84. வழிப்பாதை வெற்றி
சுல்தான் ஸலாஹுத்தீனின் தலைமையில் டமாஸ்கஸிலிருந்து அலெப்போவுக்குப் படை கிளம்பியது. எகிப்திலிருந்து வந்திருந்த அவருடைய படையினருடன் டமாஸ்கஸ் படையினரும் சேர்ந்துகொண்டனர். குதிரைப் படையினர் 7,000, எண்ணிலடங்கா காலாட் படையினர் இணைந்தது ஒருபுறமிருக்க, அமீர்களும் முக்கியமான அதிகாரிகளும் ஒவ்வொருவராக வந்து ஐக்கியமானார்கள். தொடக்கத்தில் அந்த முக்கியஸ்தர்களுக்கு ஸலாஹுத்தீனின் மீதிருந்த வெறுப்பு, அவநம்பிக்கை, ஒவ்வாமை எல்லாம் மறைந்து போய், தங்களின் இருப்பு நீடிக்க வேண்டுமானால் இனி அவரே நம்பிக்கை நட்சத்திரம் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. சிறு எண்ணிக்கையிலான துருப்புகளுடன் எகிப்திலிருந்து வந்திருந்த ஸலாஹுத்தீன் இப்பொழுது கணிசமான படையினருடன் அலெப்போவை நோக்கி அணிவகுத்தார். டமாஸ்கஸில் ஸலாஹுத்தீனின் தம்பி ஸைஃபுல் இஸ்லாம் துக்தகீன் அவருடைய பிரதிநிதியாக அமர்த்தப்பட்டார்.
ஃபக்ருத்தீன் மஸூத் அல்-ஸஃபரானி என்றோர் அமீர் இருந்தார். அவரது இராணுவ சேவையைப் பாராட்டி ஹமா, பாரின் கோட்டை, ஸலாமிய்யா, டெல் காலித், எடிஸ்ஸா ஆகியவற்றை நூருத்தீன் அவருக்கு மானியமாக அளித்திருந்தார். அஸாதுத்தீன் ஷிர்குஹ்வுக்கு அளிக்கப்பட்டிருந்த ஹும்ஸுவும் அவருடைய மறைவுக்குப் பின் ஃபக்ருத்தீனுக்குச் சென்றது, ஆனால், நூருத்தீனின் மரணத்திற்குப் பின், அந்த அமீர் அந்நகரங்களின் கட்டுப்பாட்டை இழந்தார். காரணம், அங்கு அவர் கட்டவிழ்த்து விட்டிருந்த பொல்லாத ஆட்சி. அந்தந்தப் பகுதிகளில் இருந்த நூருத்தீனின் இராணுவ அதிகாரிகள் அதைப் பொறுக்க முடியாமல் நகரங்களை அவரிடமிருந்து பிடுங்கித் தத்தம் வசம் எடுத்துக்கொண்டனர். அலெப்போவிலிருந்த இளம் மன்னருக்கு சத்தியப்பிரமாணம் அளித்திருந்த அவர்கள் டமாஸ்கஸுக்கும் ஸலாஹுத்தீனுக்கும் எதிரணியாக வீற்றிருந்தனர்.
சிரியாவின் தெற்கிலுள்ள டமாஸ்கஸிலிருந்து வடக்கே உள்ள அலெப்போவுக்குச் செல்லும் வழியில் உள்ளன ஹும்ஸும் ஹமாவும். அலெப்போவை நோக்கிச் சென்ற படை 11 ஜமாதுல் அவ்வல் 570 / 8 டிசம்பர் 1174ஆம் நாள் முதலில் ஹும்ஸை அடைந்தது. அதன் ஆட்சியாளராக இருந்த நூருத்தீனின் படை அதிகாரியை சரணடையச் சொன்னார் ஸலாஹுத்தீன். அந்த ஆளுநரோ, ‘அதெல்லாம் முடியாது’ என்று மறுத்து விட்டார். ஸலாஹுத்தீனுக்கு வேறு வழியின்றிச் சண்டையிடும்படி ஆனது. பெரிதாகப் போர் எதுவும் நிகழவில்லை. ஹும்ஸு எளிதில் ஸலாஹுத்தீன் வசமானது. கோட்டை மட்டும் விடாப்பிடியாகத் தாக்குப் பிடித்தது. விட்டுப்பிடிக்க முடிவெடுத்தார் ஸலாஹுத்தீன். நகர மக்கள் அனைவருக்கும் பூரணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். தம் அதிகாரிகளிடம் நகரின் காவல் பொறுப்பை அளித்து, ” கோட்டையில் உள்ளவர்களின் நடமாட்டத்தை முடக்கவும்; அவர்களுக்கு எவ்விதப் பொருளும் கிடைக்காமல் தடை ஏற்படுத்துங்கள்; விரைவில் தாமே சரணடைவார்கள் ” என்று உத்தரவு இட்டுவிட்டு அங்கிருந்து தம் படையுடன் நகர்ந்தார்.
பாதையில் இருந்த அடுத்த நகரம் ஹமா. அதன் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அமீரின் பெயர் இஸ்ஸத்தீன் ஜுர்திக். நூருத்தீனின் மம்லூக்காக இருந்தவர். அவர் ஸலாஹுத்தீனுக்கும் நன்கு பரிச்சயமானவர். எகிப்தில் வஸீர் ஷவாரைக் கைது செய்வதிலும் அவரைக் கொல்வதிலும் ஸலாஹுத்தீனுக்கு உதவியவர். அதன் பிறகு சிரியா திரும்பியிருந்தார். நூருத்தீனின் மறைவுக்குப் பின் அலெப்போவினருடன் இணைந்து நூருத்தீனின் மகன் ஸாலிஹுக்கு ஆதரவாகப் பெரும் முனைப்புடன் செயல்பட்ட அவருக்கு இளம் மன்னர் ஸாலிஹின் மீது அத்தியந்த விசுவாசம். எனவே அந்த அமீர் முதலில் ஸலாஹுத்தீனையும் விரும்பவில்லை; தாம் ஸாலிஹுக்குக் கட்டுப்பட்டு அவருக்கு உதவவே வந்திருக்கிறேன் என்று ஸலாஹுத்தீன் சொன்னதையும் நம்பவில்லை. சுல்தான் ஸலாஹுத்தீன் பொறுமையாகத் தம் இலட்சியத்தை அவருக்கு விவரிக்க வேண்டியிருந்தது. அப்போதும் அவருக்கு சந்தேகம்.
“சத்தியமிட்டுச் சொல்வீரா?” என்று கேட்டார்.
செய்தார் ஸலாஹுத்தீன். “நன்று, நன்று. நீங்கள் உங்களது இராணுவ நடவடிக்கையைத் தாமதப்படுத்துங்கள். இங்குக் காத்திருங்கள். அலெப்போவினர் என் நண்பர்கள். நான் சென்று பேசி இணக்கமான முடிவு ஏற்படச் செய்கிறேன். ஒருகால் அவர்கள் என் பேச்சைக் கேட்காவிட்டால் ஹமா உங்களிடம் சரணடையும்” என்றார் அமீர்.
“இப்னு தயாஹ் சகோதரர்களையும் விடுவிக்கச் சொல்லுங்கள்” என்று தெரிவித்து வழியனுப்பினார் ஸலாஹுத்தீன்.
அலெப்போ வந்த அமீர், தாம் வந்த நோக்கத்தை குமுஷ்திஜினிடம் விவரித்து, ‘ஸலாஹுத்தீன், இப்னு தயாஹ் சகோதரர்களை விடுவிக்கச் சொன்னாரய்யா’ என்று தெரிவித்தார். அப்படியெல்லாம் அலெப்போவை அள்ளிக் கொடுக்கவா குமுஷ்திஜின் அத்தனை மெனக்கெட்டிருந்தார்? சிறையிலிருந்த இப்னு தயாஹ் சகோதரர்களின் விடுதலையைக் கோரிய அமீரை அப்படியே அலேக்காகத் தூக்கிச் சிறையில் அடைத்தார். இஸ்ஸத்தீன் தாம் அலெப்போ செல்லும் முன் தம் சகோதரரிடம் ஹமா நகரின் பொறுப்பைத் தற்காலிகமாக அளித்திருந்தார். கைது செய்தி தெரிய வந்ததும் அந்த சகோதரர் சுல்தான் ஸலாஹுத்தீனிடம் ஹமாவை ஒப்படைத்துவிட்டார்.
இவ்விதம் டமாஸ்கஸை அடுத்து ஹும்ஸும் ஹமாவும் பெரும் சேதாரம் ஏதுமின்றி ஸலாஹுத்தீனிடம் வந்து சேர்ந்தன. அடுத்து அலெப்போவை நோக்கித் தம் படையுடன் நகர்ந்தார் சுல்தான் ஸலாஹுத்தீன். அலெப்போ அரபு மொழியில் ’ஹலப்’ எனப்படும். ஹலப் என்னும் சொல்லுக்குப் பால் என்றோர் அர்த்தமுண்டு. எனவே ஸலாஹுத்தீன் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். “நாம் கறக்க வேண்டியது மட்டுமே பாக்கி. ஹலப் நம்முடையதாக ஆகும்”
30 டிசம்பர் 1174. ஸலாஹுத்தீன் தம் படையினருடன் அலெப்போ நகரின் வாயிலில் நின்றிருந்தார். ஆனால் அவர் நினைத்ததைப் போல் அலெப்போ எளிதில் கறக்கப்படக் கூடிய பாலாக அமையவில்லை. குமுஷ்திஜினின் திட்டப்படி அது எதிர்த்து நின்றது. பெரும் பலம் பொருந்திய அரண்களுடன் வலுவாக நிற்கும் அலெப்போவை ஊடுருவுவது எளிதன்று என்பது ஸலாஹுத்தீனுக்குத் தெரியும். ஆகவே முற்றுகையிட்டார். நீண்ட கால முற்றுகைக்கான ஏற்பாடுகளுடன் ஸலாஹுத்தீன் பாடி இறங்கியிருப்பதைக் கண்ட குமுஷ்திஜினுக்குப் பெரும் கவலை ஏற்பட்டது. வெறுமே அலெப்போ படையினருடன் அவரை எதிர்த்து வெல்ல முடியாது என்பதும் ஆயாசத்தை அதிகப்படுத்தியது. உதவி கோரி இரு தரப்பினருக்குத் தகவல் அனுப்பினார். ஒன்று பரங்கியர்கள். அடுத்தது ஸினான். மலையிலிருக்கும் முதியவர் (the ’Old Man of the Mountain’) என்று அறியப்பட்ட, அஸாஸியர்களின் தலைவரான ஷேக் அல்-ஜபல் ரஷீதுத்தீன் ஸினான்.
பதின்மூன்று பேர் கொண்ட அஸாஸியர் கொலைக் கும்பல் சுல்தான் ஸலாஹுத்தீனின் கூடாரத்திற்குள் ஊடுருவியது. அவரது உயிருக்குப் பேராபத்து வந்தடைந்தது.
(தொடரும்)