்தியது நினைவில் நிழலாடி திகில் ஏற்படுத்தியது. ஜெருசலத்திலிருந்து 50 கி.மீ. வடக்கே உள்ள நப்லஸ் நகரில் இராணுவ முக்கியஸ்தர்கள் உடனே கூடி ஆலோசனை நடத்தினார்கள். ஜெருசலம் முழு வீச்சிலான தற்காப்பு ஏற்பாடுகளை முடுக்க வேண்டும்; முழு படை பலத்துடன் எகிப்துக்கு உதவ வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.

மிகப் பெரும் எண்ணிக்கையிலான அமால்ரிக்கின் படை ஜெருசலத்திலிருந்து எகிப்து நோக்கி அணிவகுத்தது.

சிரியாவுக்கும் ஜெருசலத்துக்கும் எகிப்தில் இரண்டாம் சுற்று ஆட்டம் ஆரம்பித்தது

oOo

பரங்கியர் ராஜா அமால்ரிக் தம் படையுடன் எகிப்தை வந்தடைந்தார். வஸீர் ஷவாரின் எகிப்தியப் படையுடன் இணைந்தார். இருவரும் ஷிர்குஹ்வின் வருகையை எதிர்பார்த்து கெய்ரோவில் தயாராகக் காத்திருந்தனர்.

தமது படை வரும் தகவல் எகிப்துக்குத் தெரிந்திருக்கும்; பரங்கியர்கள் பாதையில் இடைமறித்துத் தாக்க வருவார்கள் என்ற எச்சரிக்கை ஷிர்குஹ்வுக்கு இருந்தது. அவ்விதம் ஆங்காங்கே பரங்கியர்களின் சிறு படைக்குழுக்களும் காத்திருந்தன. அதனால், அத்தகு பாதைகளைத் தவிர்த்துவிட்டே தமது பயண வழித்தடத்தை அமைத்தார் அவர். சூயஸ் கால்வாயின் பூசந்தியிலிருந்து சில நாள் தொலைவுள்ள இடத்தை அவரது படை வந்தடைந்தது.

ISTHMUSபூசந்தி என்பது இணைநிலம். இரு வேறு நிலப்பகுதிகளை இணைக்கும் இயற்கைப் பாலம். சூயஸ் கால்வாயின் பூசந்தி மத்தியதரைக் கடலுக்கும் செங்கடலுக்கும் இடையே அமைந்துள்ள 125 கி.மீ. அகலமுள்ள இணைநிலம். ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான எல்லை அது. எகிப்தின் பிரதான நிலப்பகுதியை சினாய் தீபகற்பத்திலிருந்து பிரித்து வைத்துள்ளது.

அங்கு வந்து சேர்ந்த ஷிர்குஹ்வின் படையை மணல் புயல் தாக்கியது. கடுமையான வேகத்தில் சுழன்றடித்த அப்புயலில் படையினர் சிலர் இறந்தனர். பலருக்கு மூக்கில், தொண்டையில் அழற்சி. வெகுவாக பலவீனமடைந்தது படை. இருப்பினும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதவராய், தமது படையை வழிநடத்தி, சூயஸ் பூசந்தியைக் கடந்தார் ஷிர்குஹ்.

கெய்ரோவில் ஷவாரும் அமால்ரிக்கும் ஷிர்குஹ்வின் படை வருகையை எதிர்பார்த்துக் கிழக்குத் திசையைப் பார்த்தபடி நின்றிருக்க, அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத காரியத்தைச் செய்தார் அவர். அனைத்து ஏற்பாடுகளுடனும் நிற்கும் அம்மாபெரும் படையைத் தமது சிறிய படை, அதுவும் சோதனைகளைக் கடந்து அலுத்துக் களைத்து வந்திருக்கும் படை, எதிர்த்து நின்று அவர்களது களத்தில் மோதுவது தற்கொலைக்கு ஒப்பாக அல்லவா முடியும்? ஆகவே கெய்ரோவைத் தவிர்த்துவிட்டு, நகரின் தெற்குப் புறமாகச் சுற்றி வளைத்து தூரமாகச் சென்று இத்ஃபீஹ் என்ற இடத்தில் நைல் நதிக்கரையை அடைந்தார். அங்கிருந்து சிறு படகுகளில் அவரது படை நதியைக் கடந்து மேற்குக் கரைக்குச் சென்றது. கூர்நுதிக் கோபுரங்களின் (Pyramids) ஜீஸா நகரைக் கைப்பற்றி அங்கே முகாமிட்டது. ஓய்வுக்கு இடமளிக்காமல் துரிதகதியில் ஷிர்குஹ் அவற்றை நிகழ்த்தி முடித்தார்.

மேற்குக் கரையில் ஜீஸாவில் அஸாதுத்தீன் ஷிர்குஹ்வும் அவரது படையினரும் முகாமிட்டு நின்றிருக்க, கிழக்குக் கரையில் கெய்ரோவில் ஃபாத்திமீ-பரங்கியர் கூட்டணிப் படை கையைப் பிசைந்தபடி பார்த்திருக்க, இடையே நைல் நதி ஷிர்குஹ்வுக்குப் பாதுகாப்பு அரணாக ஓடிக்கொண்டிருந்தது.

ஷிர்குஹ் தம் தூதன் ஒருவனை அழைத்தார். வஸீர் ஷவாருக்குத் தூது மடல் கொடுத்து அனுப்பினார்.

‘பரங்கியர்கள் நமது தயவில் உள்ளனர். அவர்களுடைய உறவைத் துண்டியுங்கள். நமது படைகளை ஒன்றிணைத்து அவர்களைத் தீர்த்துக்கட்டுவோம். காலம் கனிந்துள்ளது; இப்படியொரு வாய்ப்பு மீண்டும் அமையாது’ என்று எழுதி பரங்கியர்களுக்கு எதிரான ஜிஹாதிற்கு அவர் ஷவாருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஷிர்குஹ் எகிப்துக்குக் கிளம்பி வந்ததோ வஸீர் ஷவாரை நசுக்க. ஆனால் அவர் அனுப்பிய இந்தத் தூதுச் செய்தியோ அதே ஷவாருடன் கைகோர்த்துப் பரங்கியர்களை அழிக்க. அவருக்கு அச்சமயம் ஃபாத்திமீக்களின் எகிப்தைவிடப் பரங்கியர்களை வீழ்த்தி ஜெருசலத்தை நெருங்குவது முன்னுரிமை ஆகிவிட்டது. அதற்காக அவர் தமக்கு துரோகம் இழைத்த ஃபாத்திமீ வஸீர் ஷவாருடன் கைகோர்க்கத் தயங்கவில்லை என்றே அதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் வஸீர் ஷவார்?

அந்த தூதுச் செய்தியை நிராகரித்ததுடன் நில்லாமல், தூதுவர்களுக்கான பாதுகாப்பு சம்பிரதாயத்தைத் தூக்கி எறிந்து, ஷிர்குஹ்வின் தூதனைக் கொன்றுவிட்டு, அந்த மடலையும் எடுத்து வந்து அமால்ரிக்கிடமே ஒப்படைத்தார். உமக்கே எனது விசுவாசம் என்று நின்றார். ஆனால் அது அமால்ரிக்கிடம் ஷவாரின் நம்பகத்தன்மை குறித்து மேலதிக எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியதுதான் மிச்சம்.

தேவைப்பட்டால் தேய்வதும் காரியம் ஆனதும் கழுத்தறுப்பதும் ஷவாருடன் பிறந்த வியாதி என்பதை ஷிர்குஹ்விடம் அவர் நடந்துகொண்டதை வைத்துப் புரிந்திருந்த அமால்ரிக், ஷவாரின் இந்த இக்கட்டான நேரத்தைத் தமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளத் திட்டமிட்டார். கெய்ரோவின்மீது தமது முழு அதிகாரத்தை நிலைநாட்ட முடிவெடுத்தார். எகிப்து ஜெருசலத்தின் கறவை மாடாக இருக்க வேண்டும் என்று ஒருமுறை சொல்லியிருந்தார் அமால்ரிக். அவருடைய இராணுவ ஆலோசகர்கள் இதுதான் நேரம் என்று அதை நினைவூட்டி அமால்ரிக்கை வற்புறுத்தினர்.

ஷவாரை அழைத்த அமால்ரிக், “நாங்கள் உனக்கு உதவ வேண்டும் என்றால் எகிப்து எங்களுக்கு நான்கு இலட்சம் தீனார் தர வேண்டும். அதில் பாதி உடனே வேண்டும்; மீதம் பிறகு. இந்த உடன்படிக்கையை ஃபாத்திமீ கலீஃபாவே ஏற்றுக்கொண்டு உறுதிமொழி அளிக்க வேண்டும்; கையெழுத்து இட வேண்டும். அதற்கென நான் இரண்டு தூதர்களை அனுப்பி வைப்பேன். இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டால் சேர்ந்து போரிடுவோம். இல்லையா, நாங்கள் வந்த வழியே ஜெருசலத்திற்குப் போய் விடுகிறோம். ஷிர்குஹ்வை எதிர்ப்பது உன் சமர்த்து” என்று தெரிவித்துவிட்டார்.

வஸீர் ஷவாருக்கு வேறு வழி? அதையடுத்து அவர் தூதர்களுடன் வழி நடந்து ஃபாத்திமீ கலீஃபாவைச் சந்தித்த நிகழ்வுதான் நாம் மேலே பார்த்தது.

அல்-ஆதித் சத்தியப் பிரமாணம் செய்து உடன்படிக்கையை ஏற்று, முன் பணத் தொகையையும் அளித்தபின், ஃபாத்திமீக்களும் பரங்கியர்களும் கூடி வியூகத்தை விவாதித்தனர். அமால்ரிக்கின் தலைமையில் ஒரு படை நைல் நதியைக் கடந்து ஷிர்குஹ்வைத் தாக்குவது; அச்சிறு படையைத் துடைத்து எறிவது என்று முடிவானது.

ஆனால், மறுகரையில் நிகழ்பவற்றை உற்றுக் கவனித்து வந்த அஸாதுத்தீன் ஷிர்குஹ் ஃபாத்திமீ-பரங்கியர் கூட்டணிக்கு மற்றொரு அதிர்ச்சியை அளிக்கத் திட்டமிட்டிருந்தார். அதை உடனே செயல்படுத்தினார்.

அது-

(தொடரும் …)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.