மீனும் தூண்டிலும்

Share this:

அல்லாஹ் எவருக்கு நேர் வழி காட்டுகிறானோ அவர் நேர் வழியை அடைந்தவர் ஆவார்.  யாரைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ, அத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே. அல்குர்ஆன் 7:178

இப்புவியில் பலர் தோன்றியுள்ளனர். அவர்களில் மிகவும் பலமானவர்களும், கொடூரமானவர்களும் கூட இந்த மண்ணிற்குள்(மரணித்து) சென்று விட்டனர். மிகப்பெரிய சக்தியுள்ளவர்களாக கருதப்பட்ட அரசர்கள், ஃபிர்அவ்ன், ஹாமான், நம்ரூத் போன்ற கொடுங்கோல் ஆட்சியாளர்கள், தம்மை இறைவன் என்று கூறியவர்கள் என அனைவரும் மரணித்து விட்டனர். அது மட்டுமல்ல தாங்கள் எப்போது மரணிக்கப் போகிறோம் என்பதையும் கூட அறியாதவர்களாக அவர்கள் அனைவரும் இருந்தனர்.

ஒருவர் தமது பிறந்த தேதி, (Date of Birth) பிறந்த இடம் (place of birth) போன்றவற்றை அறியலாம். ஆனால் இறக்கவிருக்கும் தேதி, இறக்கவிருக்கும் இடம் பற்றி (அல்லாஹ் ஒருவனைத் தவிர)யாரும் அறிய முடியாது. ஆனால், ஒருவன் மரணிக்கும் வரை அவனுக்கு நல்ல காரியங்கள் செய்யவும், தீய காரியங்களில் இருந்து மீளவும் (இறைவன் நாடினால்)பாவமன்னிப்பின் வாய்ப்பும் உள்ளது.

கடலில் இருக்கும் ஒரு சிறிய மீனுக்கு கடல்தான் உலகம்; அதைத் தாண்டி வேறு ஒரு உலகம் உண்டு என்பதை அறியாமலே வாழ்கின்றது. சில மீன்கள் கடலின் மேல் மட்டத்திற்கு வரும்பொழுது வெளியுலகத்தைப் பற்றி அறிந்து கொள்கின்றது. அவற்றில் சில, மீனவர்களின் தூண்டில்கள் மற்றும் வலைகளையும், அதன் ஆபத்தையும் காணவும், அறியவும் வாய்ப்பும் கிடைக்கின்றது.

ஒரு மீன் கடலுக்கு வெளியில் உள்ள உலகத்தைப் பற்றி அறிந்த நிலையில் அதைப்பற்றியும் அங்கிருந்து வரக்கூடிய ஆபத்துக்கள், மீனவர்கள், தூண்டிலிலுள்ள இரைகள், வலைகள், கொக்கிகள் பற்றியும் எச்சரிக்கையாக நெருங்காமல் இருக்கவேண்டும் என்று எடுத்துக் கூறினால், அதை சிறிய மீன் நம்ப மறுக்கிறது. ஒரு நாள் இந்த சிறிய மீன் கடலுள் ஏதோ ஒரு உணவு கொக்கியில் தொங்குவதை தனக்கு அருகில் காண்கிறது. இதைப்பற்றி பெரிய மீன் கூறியதும் நினைவுக்கு வருகிறது. ஆனால் மீனவர்கள் வெளியில் உள்ளார்கள் என்பதை ஏற்க மனம் ஒப்பாமல் அலட்சியப்படுத்தி அதை தமது வாயினால் கவ்வி இழுத்து உண்ண முயலுகிறது. அந்த உணவுடன் இருந்த கொக்கியில் அதன் வாய் சிக்கிவிடுகிறது அடுத்தகணம் அது அந்த கடலில்(உலகில்) இருந்து வெளியே இழுக்கப்படுகிறது. அப்போது வெளியுலகம் உள்ளதையும், மீனவர்களையும் காண்கின்றது. ஆனால் அதனுடைய இறுதி நேரம் அதுவென்பதால் இனி மீண்டும் கடலுக்கு திரும்ப வாய்ப்பில்லை.

மனிதர்களிலும் பலர் இது போன்றே இந்த உலகம் மட்டுமே உண்டு; இதை தவிர வேறு உலகமோ வேறு வாழ்க்கையோ இல்லையென்று கருதுகின்றனர்(அல்லது அவ்வாறு செயல்படுகின்றனர்). எப்படி இந்த சிறிய மீனைப் போல் பல மீன்கள், கடலுக்கு வெளியில் ஒரு உலகம் உள்ளதை பற்றி சிந்திப்பதோ, நம்புவதோ இல்லையோ, அதே போல் பல மனிதர்கள் இவ்வுலக வாழ்வுக்கு பிறகு மறு உலக வாழ்வு ஒன்று இருப்பதை நம்பி அதற்கேற்றவாறு எச்சரிக்கையுடன் வாழ்வதில்லை.

சிலர் மீன்களை விருந்தாக்கி உண்டு மகிழ்கின்றனர்; இன்னும் சிலர் அழகான மீன்களை தமது கண்களுக்கு விருந்தாக்கி பாட்டில்களிலும் கண்ணாடியிலான மீன் தொட்டில்களிலும் வைத்து அழகு பார்த்து மகிழ்கின்றனர். இவ்வாறு இம்மீன்களும் கடலுக்கு வெளியேயுள்ள உலகத்தை ஒருபொழுது காண முடிகிறது.

இதே போல் இவ்வுலக வாழ்க்கைக்கு பிறகு ஒரு வாழ்க்கையுள்ளது; இவ்வுலகத்தில் அழகாக காட்சியளிக்கும் பல தீமைகள் தூண்டிலிலுள்ள இரையைப் போன்றதே. அவற்றினை விட்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மீனின் சிந்தனைக்கு எட்டாத வெளியுலகை போல் நமது சிந்தனைக்கு எட்டாத மறுமை எனும் நிரந்தர உலக வாழ்க்கை இருப்பதும், நல்லதையும் தீயதையும் ஏவக்கூடிய, கண்களுக்கு புலப்படாத ஜின்கள், ஷைத்தான்கள் இருப்பதை நம்பி ஷைத்தானின் வலையிலோ, தூண்டிலிலோ சிக்கிவிடாமல் நமது மனதை கட்டுபடுத்தி, இவ்வுலகத்தின் கவர்ச்சிகளான தீமைகளிலிருந்து நம்மை காத்துக் கொண்டு நாம் நமக்கு அளிக்கப்பட்ட இவ்வுலக வாழ்க்கையை வாழவேண்டும்.

கொஞ்சம் நாம் கற்பனையில், நமது உயிரை பறிக்கும் மலக்குல் மவ்த் எனும் வானவர் வந்து நமது உயிரை பறிக்க நாடும் போது, நாம் மகிழ்வோடு இசைந்தாலும், வேதனையோடு துடித்தாலும், அவர் நமது உயிரை பறித்துச் செல்வதைவிட்டு நம்மால் தடுத்துக் கொள்ள முடியாது என்பதை கொண்டு வர வேண்டும். (இது திடீரென்று எப்போது நடக்கும் என்று நாம் அறிய இயலாத ஆனால் நிச்சயம் நடக்க உள்ள ஒன்றுதான்).  அப்போது நாம் நமது இவ்வுலகைத் தவிர்ர வேறு ஒரு உலகம் உண்டு என்பதை நிச்சயமாக காணத்தான் போகிறோம். ஆனால் கண்ட பின் மீண்டும் இவ்வுலகிற்கு வர இயலாது(மேலே கூறிய உதாரணத்தின் மீனைப்போல்).

இந்த கற்பனை கதையில் வரும் படிப்பினையை விடவும் சுருக்கமாக இறைவன் அல்குர்ஆனில் கூறுவதை கீழே காணலாம்.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்.  அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில்தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்.  எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்.  இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 3:185

இதை நம்பி ஏற்று, எச்சரிக்கையாக நமது இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும், இவ்வுலகில் அழகாக தோன்றும் தீமைகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்து கொண்டு வாழ்ந்து ஈடேற்றம் பெறவும் அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக.

தமிழாக்கம்: இப்னு ஆதம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.