கஸ்ஸா போரில் இஸ்ரேலுக்கு உதவிய மைக்ரோசாஃப்ட்!

Share this:

ஸ்ரேல் இராணுவம் கஸ்ஸாவின் மீது தீவிரமான தாக்குதலை மேற்கொண்டபோது, மைக்ரோசாஃப்ட்டின் மேகக் கணிமையையும் (cloud technology), செயற்கை நுண்ணறிவையும் (artificial intelligence – AI) மிகப் பெரிய அளவில் பயன்படுத்தியது என்ற இரகசியம் வெளிப்பட்டுள்ளது. அது குறித்த ஆவணங்கள் கசிந்துள்ளன.

2023 அக்டோபர் 7-க்கு பின்னர் இஸ்ரேலின் பாதுகாப்புத் துறையுடன் மைக்ரோசாஃப்ட் தனது உறவை விரிவுபடுத்தி, பத்து மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தி, பெருமளவிலான கணினி சேவைகள் வழங்கியதையும் ஆயிரக்கணக்கான மணிநேரத்திற்குத் தொழில்நுட்ப ஆதரவு வழங்கியதையும் இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. 2023 அக்டோபர் முதல் 2024 ஜூன் வரை, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை மைக்ரோசாஃப்ட்டிடம் இருந்து 19,000 மணிநேர பொறியியல் ஆதரவையும் ஆலோசனை சேவைகளையும் பெற ஒப்பந்தம் செய்துள்ளது என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

கஸ்ஸாவில் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கிய பிறகு, தகவல் சேமிப்புக்கும் பிறவற்றுக்கும் கணினித் தேவை IDFற்குப் பெருவாரியாக அதிகரித்தது. ஆகவே கணினி கட்டமைப்பை விரைவாக விரிவுபடுத்த உடனே மைக்ரோசாஃப்ட்டின் மேகக் கணிமையை நாடியது. தாக்குதல்களின் போது, IDF உளவுத் துறைகளான யூனிட் 8200 , காணொளி நுண்ணறிவு சேகரிக்கும் ரகசிய உளவுத் துறையான யூனிட் 9900 ஆகிய இரண்டும் மேகக் கணிமையைப் பயன்படுத்த மைக்ரோசாஃப்ட் பொறியாளர்கள் பேருதவி புரிந்துள்ளனர்.

முன்னொரு காலத்தில் IDF, மைக்ரோசாஃப்ட் சேவைகளை மின்னஞ்சலுக்கும் கோப்பு மேலாண்மைக்காகவும் நிர்வாக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தியிருந்தாலும், Azure கணிமையைத் தாக்குதலுக்கும் உளவு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தியுள்ளதைக் கோப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.

அது மட்டுமின்றி அண்மைக் காலமாக, மைக்ரோசாஃப்ட், OpenAIயின் GPT-4 மாடலை இஸ்ரேல் இராணுவம் அணுக அனுமதித்துள்ளது. தற்போதைய AI தொழில்நுட்பங்கள் பாதுகாப்புத் துறை, உளவுத் துறைகளுடன் பணியாற்றுவதை அனுமதிக்கும் விதமாக அதன் கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளன.

மைக்ரோசாஃப்ட் IDF உடன் பூண்டுள்ள ஆழமான உறவும் அதன் சேவை போர் நடவடிக்கைகளுடன் இணைந்துள்ளதும் தனியார் துறைகளுக்கு உயர் தொழில்நுட்பப் போர் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள ஈடுபாட்டைக் காட்டுகின்றன.

இஸ்ரேல் இராணுவத்திற்கும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையிலான வணிகத் தொடர்புகள் அமெரிக்காவில் கவனத்தை ஈர்த்துள்ளன. கஸ்ஸா போரில் இஸ்ரேல் மனிதாபிமான சட்டங்களை அப்பட்டமாக மீறியதாகக் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தொழில்நுட்பப் பணியாளர்கள் தங்களின் உழைப்பும் தயாரிப்புகளும் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டதற்குக் கவலையும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், காசு மட்டுமே பிரதானமான அந்நிறுவனங்களுக்கு அவையெல்லாம் வெறும் தூசு.

-நூருத்தீன்

கார்டியன் (Guardian) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள விரிவான கட்டுரையின் சுருக்கம்.

 


Share this: