ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
இஸ்லாத்தின் அடிப்படையில் அவ்ரத் மறைக்கப்பட்டு ஒரு ஆண் ஜனாஸா நீராட்டப்படும் வீடியோ படத்தை, எந்தவொரு பெண்ணும் மார்க்க விளக்கம் பெறும் வகையில் பார்ப்பது கூடுமா?
– சகோதரி. ஜியா சித்தாரா.
தெளிவு: வ அலைக்கும் ஸலாம் வரஹ்….
ஜனாஸாவைக் குளிப்பாட்டும் முறையைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சகோதரி கேட்டிருக்கிறார். அவரின் மார்க்க ஆர்வத்தை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக!
'நபி(ஸல்) அவர்களின் மகளின் ஜனாஸாவைக் கழுவும் பெண்களிடம் நபி(ஸல்) அவர்கள், "அவரின் வலப்புறத்திலிருந்து கழுவ ஆரம்பியுங்கள். மேலும் அவரின் உளூவின் உறுப்புகளையும் கழுவுங்கள்" என்று கூறியதாக உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ)
நபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் மரணித்துவிட்டபோது எங்களிடம் வந்து, "அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் குளிப்பாட்டுங்கள். இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடிந்ததும் எனக்கு அறிவியுங்கள்'' எனக் கூறினார்கள். குளிப்பாட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தம் கீழாடையைத் தந்து, "இதை அவரின் உடலில் சுற்றுங்கள்" எனக் கூறியதாக உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ)
"மேலும், நாங்கள் மய்யித்தின் முடியை மூன்று சடைகளாகப் பின்னி அதை மய்யித்தின் முதுகுப்புறமாகப் போட்டு வைத்தோம்" என்று உம்மு அதிய்யா(ரலி) அவர்கள் கூடுதலாக அறிவிக்கும் செய்தி புகாரியில் வேறு அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
மேலும், ''நாங்கள் அவரது தலைமுடியைப் பிடரிப் பகுதியில் இரண்டும் முன்னெற்றிப் பகுதியில் ஒன்றுமாக மூன்று பின்னல்களிட்டோம்'' என்று உம்மு அதிய்யா(ரலி) அவர்கள் கூடுதலாக அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)
பெற்ற மகளின் ஜனஸாவாக இருந்தாலும் பெண் ஜனாஸாக்கள் குளிப்பாட்டப்படும் பொழுது ஆண்கள் பார்க்கக்கூடாது என்று மேற்கண்ட அறிவிப்புகளிலிருந்து அறிந்துக் கொள்ள முடிகிறது. அதே போன்று பெற்றத் தந்தையாக இருந்தாலும் ஆண் ஜனாஸாக்கள் குளிப்பாட்டப்படும் பொழுது பெண்கள் பார்க்கக் கூடாது என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது வலது புறத்திலிருந்து துவங்க வேண்டும். உளூவின் உறுப்புகளை கழுவ வேண்டும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்ட வேண்டும். ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது இறுதியில், ''கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து உடல் சுத்தமாக வேண்டும் என்பதால் சோப்பு அல்லது அது போன்ற நறுமணப் பொருள்களைப் பயன்படுத்திக் குளிப்பாட்டலாம். பெண் ஜனாஸா என்றால் அவர்களின் சடையைப் பிரித்து குளிப்பாட்டிய பின் மீண்டும் சடைப் பின்னி விடலாம். ஆணின் ஜனாஸாவை ஆண்கள் நீராட்ட வேண்டும், பெண்ணின் ஜனாஸாவை பெண்கள் நீராட்ட வேண்டும்.
ஜனாஸாவைக் குளிப்பாட்டும் விதிகள் இவை தான்.
பொதுவாக அன்னிய ஆண்களைப் பெண்களும் அன்னியப் பெண்களை ஆண்களும் அவசியமின்றிப் பார்க்க இஸ்லாம் தடை செய்துள்ளது. கற்றுக்கொள்தல் போன்ற அவசியக் காரியங்களுக்கு இத்தடை பாதகம் இல்லை என்றாலும் "ஜனாஸாவைக் குளிப்பாட்டுதல்" என்ற விஷயத்தில் அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற ஒரு விளக்கத்தை நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்து விட்டார்கள். எனவே இவ்விஷயத்தில் மேலதிகமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.
வணக்க வழிபாடுகளைப் பற்றிய (தொழுகை போன்ற) விளக்கம் என்றால் அதைப் படக் காட்சிகளில் விளக்கலாம். குளியல் அந்தரங்கம் மறைக்கப்பட்டு, மறைவாகச் செய்ய வேண்டியது. அது ஜனாஸாவாக இருந்தாலும் அதன் அந்தரங்கம் மறைக்கப்பட்டு, அதன் உடலிலுள்ள குறைகளும் மறைக்கப்பட வேண்டும் என்பதால் ஜனாஸாவைக் குளிப்பாட்டுவதை பொது காட்சியாக்குவதும் அதனை அன்னியர்கள் போட்டுக் காண்பதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல.
(இறைவன் மிக்க அறிந்தவன்)