ரஜப் மாத நற்(?) செயல்கள்

இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதம் ரஜப்
Share this:

ஜப் மாதம் என்பது ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதமாகும். அது, அல்லாஹ்வினால் தனிப்பட்ட முறையில் சிறப்பித்து, தனி அந்தஸ்து பெற்ற மாதங்களில் ஒன்றாகும். அல்லாஹ் திருக்குர்ஆனின் 9ஆவது அத்தியாயமாகிய ‘தவ்பா’வின் 36ஆவது வசனத்தில் கூறுகின்றான்:

“திண்ணமாக அல்லாஹ்வின் அங்கீகாரம் பெற்ற மாதங்களின் எண்ணிக்கை (ஓராண்டுக்குப்) பன்னிரண்டுதாம். (இவ்வாறே) வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே அல்லாஹ்வின் (பதிவுப்) புத்தகத்தில் (பதிவு செய்யப் பட்டு) உள்ளது. அவற்றுள் நான்கு(மாதங்கள்) புனிதமானவையாகும். இதுவே நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் …”

அல்லாஹ் இந்த நான்கு புனித மாதங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி அதில் பாவங்களும் தீமைகளும் ஏற்படா வண்ணம் தவிர்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டுள்ளான்.

“நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களையும் சிறப்பான மாதங்களையும் … (அவமதிப்பதை)நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள் …” (5:2).

அதாவது, பாவமான காரியங்களைத் தவிர்ப்பதையும் அல்லாஹ் சிறப்பித்தவற்றுக்கு மாசு கற்பிப்பதையும் தடை செய்வதன் மூலம் இந்தப் புனித மாதங்களைக் கண்ணியப்படுத்திடுமாறு அல்லாஹ் நமக்கு ஏவியுள்ளான். இந்தத் தடையும் கட்டளையும் பாவமான காரியங்களில் கவனமாக இருப்பது போல் தவறான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த செயல்பாடுகளை விலக்குவதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் உள்ளடக்கியுள்ளது. ஆனால் நம்மில் பலர் கண்ணியமான இந்த ரஜப் மாதத்தின் பெயரால் விசேஷமான நோன்புகள், 27ஆம் நாளன்று விசேஷமான தொழுகைகள், (கப்ருஸ்தான்) அடக்கஸ்தலத்தை தரிசித்து அங்கு விசேஷ துஆக்கள் ஓதுதல், இம்மாதத்தில் சிறப்புள்ளது என்று கருதி விசேஷமாக உம்ராக்கள் செய்தல் போன்ற நபிவழி(ஸுன்னத்து)க்குமாற்றமான பல்வேறு நூதன அனுஷ்டானங்களை நன்மை பெற்றுத் தரும் காரியமாக கருதி, இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரால் இம்மாதத்தில் நிறைவேற்றுவதைப் பரவலாகக் காணமுடிகிறது.

இஸ்லாமிய மார்க்கத்தில் இது போன்ற நபிவழியில் இல்லாத, குர்ஆனுக்கும் நபிவழி(ஸுன்னத்து)க்கும் மாற்றமான புதுமையான காரியங்களைச் செயல்படுத்துவது மிகவும் தீங்கான ஒன்றாகும். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் மார்க்கம் முழுமை படுத்தப்பட்ட பின்னரே மரணித்தனர்.

“… இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே(இசைவானதாகத்)தேர்ந்தெடுத்துள்ளேன்(5:3).

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எவர் ஒருவர் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை உருவாக்குகிறாரோ அது அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாது (முஸ்லிம் 3242).

ரஜப் எனும் இம்மாதத்தில் பல ‘பித்அத்’ எனும் நூதனமான அனுஷ்டானங்கள் (மற்றும் நம்பிக்கைகள்) நன்மை தரும் எனும் பெயரால் நடைமுறையில் உள்ளன அவற்றில் சில.

1) ஸலாத்துல் ரகாஇப் எனும் நூதனத் தொழுகை

இது சிறப்பான நூற்றாண்டுகளான ஆரம்பகால நூற்றாண்டிற்குப் பிறகு குறிப்பாக ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. சில பொய்யர்கள் இதை ரஜபுப் பிறை ஒன்றில் தொழ வேண்டும் என்று அறிமுகப்படுதினார்கள்.

ஹதீஸ்கலை வல்லுனர்கள் பெரும்பாலும் இதை பித்அத் என்று நிராகரித்துள்ளனர். இமாம் அபு ஹனீஃபா, ஷேக் இப்னு தைமிய்யா, இமாம் மாலிக், இமாம் ஷாஃபீ, இமாம் அஃத்ஃதவ்ரீ போன்ற பலரும் இதே கருத்தைக் கொண்டுள்ளனர்.

2) இம்மாதத்தின் முக்கியமான சம்பவங்களாகக் கூறப்படுபவை

இம்மாதப் பிறை ஒன்றில்தான் நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் பிறந்தார்கள்; 27 அல்லது 25ஆம் நாளன்று அவர்களுக்குத் தூதுத்துவம் வழங்கப்பட்டது போன்ற அனைத்துமே தவறான, ஆதாரமற்ற கூற்றுகளாகும்.

3) ஷப்-ஏ-மிஃராஜ்

நபி(ஸல்) அவர்களின் மிராஃஜ் எனும் விண்ணுலகப் பயணத்தை ஷப்-ஏ-மிஃராஜ் எனும் பெயரில் கொண்டாடுவது. ரஜப் மாததின் 27ஆம் நாளில் மிஃராஜ் நடைபெற்றதாக உள்ள ஒரு பலவீனமான செய்தியின் அடிப்படையில், முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் நமக்குத் தரும் படிப்பினைகள் யாவை என்பதைக் கருத்தில் கொள்ளாமல் மிஃராஜ் இம்மாதத்தில் நடந்ததாகக் கருதி அதைச் சிறப்பாகக் கொண்டாடுதல்.

இந்நாளைச் சிறப்பிக்கும் முகமாக இந்நாளில் விசேஷ நோன்பு நோற்பது, இரவு முழுவதும் விசேஷத் தொழுகைகள் தொழுவது, அதிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் 100 முறை ஆயத்துல் குர்ஸி, 100 முறை குல் ஹுவல்லாஹு போன்ற சூராக்கள் ஓதி தொழ வேண்டும் போன்ற நபிவழி ஆதாரமற்ற அமல்களைப் பலர் செய்கின்றனர். இது மிகப் பெரும் வழிகேடு ஆகும். புதிய வகைத் தொழுகைகளைப் புகுத்துவது, நபி (ஸல்) அவர்கள் நமக்கு நன்மையைப் பெறும் செயலை, அதாவதுமார்க்கத்தை முழுமையாகக் காட்டித் தரவில்லை என்று கூறுவதற்குச் சமமாகும்.

இன்னும் சிலர் அவர்கள் மிஃராஜ் என்று நம்புகின்ற நாளை இஸ்லாமிய விழாக்களில் ஒன்றாகவே கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது. அதிலும் ஆண்-பெண்கள் கலந்து பெண்கள் ஹிஜாபின்றி வெளியில் செல்வது, ஹராமான முறையில் பாடல்கள் பாடுவது, கலந்துரையாடுவது போன்ற இதர தடுக்கப்பட்ட காரியங்களில் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது. இது இஸ்லாம் அனுமதித்துள்ள இரு பெருநாட்களிலும் அனுமதிக்க படாத ஒன்று எனும்போது இதுபோன்ற பித்அத்தான விழாக்களின் நிலை என்ன என்பதை விளக்கத் தேவை இல்லை. இவை அனைத்தும் ரஜப் மாதத்தின் 27ஆம் நாளில் மிஃராஜ் எனும் பயணம் நடந்ததாகக் கூறப்படும் ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் செய்யப்படுகின்றன.

மிஃராஜ் எனும் பயணம் இன்ன நாளில்தான் நடந்தது என்று ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் ஏதுமில்லை. எனில், இவ்வாறு மனம்போனபடிக் கொண்டாட நமக்கு எவ்வித அனுமதியுமில்லை. ஏனெனில் நபி(ஸல்) அவர்களோ அவர்களுடைய அருமைத் தோழர்களான ஸஹாபாக்களோ இவ்வாறு நமக்குக் காட்டித்தந்ததாகவோ செய்ததாகவோ எந்த ஆதாரமுமில்லை.

4) பல்வேறு ஆதாரமற்ற துஆக்களை ஓதுவது

 

ரஜப் மாதத்தில் ஓதவேண்டியவை என்ற பெயரில் பல்வேறு துஆக்களை சிலர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இவை அனைத்தும் நபி வழி ஆதாரமற்ற பித்அத்துகளாகும்.

5) கப்ருகளுக்கு செல்வது

இம்மாதத்தில் மட்டும் விசேஷமாகக் கப்ருக்களுக்குச் சென்று சில துஆக்கள் ஓதுவதும் பித்அத் ஆகும். பொதுவாக எல்லா நாட்களிலும் கப்ருகளுக்கு(பொது மையவாடிக்கு)ச் சென்று அங்குள்ளவர்களுக்காகப் பிராத்தனை செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்ட ஒன்றே. மேலும் “கப்ருகளுக்குச் செல்வது மரணத்தின் சிந்தனையை ஏற்படுத்தும்; ஆகையால் கப்ருகளுக்கு செல்லுங்கள்” (திர்மிதீ 974) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் அதை ரஜப் மாதத்தில் மட்டும் செய்வது நபி வழியல்ல.

6) கோன்டே கி நியாஜ்

இந்தப் பெயராலும், இன்னும் சில இடங்களில் பூரியான் ஃபாத்திஹா எனும் பெயராலும் விசேஷ பாத்திஹாக்கள் ஓதி விருந்துகள் என்றும் புனிதமானதாகக் கருதி இனிப்புகளும் உணவும் பரிமாறுவது, அது நன்மை என்று கருதுவது, அதை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் விநியோகிப்பது ஆகிய அனைத்துமே தவிர்க்கப்பட வேண்டிய பித்அத்கள் ஆகும்.

7) ரஜப் மாத நோன்பு

இந்த மாதத்திற்கு என்று விசேஷ நோன்பு நோற்க குர்ஆனிலோ நபிவழியிலோ எந்த ஆதாரமுமில்லை. ஆகையால் வழமையாக நோன்பு நோற்பது என்பது வேறு; இம்மாதத்தின் சிறப்பு நோன்பு என்று கருதி இம்மாதத்தில் நோற்பது என்பது வேறு என்பதையும் உணர வேண்டும்.

8) விசேஷ உம்ராக்கள்

உம்ரா பயணம் மேற்கொள்வது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. ஆயினும் அதை இம்மாத்தில் செய்வது அதிக நன்மையானது என்று கருதுவது அல்லது இம்மாதத்தில் அதிகமான எண்ணிக்கையில் உம்ரா மேற்கொள்வது ஆதாரமற்ற செயலாகும்.

மேற்கண்டதைப் போன்ற ஒவ்வொரு பித்அத்தான காரியமும் வழிகேடு ஆகும் என்பதை உணர்ந்து நபிவழிக்கு மாற்றமான நம்பிக்கைகளையும் அமல்களையும் செய்வதைக் கைவிட வேண்டும். இல்லையெனில் “பித்அத்துகள் நரகில் சேர்க்கும் (திர்மிதீ 1560) என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி விட்டு நாமாகவே நரகிற்குச் செல்ல முயல்வதைப் போன்றதாகும்.

ஆகையால் ரஜபு மாத நூதன வழிபாடுகளையும் நடைமுறைகளையும் களைந்து, நபி வழியில் நடந்து, இம்மை மறுமை வெற்றியும் ஈடேற்றமும் பெற முறையாக முயல்வோமாக; அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.