‘அமைதி விரும்பி’ எனப் பெயர் எடுப்பதற்காகத் தான் செய்த முயற்சிகள் உலகத்தினரால் ‘போர் வெறியன்’ என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளதற்காக US அதிபர் புஷ் வருத்தம் தெரிவித்துள்ளார். “ஒருவேளை என் பேச்சுகளில் வேறு மாதிரியான சொற்களைப் பயன்படுத்தி இருக்கலாம் என இப்போது நினைக்கிறேன்” என்றும் அவர் கூறினார். ‘தி டைம்ஸ்’ (The Times) பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது ஐரோப்பாவில் சுற்றுப் பயணத்தில் இருக்கும் புஷ், அவரது பேச்சுகள் நளினம் இல்லாமல் இருந்ததைத் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார்.
புஷ் அளித்த ஆணையின் பேரிலேயே ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் கணக்கில் அடங்கா அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டன. தேவையே இல்லாதப் போரைத் திணித்து அமெரிக்கக் கருவூலத்தின் மீது மிகப் பெரும் அளவில் சுமையை சுமத்தியதாக ஸ்டிக்லிட்ஜ் என்ற பொருளாதார நிபுணர் சொல்லி இருப்பதை அறிவோம்.
இருப்பினும் இந்தப் பேட்டியின் போது ஈரானுக்கு எதிரான தனது வசை மொழிகளை புஷ் நிறுத்தவில்லை. “இராஜதந்திர முயற்சிகள் மூலம் ஈரானின் அணுசக்திச் சோதனைகளை நிறுத்த எல்லா வழியிலும் முயன்று வருகிறோம். இருப்பினும் எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு” என மறைமுகமாக ஈரானுக்குப் போர் எச்சரிக்கை விடுத்தார்.
அதேவேளை, ஈரானிய அதிபர் மஹ்மூதிநிஜாத், “புஷ்ஷின் பதவிக்காலம் முடிவதை நினைத்து உலகம் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. ஈரானைத் தீங்கு செய்ய நினைத்த புஷ்ஷின் தீய எண்ணம் நிறைவேறாது” என பதிலளித்துள்ளார்.