போலி என்கவுண்டர்கள்: குஜராத் அரசிற்கு உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு!

புதுடில்லி: மாநில காவல்துறை நடத்திய போலி என்கவுண்டர் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க குஜராத் அரசிற்கு உச்சநீதி மன்றம் இறுதி கெடு விதித்தது.

இது தொடர்பாக குஜராத் அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் சமர்ப்பித்த கோரிக்கை மனுவை நீதிபதிகள் C.K. தக்கர், தருண் சாட்டர்ஜி அடங்கிய பெஞ்ச் அங்கீகாரம் வழங்கியது.

இவ்வழக்கில் வாதங்களையும் அது தொடர்பான பிரதிவாதங்களையும் வரும் 27 ஆம் தேதிக்கு மாற்றி வைத்து உத்தரவிட்டது. கடந்த இரண்டு வருடங்களாக காணாமல் போன தன் சகோதரனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த குஜராத் அரசிற்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி ருப்பாபுத்தீன் ஷெய்க் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கில் கடந்தமுறை வாதங்களைக் கேட்டபோது, வழக்கு தொடுத்தவரின் சகோதரன் கொல்லப்பட்டதாக முதல்முறையாக மோடி அரசு ஒப்புக் கொண்டு, ஐ.பி.எஸ் அதிகாரிகள் தொடங்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் நீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்திருந்தது. விசாரணை இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால் குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டி குஜராத் அரசு நீதிமன்றத்தில் மேலும் சில நாட்கள் அவகாசம் கேட்டிருந்தது.

2002 ல் நடந்த கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரத்திற்கு இடையில், காஷ்மீர் காவல்துறை மற்றும் இராணுவத்தினரைப் போன்று பணி உயர்வுக்கும், பதக்கத்துக்கும் ஆசைப்பட்டு உயர் காவல்துறை அதிகாரிகள் போலி மோதல்கள் (Encounters) நடத்தி அதிகமான சிறுபான்மையினரை கொலை செய்துள்ள செயல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW-UP :

உச்சநீதி மன்றம் கொடுத்த நெருக்கடிக்கு பணிந்து தற்போதைக்கு மூன்று ஐ பி எஸ் அதிகாரிகள் மீது குஜராத் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன்(மதுரை), தினேஷ்குமார் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளும் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ருப்பாபுத்தீனின் சகோதரரான சொராபுத்தீன் ஷேக்கை கொலை செய்வதை நேரில் பார்த்த துளசிராம் பிரஜாபதி என்பவரும் இதே அதிகாரிகளால் போலி என்கவுண்டர் மூலம் பின்னர் கொலை செய்ததை குஜராத் அரசு இப்போது ஒப்புக்கொண்டுள்ளது. ஷேக்கை கொலை செய்ததற்கு, “அவர் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்” என்றும் “குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருந்தார்” என்றும் குஜராத் போலீஸ் தரப்பில் காரணங்கள் கூறப்பட்டிருந்தன. இவை அனைத்தும் பொய் என்பது தற்போதைய மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஐ பி எஸ் அதிகாரி வன்சாரா பணியில் இருந்த பல இடங்களிலும் இதற்கு முன்பும் இதே போன்ற பல என்கவுண்டர்கள் இதே காரணங்களைக் கூறி நடத்தப்பட்டிருக்கின்றன. வன்சாரா தீவிரவாத ஒழிப்புப் பிரிவு டிஐஜியாக இருந்த சமயத்தில் தான் பிரஜாபதியையும் அப்பகுதியில் போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

வன்சாராவின் நீளும் என்கவுண்டர் பட்டியலில் பலியானவர்களின் சிலரை மட்டும் இங்கே பட்டியலிட்டுள்ளோம்:

–  22 அக்டோபர் 2002 அன்று அகமதாபாத் நகரின் உஸ்மான்புரா கார்டன் என்ற இடத்தில் சமீர்கான் பதான் என்பவர் மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக கூறி சுட்டுக் கொல்லப்பட்டார்.

–  13 ஜனவரி 2003 அன்று நரோடா என்ற இடத்தில் சாதிக் ஜமால் மெஹ்தார் என்பவரை அத்வானி, மோடி, வி.எச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியா உள்ளிட்டோரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி சுட்டுக் கொல்லப்பட்டார்.  அப்போதும் இதே வன்சாரா குற்றப்பிரிவில் தான் பணியாற்றி வந்தார்.

–  15 ஜூன் மாதம் 2004 அன்று 19 வயது கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் உள்பட நான்கு பேரை தீவிரவாதிகள் எனக் கூறி என்கவுண்டர் மூலம் போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தின்போது வன்சாரா, குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்தார்.

தீவிரவாதிகள், ஹிந்துத்துவ தலைவர்களைக் கொல்ல சதி, லஷ்கரே தொய்பா தீவிரவாதி என்ற பெயர்களில் இந்திய போலீசாரால் நடத்தப்பட்ட என்கவுண்டர்கள் அனைத்தையும் இதே போன்று மத்திய புலனாய்வுத் துறையால் விசாரணை நடத்தப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட காரணங்களை கூறி ஒரு இஸ்லாமியர் சர்வ சாதாரணமாக போலீசாரால் கொல்லப்படும்பொழுது அதனைக் குறித்து எவ்வித கேள்வியும் கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சமுதாய தலைவர்கள், அமைப்புகள் இருக்கும்வரை இத்தகைய அநியாயங்களுக்கு முடிவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது.