இறைஞ்சியது அர்ஷை எட்டியதோ?

உலக இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமான திருப்பமாகக் கடந்த பத்து தினங்களுக்கு முந்தைய சமுதாய நிகழ்வொன்றில், சமுதாய ஒருங்கிணைப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஷியா-ஸுன்னீ முஸ்லிம்கள் இணைந்து ஒரே பள்ளியில் ஒரு இமாமின்(தலைவர்) தலைமையில் தொழுகை நடத்திய சம்பவம் உத்திரப் பிரதேச மாநிலத்தின் லக்னவ்வில் நடந்தது.


அதை நமது சத்தியமார்க்கம் தளத்தில் ‘இஸ்லாமிய வரலாற்றில் புதுத் திருப்பம்‘ என்ற தலைப்பில் பதிந்ததோடு,  ஒரே சமுதாயத்தின் இருபெரும் பிரிவுத் தலைவர்களுக்கும் அறிஞர்களுக்கும் இடையே இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் இப்புதிய மாற்றம், உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்களிடையே பரவுவதற்கும் அதுவே உலக முஸ்லிம்களின் ஒற்றுமைக்குத் துவக்கமாக அமைவதற்கும் அருளாளன் அல்லாஹ் அருள் புரியட்டும்! என்ற உலக முஸ்லிம்களின் ஏக்கத்தைப் பிரார்த்தனையாக அல்லாஹ்விடம் சமர்ப்பித்திருந்தோம்.

நமது இறைஞ்சுதல் அர்ஷு வரைக்கும் எட்டிவிட்டதோ என எண்ணத் தோன்றும் வண்ணமாக, கீழைச்சவூதியின் கத்தீஃப் நகரில் ‘பிரிவுக்கோடு’ அழிப்பு நிகழ்ச்சி மீண்டுமொருமுறை நிறைவேறியுள்ளது.

உலகளாவிய அளவில் ஏகாதிபத்திய சக்திகளும் சியோனிஸ, ஃபாஸிஸ சக்திகளும் முஸ்லிம்களைத் திட்டமிட்டுக் கருவறுப்பதற்கு, முஸ்லிம்களிடையே நிலவும் ஒற்றுமையின்மையும் உலக முஸ்லிம்களுக்கான தனித்ததொரு தலைமை இன்மையும் முக்கிய காரணங்களாக இதுகாறும் இருந்து வந்திருக்கின்றன. சவூதியில் ஷியா(அரசியல் பிரிவு) முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் சவூதியின் கிழக்கு மாகாணப் பகுதியில் அமைந்த நகரங்களில் ‘கத்தீஃப்’ ஒன்றாகும். அந்நகரிலுள்ள  ஷியா முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசல் ஒன்றில் ஷியா-ஸுன்னீ முஸ்லிம்கள் ஒன்றாக இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை (13-06-2008) ஜும்ஆத் தொழுகை நடத்தியுள்ளனர்.

கத்தீஃபில் நிகழ்ந்தேறிய ஷியா-ஸுன்னீ ஒருமித்த ஜும்ஆத் தொழுகை, உலக முஸ்லிம்களால் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு பார்க்கப்படுகின்ற அதேவேளை, முஸ்லிம்களைக் கொன்றொழிப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்ட பயங்கரவாத சக்திகளை அச்சத்துடனும் கவலையுடனும் பார்க்க வைத்திருக்கின்றது.

இஸ்லாம் வலியுறுத்தும் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் மீண்டுமொருமுறை அடிக்கால் நடும் இத்தகைய நிகழ்வுகள், இந்த இரு அரசியல் பிரிவினரிடையே பெருத்த மனமாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “நட்புறவும் ஒற்றுமையும் ஒரு சேர மலர்ந்ததாக” இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஸுன்னீ முஸ்லிம்கள் சார்பில் ஷேக் முக்கல்லஃப் பின் தஹம் அல்-ஷம்ரீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்தொழுகையில் ஷியா முஸ்லிம்களுக்கிடையே பிரபலமான ஷேக் ஹஸன் அல்-ஸஃபர் அவர்களின் உரை நடைபெற்றது.

இஸ்லாம் கூறும் ஒற்றுமையினை வலுப்படுத்தும் காரணிகளை வலியுறுத்தியும் அதே நேரத்தில் இஸ்லாம் கடுமையாகச் சாடும் பிரிவினைகளை நீக்கும் வழிமுறைகளைப் பற்றிய விளக்கங்களும் அந்த ஜும்ஆ உரையில் இடம் பெற்றிருந்தன.

இருபிரிவினரும் ஒன்றாய்க் கலந்து அமர்ந்திருந்த அந்த ஜும்ஆ பள்ளிவாசலில் “சகோதரத்துவத்தினை ஏற்படுத்தும் இத்தகைய நல்ல விஷயங்களை ஊக்குவிப்பதும் பிரிவினை வளர்ப்பதைத் தொழிலாகக் கொண்டுள்ள தீய சக்திகளை எதிர்ப்பதும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரின் கடைமையாகும்” என்ற ரீதியில் ஜும்ஆ உரை தொடர்ந்தது.

பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த நிகழ்வு பற்றி ஷேக் அல்-ஷம்ரீ அவர்கள் பேசுகையில் “இதே போன்ற இன்னொரு ஜும்ஆத் தொழுகையை ஷியா முஸ்லிம்கள் கூட்டாகச் சென்று அல்கோபார் பகுதியில் உள்ள மஸ்ஜித் ஒன்றில் ஸுன்னீ முஸ்லிம்களுடன் ஒன்றிணைந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொழுவதற்கு ஏற்பாடாகி இருக்கிறது” என்று சுட்டிக்காட்டினார்.

இரு வாரங்களுக்கு முன்பு “ஸுன்னீ முஸ்லிம்களை ஷியாக்கள் பெரிதும் அவமதிக்கின்றனர்” என்றும் “இஸ்லாமிய நாடுகளை வலுவிழக்கச் செய்கின்றனர்” என்றும் குற்றம் சுமத்தி, 22 ஸுன்னீ முஸ்லிம் அறிஞர்கள் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து இரு பிரிவினருக்கிடையே சலசலப்பு ஏற்பட்டிருந்தது.

ஆனால் அதனைத் தொடர்ந்து சவூதி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அந்த 22 ஆலிம்களின் அறிக்கைக்கும் சவூதி அரசுக்கும் எவ்விதத்திலும் தொடர்பு இல்லை” என்று தெரிவித்து விட்டது.

ஷியாக்களுக்கும் ஸுன்னீக்களும் இடையே நீண்டகாலமாகத் திட்டமிட்டு முறையாக உரமிட்டு வளர்த்து விடப்படும் பகைமையை இனம் கண்டு கொண்ட ஷியா-ஸுன்னீகளின் சில குழுக்கள் தமது இரு பிரிவினருக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியாக இத்தகைய ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு குடும்ப அங்கத்தவர்களிடையே சில விஷயங்களில் சில கருத்து வேறுபாடுகள் எழுவது இயற்கையே. ஆனால் அவற்றைக் காரணம் காட்டி ஒருவொருக்கொருவர் பேசாமல் இருந்து கொண்டால் அது நாளடைவில் குடும்பத்தில் பிளவினையே ஏற்படுத்தும். முஸ்லிம் சமுதாயத்தைப் பொருத்த அளவில் இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்ப காலகட்டங்களில் ஏற்பட்ட அரசியல் கருத்து வேறுபாடுகள்தாம் நாளடைவில் கொள்கை வேறுபாடுகளாகத் திரிந்து அல்லது திரிக்கப்பட்டு இக்காலம்வரை ஒரே சமுதாயம், இரு பெரும் பிரிவுகளாகப் பிரிந்து நிற்கக் காரணமாக இருந்துள்ளன.

இப்பிளவு சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய பாரதூரமான பின்விளைவுகளைத் தோற்றுவித்துள்ளதைக் காலம் கடந்தெனினும் இரு பிரிவின் சமுதாயத் தலைவர்களும் உணர்ந்து தங்களிடையே பிணைப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது மகிழ்ச்சியை அளிக்கின்றது!.

பரஸ்பரம் ஒன்றிணைந்து கலந்துறவாடுவதன் மூலம் தங்களின் நிலைப்பாடுகளை ஒருவொருக்கொருவர் பரிமாறிக் கொள்வதன் மூலமும் மட்டுமே கருத்து வேறுபாடுகள் களையப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதை விடுத்து ஒருவரையொருவர் பொதுவில் குற்றம் சுமத்தித் தங்களின் நிலைப்பாடுகள்தாம் சரியானவை என அறிக்கைப் போர் நடத்துவதை விடுத்து, இனிவரும் காலங்களிலாவது சமுதாயத் தலைவர்கள் உணர்ந்து தங்களின் நடவடிக்கைகளில் ஒற்றுமைக்கான மாற்றங்களைக் கொண்டு வரட்டும்.

சமுதாயம் பிரிந்து கிடப்பதில் மட்டுமே தங்களின் நிலைநிற்பு உள்ளதைத் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ள மேற்கத்திய, சியோனிஸ கூட்டணி, ஷியா-ஸுன்னீ பிரிவினரிடைய ஏற்பட்டுள்ள இப்பெரும் மாற்றத்தை அதீத அச்சத்துடனே எதிர் கொள்ளும் என்பதையும் இச்சமுதாய ஒன்றிணைதலை எப்பாடு பட்டேனும் நீடிக்க விடாமல் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்பதையும் தனியாகக் கூறித் தெரிய வேண்டியதில்லை.

“சஹாபாக்களைக் காஃபிர் என்றவர்கள், தனிக் கலிமா உள்ளவர்கள், தனிக் குர்-ஆன் உள்ளவர்கள், முஹர்ரம் கொண்டாடுபவர்கள், சமாதி வழிபாடு உள்ளவர்கள், அலீ குடும்பத்தைத் துதிப்பவர்கள்” எனப் பல்வேறு காரணங்களைக் கூறி, அவற்றையெல்லாம் களைவதற்கு வாய்ப்புத் தேடி வருபவர்களை நாமாக விரட்டியடிப்பதற்கு நமக்கு எவ்வித உரிமையும் இல்லை.

அவ்வாறு துரத்த நினைக்கும் சில தூரநோக்குப் பார்வையில்லாத நம் சகோதரர்களும் தங்களது முன்முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரமிது. 

உலக முஸ்லிம் சமுதாயத்தின் நன்மைக்காக இவ்வொன்றிணைவை இறுதி வரை நீட்டித்துத் தர வல்ல நாயனிடம் மீண்டும் மீண்டும் மனதார இறைஞ்சுவோம்.

இறைஞ்சுதல் அர்ஷை எட்டட்டும்; இறையருள் நம்மீது கொட்டட்டும்!