பெருநாள் தானம் – பித்ரு ஸகாத்

Share this:

மீண்டும் ஒரு ரமளான்: 25

பெருநாள் தர்மமும் நோக்கமும்
“பித்ரு ஸகாத், நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளின் உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து விடுகிறாரோ அதுதான் ஒப்புக் கொள்ளப்பட்டப் பெருநாள் தானமாகும் யார் பெருநாள் தொழுகைக்குப்பின் அதனை வழங்குகிறாரோ அது (பெருநாள் தானமாகாது மாறாக அது) சாதாரண தர்மமேயாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ. ஹாகீம்.

“பித்ரு ஸகாத் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அதற்குப் பரிகாரமாகவும் ஏழைகளின் (அன்றைய) உணவுக்கு வழியாகவும் இருப்பதற்காக நபி (ஸல்) விதியாக்கினார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத் 137, இப்னுமாஜா 1817, தாரகுத்னீ, பைஹகீ.

நபி (ஸல்) பெருநாள் தானத்தைக் கடமையாக்கி, ‘‘இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்கள் ஆக்குங்கள்” என்றும் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: பைஹகீ, தாரகுத்னீ.

பெருநாள் தானம் எப்போது, தொழுகைக்கு முன்பா? பின்பா?
பித்ரு ஸகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படு முன்பே வழங்கிவிட வேண்டுமென நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி 1503, 1509, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ.

நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக ஃபித்ரு ஸக்காத்தை வழங்குபவர்களாக இருந்தனர். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்- புகாரி.

பெருநாள் தானத்தின் அளவு
முஸ்லிமான ஆண்கள், பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தானம் தலா ஒரு ‘ஸாவு’ என்று நபி (ஸல்) நிர்ணயம் செய்தனர். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி): புகாரி 1503 முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ, இப்னுமாஜா.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் உணவுப் பொருட்களில் ஒரு ஸாவு பித்ருத் தானம் வழங்குவோம் அன்றையதினம் எங்களின் உணவாக கோதுமையும் உலர்ந்த திராட்சையும் இருந்தது. அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) புகாரி.

அனஸ் (ரலி) என்ற நபித்தோழரிடம் ஒருவர் ஸாவு (அளவைப்) பற்றிக் கேட்டபோது இந்த அளவையே கூறினார்கள், கேள்வி கேட்டவர் ‘நீங்கள் அபூஹனீஃபா என்பவருக்கு மாற்றமாகச் சொல்கிறீர்களே?’ என்று கேட்டார். இதைக்கேட்ட அனஸ் (ரலி) கடும் கோபம் கொண்டு பல நபித்தோழர்களிடம் இருந்த ‘ஸாவு’ என்னும் அளவைக் கொண்டுவரச் செய்து அதை மக்களிடம் காட்டி ‘இதில்தான் நாங்கள் அளந்து பெருநாள் தானம் செய்வோம்’ என்று கூறினார்கள் அவர்கள் காட்டிய ‘ஸாவு’ என்பது அவர்கள் கூறிய அளவைக் கொண்டதாகவே இருந்தது. (நூல்கள்: தாரகுத்னீ, பைஹகீ)

(இருகைகளையும் சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்குமுறை அள்ளி அளந்து போடுவதே ஒரு ‘ஸாவு’ என்பதன் அளவாகும்)

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கோதுமை – பேரீத்தப்பழங்கள் பெருநாள் தானமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு எதுவாக இருக்கிறதோ அதைத்தான் உணவாக கொடுக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அவர்களின் உணவுப் பொருள்கள் எதுவோ அதுவே பெருநாள் தானமாக வழங்கப்பட்டது நாம் மேலே எடுத்துக்காட்டியுள்ள அபூஸயீத் (ரலி) அவர்களின் செய்தியிலிருந்து இதை விளங்கலாம்.

இன்றைக்கு நமது உணவு முறையில் அரிசியே பெரும்பங்கு வகிப்பதால் நாம் அரிசியை ஒரு ஸாவு தானமாக வழங்கலாம். இதர உணவுப் பொருள்களுக்கும் இதுதான் பொருந்தும். உணவுப் பொருளாக இல்லாமல் பணமாக கொடுக்கலாமா.. என்றால் அவ்வாறு கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை.

ஓர் அடிப்படை மூலத்திலிருந்து, தகுதியான இன்னொன்றைப் பிரித்து எடுப்பதையே ‘கியாஸ்’ என்று இஸ்லாமிய ஃபிக்ஹுக் கலையில் சொல்லப்படும்.

அலட்சியமின்றி அனைவரும் குறித்த நேரத்தில் பெருநாள் தானங்களை வழங்கிடுவோம்.

oOo

(மீள் பதிவு)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.