“பாவ மன்னிப்பு” எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காம் தளத்துக்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஷரஃபுத்தீன் உமரி (மீள் பதிவு).
“… எவர் ஒருவர் ரமளான் மாதத்தை அடைந்தும் அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்” என்று ஜிப்ரீல் (அலை) துஆச் செய்தபோது, நபி (ஸல்) ”ஆமீன்” என்று கூறியதாகக் கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது. இதுவும் நமக்கு ரமலானின் துஆக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது:
“நீங்கள் மிம்பருக்கு அருகில் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது ‘ஆமீன்” என்றார்கள். இரண்டாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்” என்றார்கள். மூன்றாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்” என்றார்கள்.
”இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம்” என்றோம். அதற்கு நபி (ஸல்), ”என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட(க்கோர)வில்லையோ அவர்(இறையருளை விட்டும்)தூரமாகட்டும்” என்றார்கள், நான் ஆமீன் என்றேன். ‘உங்களைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர்(இறையருளை விட்டும்)தூரமாகட்டும்” என்றார்கள். நான் ஆமீன் என்றேன். ‘தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று(அவர்களுக்கு சேவை செய்து)யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும்(இறையருளை விட்டும்) தூரமாகட்டும்” என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்)
“இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கின்றான்” என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி
எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் அவற்றை மன்னித்திடவே அல்லாஹ் விரும்புகின்றான். அலட்சியமாகவோ அல்லது அறியாமையினாலோ ஒருவர் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோராமலேயே மரணித்து விட்டால், அவருடைய பாவங்கள் இறுதிநாள் வரை அழிக்கப்படாமல் நிலையாகப் பதிவு செய்யப்பட்டு விடும் ஆபத்து புரிகிறதா?
தமக்குத்தாமே (அநியாயம் செய்து) வரம்பு மீறிய என் அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்துவிட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன் என (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 39:53).
தவ்பாவைப் பற்றிய சத்தியமார்க்கம்.காம் தளப் பதிவையும் கட்டாயம் படித்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் பெருகி வழியும் மாதமாகிய இந்த ரமளானில் நம்முடைய தவ்பா எனும் பாவமீட்சியை அவனிடம் அழுது கேட்போம்.
நிச்சயம் நாம் அனைவரும் பாவங்களிலிருந்து விலகுவதற்கு அவன் அருள் புரிவான், இன்ஷா அல்லாஹ்.