மோடிக்கு மீண்டும் அமெரிக்கா விசா மறுப்பு!

அமெரிக்க விசா மோடிக்கு மீண்டும் மறுக்கப்பட்டது!

இந்தியாவின் சமயப் பொறையுடைமைக்கு நிரந்தர இழுக்கும் அவமானமும் தேடித் தந்த நரேந்திர மோடி கடந்த 2002-ஆம் ஆண்டில் காவிப் படையினரை ஏவிவிட்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்தது தெரிந்ததே. கடந்த 2005ஆம் ஆண்டு குஜராத்திகளின் கலை விழா என்ற பெயரில் அமெரிக்காவில் இருக்கும் தனது கூட்டாளிகள் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு மோடி செல்ல முயன்ற போது அமெரிக்கா உள்நுழை அனுமதி மறுத்ததும் தெரிந்ததே. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்திய அரசும் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தது.

நியூஜெர்சியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள குஜராத்திக் கலாச்சார மாநாடு என்ற பெயரில் மோடியின் ஆதரவாளர்கள் ஒரு விழாவை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொள்ள வருமாறு மோடிக்கு அழைப்பு அனுப்பியிருந்தனர். இதில் கலந்துகொள்ள சுற்றுலா விசா கோரி மோடி மீண்டும் விண்ணப்பித்திருந்ததை அமெரிக்க அரசு முன்பு தான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டி மீண்டும் மோடிக்கு விசா அனுமதியை மறுத்துள்ளது.

முன்னதாக அமெரிக்க நாடாளுமன்றத்தால் அதிகாரம் வழங்கப்பட்ட அமைப்பான சர்வதேச மத உரிமைகள் குழுமம் “பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழிக்க உறுதுணையாக இருந்த மோடி, இதுவரை பாதிக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லிம்களுக்கான பாதுகாப்புக்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மனித நேயத்திற்கு எதிரான இக்குற்றங்களை மோடி நிகழ்த்தியதை ஊடகங்கள் ஆதாரத்துடன் நிரூபித்த போதிலும் அதனை மழுப்பலாக மறைக்க மோடியால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சிறுபான்மையினரை அச்சுறுத்தும் நிலை தொடர்வதால் மோடிக்கு விசா வழங்குதலுக்கு எவ்வித நியாயமும் இல்லை” எனப் பரிந்துரைத்திருந்தது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக அலுவலர் ஒருவர் கூறுகையில், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்யும் சூழல் உருவாகியிருப்பதாக நாங்கள் கருதவில்லை. எனவே குடியேற்ற சட்டத்தின் கீழ் சுற்றுலா விசா வழங்க இயலவில்லை என்று மோடிக்குத் தெரிவித்து விடுமாறு அமெரிக்க குடியேற்றத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், நரேந்திர மோடி தன் மீதான மனித உரிமை மீறல் புகார்கள், வன்முறை புகார்களைப் பொய் என்று நிரூபிக்க வேண்டும். இதன் மூலம் தான் சுற்றுலா விசாவில் அமெரிக்க வரத் தகுதியானவர் என்பதை அமெரிக்க மக்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் மோடி நிரூபிக்க வேண்டும் என்றார் அவர்.

தனக்கு எதிராகக் குரல் கொடுப்போரின் மீது பொய்வழக்குப் போடவும், பதவியில் இருந்த தனது கைக்கூலிகளைக் கொண்டு நிகழ்த்திய போலி என்கவுண்டர்களை நியாயப்படுத்தவும் மோடி தயங்குவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.