பாலையில் வருமா சோலை? (பகுதி -2)

டிதத்தைப் படித்துக் கொண்டிருந்த என் இதயம் நொறுங்கக் காரணம்…….

மாமா மகள் ஸாஜிதாவின் கணவர் மவ்த்தாகி விட்டாராம்! இன்னா லில்லாஹ் … ஸாஜிதா விதவையாகி விட்டாளா? யா அல்லாஹ் … என்ன வேதனை இது! பெயருக்கேற்றவளாய் உன்னை வேளை தவறாமல் வணங்குபளாயிற்றே! அவளுக்கா இந்த வயதில் விதவைக் கோலம்? உண்மையான அதிர்ச்சியால் உள்ளம் குலுங்கியது!

‘என் அருமை மகளுடைய நிலையை நினைத்து என் மனம் இரத்தக் கண்ணீர் வடிக்கிறது! உன் தந்தைக்குக் கொடுத்த வாக்கை மீறி, என் மகளுக்கு நானே தீங்கைத் தேடி வைத்து விட்டேன். அல்லாஹ் என்னைச் சரியான வகையில் தண்டித்து விட்டான். எல்லாமே அவன் நாடியபடிதானே நடக்கும்? நான் உனக்குச் செய்த தீங்கை மறந்து என்னை மன்னித்து விடு”

கடிதத்தில் மாமா புலம்பியிருக்கிறார்.

அன்றைக்கு நான் ஸாஜிதாவைப் பற்றிப் பேச்செடுத்ததும் பழைய நிலையை மறந்து அந்தஸ்து, தகுதி எனக் குதியாய்க் குதித்தார். சிறுவயது முதல் ஸாஜிதாவும் நானும்தான் பொண்ணு-மாப்பிள்ளை என்று இரு குடும்பத்தாராலும் முடிவு செய்யப் பட்டோம். என் தந்தையும் மாமாவும் ஒருவருக்கொருவர் வாக்குக் கொடுத்திருந்தனர். வருங்கால வீட்டு மருமகளுக்கு இறைவேதத்தையும் இஸ்லாத்தின் நெறிமுறைகளையும் மிகுந்த அக்கறையுடன் போதித்தார் தந்தை.

அப்போது மாமாவின் குடும்பம் இத்தனை வசதி படைத்திருக்கவில்லை . ஸாஜிதா பெரும்பாலும் எங்கள் வீட்டிலேயே வளர்ந்து வந்தாள். ஸாஜிதாவுக்குப் பெயர் சூட்டியதும் என் தந்தைதான்.

அழகும் அறிவும் அடக்கமும் ஒருங்கே அமையப் பெற்றவள் ஸாஜிதா. அவளைக் குர்ஆன் ஓதச் சொல்லி நான் பாடம் கேட்ட நாட்கள்தாம் எத்துணை இனிமையானவை! கடினமான சொற்களைக்கூட எளிதாகவும் இனிமையாகவும் அவள் ஓதக் கேட்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவுமிருக்கும்! ‘இந்த இனிமை எனக்கேதான் சொந்தமாகப் போகிறது’ என்ற எண்ணமே இதயத்தை நிறைத்து நிற்கும்!.

வெகு உற்சாகத்துடன் மளமளவென என் மனதில் எழுந்து நின்ற மாளிகை, ஒரேநாளில் இடிந்து, தவிடுபொடியாகுமென சிறிதேனும் நான் எண்ணவில்லை!

ஹூ…ம் அந்த நாளும் வந்தது!

இறைவனின் கடும் சோதனையாக, எனக்கும் என் உம்மாவுக்கும் ஒரே ஆதவராயிருந்த என் தந்தையைப் பறிகொடுத்தபின், வறுமைக் கோலால் குத்தப் பட்டு நாங்களிருவரும் வேதனைத் தீயில் வாட்டப் பட்ட சமயத்தில், ஆதரவு தர முன்வராதது மட்டுமின்றி செல்வம் சேர்ந்து கொண்டிருந்த செருக்கில், ஆதரவு கேட்டுப் போன என்னை அவமானச் சாட்டை கொண்டு விளாசவும் செய்தார் இதே மாமா .

ரணம் இன்னும் ஆறவில்லை…!

()()()

ற்றுமுன்வரை நீலப்பட்டாடை உடுத்தி எழில் காட்டிக் கொண்டிருந்த வானம், மேகத் துப்பட்டியைப் போர்த்துக் கொண்டு விட்டது .

இன்றும் மழை வருமோ? யோசித்துக் கொண்டே தாய்மாமாவின் புதுவீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன் – எங்களுடைய பழைய வீட்டைப் பற்றிய கவலைகளோடு! சிறு தூறலாக இருந்தால்தான் எங்கள் வீடு தாக்குப் பிடிக்கும். பெருமழை பெய்தாலோ, எங்கள் துன்பத்தில் பங்கு கொள்வதுபோல் வீடும் கண்ணீர் விட்டழும். ஓடு மாற்ற வேண்டுமென்றால்கூட இருநூறு ரூபாய் தேவைப்படுமே! கணக்கெழுதிக் கொடுக்கும் கடைகளிலிருந்து கிடைக்கும் வருமானம் இரு வயிறுகளை நிரப்ப மட்டுமே சரியாயிருக்கிறது. வீட்டை எப்படி-எப்போது பழுது பார்ப்பது?

இருக்கின்ற துன்பங்கள் போதாதென்று இன்றுகாலை என் காதுகளுக்கு எட்டிய செய்தியால் மனம் போர்க்களமாகிக் கிடக்கின்றது!

ஸாஜிதாவுக்குப் பக்கத்து ஊரில் மாப்பிள்ளை பார்த்திருக்கிறாராம் மாமா. உம்மாவிடம் செய்தியைச் சொன்னபோது, “நானும் கேள்விப்பட்டேனப்பா. போகட்டும்; விட்டுத் தள்ளு” என்று பற்றில்லாமல் பதில் சொல்கிறார்கள்.

அதெப்படி விடமுடியும்? எனக்கென்று பிறந்தவளை இன்னொருவருக்கு விட்டுக் கொடுப்பதா? இன்றைய நிலையில் நான் வசதிக் குறைவுடனும் அவர் கொஞ்சம் வசதியில் முன்னேற்றத்துடனும் வாழ்பவர்களாக இருக்கலாம்; மூன்றாண்டுகளுக்கு முன்னர்? நிலைமை தலைகீழாகவன்றோ இருந்தது? கேட்க வேண்டிய எல்லாவற்றையும் நேரடியாக மாமாவிடம் கேட்டுவிட வேண்டும் என்ற துணிவில்தான் வீட்டை விட்டே புறப்பட்டேன்.

மாமாவின் வீடும் நெருங்கி விட்டது. அவரிடம் பேசவேண்டியவற்றை மனதுக்குள் வரிசைப் படுத்திக் கொண்டு, படியேறி கதவைத் தட்…

தாமதித்தேன்!

மிக மெல்லிய தொனியில் இனிமையாக இறைமறை ஓதப்படும் குரலோசை. ஸாஜிதாதான் ஓதுகிறாள்! முன்பைவிட குரல் இனிமையாக மாறி விட்டிருக்கிறது. ஓ…! இந்த இனிய குரலைக் கேட்டுத்தான் எத்தனை காலமாகிறது!

“ஹா…….ச் …. அல்ஹம்து லில்லாஹ்” நேற்றைய மழையில் நனைந்ததற்கான இன்றைய பரிசு !

“யா…ரது?” இனிய குரல் வினவியது.

‘நான்தான்’ என்று சொல்லப் போனவன் நிறுத்திக் கொண்டேன். சிறுபொழுது தாமதித்து, “யாரது … வாசல்லே?” எத்தனை மென்மை! இருப்பினும் இறைவன் அறிவுறுத்தலுக்கேற்றவாறு குழைவு இல்லாத, அதட்டலுடன் கூடிய கம்பீரம்!

தொண்டையை கனைத்துச் சரிசெய்து கொண்டேன்.

“அப்துல் ஹமீது”

என் குரலில் என்றுமில்லாத கம்பீரம் குடிகொண்டிருந்தது எனக்கே வியப்பாயிருந்தது! உள்ளே பரபரவென அவள் நடந்து செல்வதும் கிசுகிசுக் குரலில் ஏதோ சொல்வதும் தெளிவின்றிக் கேட்கிறது.

“வாங்க… உள்ள வாங்க மச்சான்!” கதவைத் திறந்து ஒதுங்கி நின்று என்னை வரவேற்பது…. சாபிராவா? இந்த வாண்டு எப்படி அதற்குள் இத்தனை வளர்ந்து விட்டாள்! மூன்று வருட காலமாக இரு வீட்டாருக்குமிடையே ஏற்பட்டுவிட்ட இடைவெளி சட்டெனெப் புலனாகிறது!

“எல்லாரும் சுகமா இருக்கீங்களா? எத்தனாவது படிக்கிறே?” கேட்டுக் கொண்டே உள்ளே நுழைகிறேன். வீட்டிற்குள் தென்பட்ட மாற்றங்கள் மாமாவின் ஏற்றத்தைப் பறைசாற்றின.

“போன வருஷம் படிப்பை நிறுத்தியாச்சி! படிச்சது போதும்னு, வாப்பா பள்ளிக்கூடம் போக வேணாம்னுட்டாங்க! மதரஸா உஸ்தாது இங்க வந்து ஓதித் தராங்க!”

“நீதான் கொஞ்ச முன்னாடி குர்ஆன் ஓதிக்கிட்டிருந்தியா?” தெரியாததுபோல் கேட்டேன்.

“இல்லயே!” என்றவள் சிரித்துக் கொண்டே “அக்…காதான் ” வலப்பக்க அறையைச் சுட்டி விட்டு மீண்டும் சிரித்தாள் .

என் மனதுக்குள் ஒரு ரோஜா மெதுவாய் மலர்ந்தது!

“வாப்பா வீட்ல இல்லயா சாபிரா?” பேச்சை மாற்றி, வந்த வேலையில் கவனம் செலுத்தினேன்.

“வாங்க தம்பி! அவங்க தூங்கிக்கிட்டிருக்காங்க. உக்காருங்க” அடுக்களையிலிருந்து வந்த மாமி, பட்டும் படாமலும் சொல்லி விட்டு மாமாவை எழுப்பப் போகிறார்கள். நான் நின்று கொண்டே இருக்கிறேன். வலப்பக்க அறையிலிருந்து வளையல்களின் சலசல ஒலி, ‘மச்சான உக்காரச் சொல்லு’ என்று தங்கச்சிக்காரிக்கு உத்தரவிட்டது. உணர்ந்து கொண்டவளாக “உக்காருங்க மச்சான்” என்றாள் சாபிரா. நான் நின்று கொண்டிருந்தேன், மாமா வரட்டும்.

“ஹமீதா…? வா, வா! என்ன … இந்தப் பக்கம் ரொம்ப நாளைக்கப் பொறவு காத்தடிக்குது?” தூக்கக் கலக்கத்துடன் வரவேற்றார் மாமா. ‘காத்தடிக்கல்லே; என் மனசிலே புயலே அடிக்குது’ என நினைத்துக் கொண்டு, “ஒண்ணுமில்லே மாமா! ஒரு சேதி கேள்விப் பட்டேன். அதப் பத்தி உங்கள்ட்டே கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்”.

“போய் டீ கொண்டு வாம்மா” மகளுக்குச் சொல்லி விட்டு, என்னிடம் திரும்பி “உக்காரு” என்று சொன்னவர் ‘என்ன விசயம்?’ என்று பார்வையால் கேட்டார்.

எதிரே கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன்.

‘எப்படி ஆரம்பித்துக் கேட்பது ?’ வெளியே சப்தம் வரமால் தொண்டைக்குள் கனைத்துக் கொண்டேன். “வெளியூர்ப் பக்கம் ஸாஜிதாவுக்கு மாப்பிள்ளை பாக்கிறதா கேள்விப்பட்டேன்…” என்று இழுத்தேன்.

“ஆமா! அதுக்கும் கல்யாண வயசாயிடுச்சி! காலாகாலத்திலே ஒரு நல்ல எடத்திலே பாத்து கட்டிக் குடுத்துடனுமில்ல… பக்கத்தூரு பட்டாமணியாரு மகனத்தான் பேசியிருக்கேன். கல்யாணத்திலே நீதான் இருந்து எல்லா வேலயும் கவனிச்சுக்கனும்” கேலியா? அல்லது எனக்கு அப்படித் தெரிகிறதா?

“இதென்ன மாமா புதுப் பேச்சு? வாப்பாவும் நீங்களும் பேசிக்கிட்டது என்னாச்சி?” என்னுள் பதற்றம் படர்கிறது.

“ஆ…மா! அப்போ பேசிக்கிட்டது. அதயே நெனச்சிக்கிட்டிருந்தா முடியுமா? இருந்த சொத்த எல்லாம் எவனெவனுக்கோ அள்ளிக் குடுத்துட்டு ஒங்க வாப்பா மகராசன் போய் சேந்திட்டாரு. இப்ப இருக்கிற நெலமயில உங்கம்மாவ காப்பாத்துறதே ஒனக்குப் பெரிய காரியம். ஒனக்கு எம் மகளக் கட்டிக் குடுத்து… அது படுற கஷ்டத்தப் பாக்க எனக்குச் சகிக்குமா? இப்ப ஊர்ல எனக்கிருக்கிற மதிப்புக்கு… எம் மகள ஒனக்குக் கல்யாணம் செஞ்சி குடுத்தா நாலுபேரு என்னப் பாத்துச் சிரிக்க மாட்டான்?”

என்னுடைய தற்போதைய சூழ்நிலையைக் குத்திக்காட்டி ஏளனமாய்ப் பேசிய பேச்சு தந்த ஆத்திரத்தைக் காட்டிலும் என் தந்தையைப் பற்றி விமர்சித்ததுதான் என்னைச் சூடாக்கியது! அவருடைய சொத்தை அவர் தருமம் செய்தார்; அதைப் பற்றிப் பேச இவருக்கென்ன அருகதை இருக்கிறது? ஹூம் … மாமா முற்றாக மாறிவிட்டார். வாப்பாவுக்கு முன்னால் நின்று பேச பயந்து கொண்டு, தூணுக்குப் பின்னால் நின்று தலைசொறிந்த மாமா இவரல்லர். இவர் யாரோ ஓர் அன்னியன் போல் உணர்ந்தேன்.

‘எனக்குப் பெண் கிடைக்காமல் உம்மிடம் வந்து மன்றாடவில்லை. வாப்பாவுடைய வார்த்தையை உத்தேசித்துதான் இவ்வளவு தூரம் வந்தேன். நீரும் வேண்டாம்; உம் பெண்ணும் வேண்….’ முடிந்த அளவு மனதை அமைதிப் படுத்திக் கொண்டேன். “அப்படி நெனக்காதீங்க! செடி வச்சவன் தண்ணி ஊத்தாம விடமாட்டான். அல்லாஹ்வெ மறந்துட்டுப் பேசக் கூடாது!”

ஊஞ்சலில் சாய்ந்திருந்தவர் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். “நீ ஆலிமோட மவன்ங்கிறது தெரியும். எனக்குப் புத்தி சொல்ல வராதே! ஒனக்கு… எம்பொண்ண… குடுக்க… எனக்கு… இஷ்டமில்லே. வேற பேச்சிருந்தா பேசு” வார்த்தைகள் முகத்தில் அறைந்தன.

‘வெளியே போ’ என்று சொல்லாமல் சொல்கிறாரா? எழுந்து கொண்டேன். சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான் மீதி!

“நான் உங்களுக்குப் புத்தி சொல்ல வரலே! வாப்பா மவுத்தாகு முந்தி, அவங்க பேச்சமீறி ‘வேற எந்தப் பொண்ணையும் நான் கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது’ன்னு எங்கிட்டருந்து உறுதி வாங்கினாங்க! இப்ப நீங்க வாக்குமீறிப் பேசுறதப் பத்தி எனக்குக் கவலயில்லே! படச்சவன் யாராருக்கு முடிச்சிப் போட்டானோ அப்டித்தானே நடக்கும்? யாரோட சந்தோஷத்திலயும் குறுக்க நிக்க நான் விரும்பல! வர்ரேன்” கடைசி வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்தேன்; உள்ளேயும் கேட்டிருக்கும்.

“என்னா தம்பி, ரொம்ப நாளக்கப்புறம் வீட்டுக்கு வந்துட்டு டீ கூட குடிக்காம கெளம்பிட்டீங்க?” கேட்டுக் கொண்டே அடுக்களையிலிருந்து மாமி வருகிறார். பின்னாலேயே டீ டம்ளர்களுடன் சாபிரா.

“இல்ல மாமி! பாங்கு சொல்லி நேரமாச்சி; ஜமாத்துல சேர்ந்திடனும். இன்னொரு நாளக்கி இன்ஷா அல்லாஹ்!” அறையில் பலகையோ எதுவோ கீழே விழும் சப்தமும் அதை அவரமாக எடுக்கப் போன கைவளையல்களின் ஓசையும்.

இறுதி விடை தருகிறாளோ? செருப்பை மாட்டிக் கொண்டேன்.

“வர்ரேன்” படிகளில் இறங்கும்போது மாமாவின் அலட்சியத்தை, செருக்கை, மமதையை ஒவ்வொன்றாக மனதுக்குள் மிதித்தேன்.

(….இறைவன் நாட்டப்படி தொடரும்…)

ஆக்கம்: ‘மதி நா’ ஜமீல்