அமெரிக்கா பாசிசப்பாதையில்: 10 அறிகுறிகள்

ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் மிக உன்னத நாடாகத் தன்னைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அமெரிக்கா எப்படி பாசிசப் பாதையில் படுவேகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை கார்டியன் பத்திரிக்கை அலசியுள்ளது.

1. மிகப்பயங்கரமாக நாட்டு மக்களைப் பயமுறுத்துதல்

'இஸ்லாமியத் தீவிரவாதம்' என்ற சொல்லை மந்திரம் போல் சொல்லி அதன் மூலம் பேரழிவு ஏற்படப் போவதைப் போல் ஒரு தோற்றத்தை உருவாக்குதல்.

2. மோசமான சூழலில் சிறை ஒன்றை உருவாக்குதல்

எல்லோரையும் பயமுறுத்தியாகிவிட்டதா, சட்ட எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சிறை உருவாக்கி அதில் மோசமான சூழலில் வழக்கே இல்லாமல் தனக்குப் பிடிக்காதவர்களைப் பிடித்து அடைத்துத் துன்புறுத்தல்

3. ரவுடிக்கூட்டத்தை உருவாக்குதல்

காவல் ரோந்து என்ற பணிக்கு ரவுடிக்கூட்டம் ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு சட்டப்பாதுகாப்பும் அழித்தல். இந்தக் கூட்டம் வீடு புகுந்து என்ன வேண்டுமானாலும் செய்யும் நீங்கள் சந்தேக வளையத்தில் வந்தால்..

4. உள்நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் எல்லாவற்றையும் கண்காணித்தல்

ஒரு தனிமனிதனுக்கு என்று தனிப்பட்ட சுதந்திரம், தனிப்பட்ட வாழ்க்கை என்ற ஒன்றே இல்லாமல் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி தனிமனித சுதந்திரத்தில் தலையிடுதல்

5. மக்கள் உரிமைக் குழுக்களைச் சித்திரவதை செய்தல்

இதெல்லாம் என்ன நியாயம் என்று எந்த தனிநபரோ இயக்கமோ கேள்வி கேட்டால் அவர்களுக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என்ற சந்தேகத்தைக் கிளப்பி சிறையிலடைத்துச் சித்திரவதை செய்தல்

6. மனதுக்குத் தோன்றியபடி கைது செய்தல், விடுவித்தல்

ஒருவர் சந்தேக வளையத்தில் வந்துவிட்டாரா அவரை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்தல், பின்னார் வழக்கு ஏதும் அவர் மீது போட இயலாமல் விடுவித்தல் இதையே தொடர்ந்து செய்தல்.

7. முக்கிய ஆர்வலர்கள் / அரசு அலுவலர்களைக் குறிவைத்தல்

யாரேனும் மனித உரிமைச், சுதந்திரம் என்று பேசிவிட்டார்கள் எனில் அவர்களைப் பயமுறுத்தல், அரசு ஊழியர்கள் என்றால் அவர்களைத் தங்கள் ஆணைப்படி நடக்கவேண்டும் என்று மிரட்டுதல்

8. ஊடகங்களைக் கட்டுப்படுத்தல்

கருத்துச் சுதந்திர சொர்க்கமான அமெரிக்காவில் ஊடகக்கட்டுப்பாடா என்று வியக்க வேண்டாம். உண்மையில் அமெரிக்காவில் ஊடகங்களைக் கட்டுப்படுத்த இயலாது ஆனால் உண்மைகளை விட அதிகமான பொய்களைப் பெருமளவில் கலக்க விடுதலும் ஒரு வகையில் கட்டுப்படுத்தல் தானே?

9. விமர்சனம் என்பது தேசதுரோகம் என அறிவித்தல்

ஆட்சியில் இருப்பவர் செய்யும் அனைத்தையும் ஒத்துக் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் இல்லையேல் தேசதுரோகிப் பட்டம் கட்டி மூலையில் கிடத்தி விடுதல்.

10. சட்டம் ஒழுங்கு எல்லாம் ஏட்டளவிலேயே

புதிது புதிதாக சட்டத் திருத்தம் என்ற பெயரில் சட்டத்தையே இல்லாமல் செய்து விடுதல். அதாவது அமெரிக்க அதிபர் விரும்பினால், போர், இயற்கைச் சீரழிவு அல்லது அவர் தேவை என நினைக்கும் எந்த சூழலுக்கும் அமெரிக்கப் படையைப் பணியில் ஈடுபடச்செய்ய இயலும் என்பது போன்ற திருத்தங்கள் கொண்டுவருதல்.

இது எல்லாம் நடந்து கொண்டிருக்கும் அமெரிக்கா பாசிசப்பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது.

முழுக்கட்டுரையும் விரிவான அலசலும் கார்டியன் தளத்தில் உள்ளது.

தகவல்: இப்னு ஹமீது.