அமெரிக்கா, ஐநாவிற்கு தலைவேதனையாகும் ஆப்கான் – 60 அப்பாவிகள் உட்பட 100 பேர் படுகொலை!

60 அப்பாவி பொதுமக்கள் உட்பட 100 பேரை நேட்டோ படைகள் படுகொலை செய்ததாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்தது. தெற்கு ஆப்கானிஸ்தானில் நடந்த நேட்டோ-தாலிபான் போராட்டத்தில் நேட்டோ படைகள் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் தொடுத்த பொழுது இக்கொடூரம் நிகழ்ந்தது.

உர்துகான் பிரதேசத்தில் ஆப்கான் காவல்துறையினர், தாலிபான் போராளிகள் உட்பட டஜன் கணக்கில் ஆட்கள் கொல்லப்பட்டுள்ளதாக அப்பிரதேச கவுன்ஸில் தலைவர் மௌலவி ஹந்துல்லா கூறினார். தன் குடும்பத்தில் 18 பேரை நேட்டோ படைகள் கொன்று விட்டதாக தாக்குதலில் காயங்களுடன் உயிர் பிழைத்த ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் அதே சமயம் தாலிபான் போராளிகளை தான், தாங்கள் கொன்றதாக நேட்டோ படை அதிகாரி காபூலில் கூறினார். பொதுமக்களுக்கு எதிராக நேட்டோ படைகள் செய்யும் இந்த அநியாய படுகொலைகளுக்கு எதிராக ஆப்கானில் பரவலாக மக்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை ஸர்குன்ஷா மாவட்டத்தில் ஒரு மதரஸாவின் மீது அமெரிக்க படைகள் வீசிய வெடிகுண்டில் 7 மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இச்சமபவத்தைக் குறித்து விசாரணை நடத்தை ஒரு விசாரணை குழு அனுப்பப்படும் என ஐநா அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது நடந்துள்ள இச்சம்பவம் ஐநாவிற்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 2007 ல் மட்டும் இதுவரை 350 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை நேட்டோ படைகள் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் ஆப்கானிஸ்தான் காந்தகார் பிரதேசத்தில் உள்ள மியானிஷேன் மாவட்டத்தை தாலிபான்கள் அமெரிக்க படையினரிடமிருந்து திரும்ப பிடித்தனர். இவ்விஷயத்தை காந்தகார் பிரதேச காவல்துறை அதிகாரி இஸ்மத்துல்லாஹ் அலிஸாய் உறுதிப்படுத்தினார். கடந்த நான்கு தினங்களாக நடந்த தொடர் போராட்டத்தின் இறுதியில் மாவட்டத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்கப்படையினரிடமிருந்து தாலிபான்கள் கையகப்படுத்தினர்.