இந்தியர்களுக்கு, குறிப்பாக விளையாட்டு இரசிகர்களுக்கு இன்றொரு பொன்னாள்!.
இருபத்தெட்டு ஆண்டு ஏக்கம் நிறைந்த கனவு, நனவான இனிய நாள்!.
சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்த, இருபத்து மூன்று வயது வீரர் அபினவ் பிந்த்ரா, பத்து மீட்டர் ஏர் ரைஃபில் சுடும் ‘தனியாள் போட்டி’யில் தங்கப் பதக்கத்தை வென்று, இந்தியர்களைத் தலைநிமிர வைத்திருக்கிறார்.
கடந்த 1980இல் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது. அதற்குப் பின்னர் குழுவினர் போட்டியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகும் தனியாள் போட்டியில் இந்திய வரலாற்றில் முதன் முறையாகவும் இப்போதுதான் நமக்குத் தங்கம் கிடைத்திருக்கிறது.
இந்திய விளையாட்டு இரசிகர்களின் இன்றைய ஆனந்தக் கண்ணீருக்கும் ஆர்ப்பரிப்புக்கும் ‘கேல் ரத்னா’ பட்டத்துக்கும் உரியவருமான அபினவ் பிந்த்ரா, தம் பதினெட்டு வயதில் 2003இல் ம்யூனிக் நகரில் நடைபெற்ற ஏர் ரைஃபில் சுடும் போட்டியில் வெண்கலம் வென்றவர். ஐந்தாண்டுகளுக்கு முன்னர் உலகப் போட்டியாளர்களிலேயே இளவயது வீரர்.
இப்போது பீஜிங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட, ஏறத்தாழ நூறு நாடுகளைச் சேர்ந்த 122 சுடும் வீரர்களைத் தோற்கடித்து, 700.5 புள்ளிகள் பெற்றுத் தங்கத்தை வென்றார். அபினவை அடுத்து வந்த சீன வீரர் ஸூ கினான் 669.7 புள்ளிகளும் ஃபின்லந்தின் ஹென்ரி ஹக்கினன் 669.4 புள்ளிகளும் பெற்றனர்.
தொடக்கச் சுற்றுகளில் சற்றே தளர்ந்திருந்த அபினவின் சுடுபுள்ளிகள் இறுதிச் சுற்றில் சட்டென வேகம் பிடித்தன. 2004இல் கிரீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் சீனாவுக்காகத் தங்கம் வென்ற ஸூ கினானை, இவ்வாண்டு வெள்ளிக்குத் தள்ளிய அபினவின் சரியான போட்டியாளராகத் தொடக்கத்திலிருந்து ஃபின்லந்தைச் சேர்ந்த வீரர் ஹென்ரி ஹக்கினன் திகழ்ந்தார். ஆனால், இறுதிச் சுற்றுகளில் தடுமாறியதால் ஹக்கினன் வெண்கலப் பதக்கமே பெற முடிந்தது.
இவ்வாண்டின் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கம் வென்ற அபினவுக்கு, ஜனாதிபதி பிரதிபா பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சத்தியமார்க்கம்.காம் தனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அபினவுக்குத் தெரிவித்துக் கொள்கிறது!