{mosimage}மேற்கு ஈராக் நகரமான ஹதீஸாவில் 24 அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற வழக்கில் 8 அமெரிக்க படையினர் குற்றவாளிகள் என விசாரணையின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தினர் நான்கு பேர் இக்கொலையில் நேரடியாக பங்கெடுத்ததாகவும் மற்ற நான்கு பேர் இக்கூட்டுக் கொலையை மூடி மறைத்து வைத்ததாகவும் அமெரிக்க இராணுவ நீதிமன்ற வழக்கு தரப்பு உறுதி செய்துள்ளது.
இப்படுகொலை நடந்த தினமான நவம்பர் 25, 2005 அன்று சாலையருகில் நடந்த குண்டு வெடிப்பில் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்ததை தொடர்ந்து ஆவேசமான சர்ஜண்ட் ஃப்ராங்க் வூட்டரிக்கின் தலைமையில் உள்ள அமெரிக்க படைப்பிரிவு ஹதீஸா நகர வீடுகளில் நுழைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 24 பேரை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். அதில் நோயாளியான ஒரு ஊனமுற்ற வயோதிகரை வீட்டிலிருந்து சாலையில் இழுத்து வந்து கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு செய்தி அளிக்கையில் தங்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தினர் கூறியிருந்தனர்.
இந்த படுபாதக செயலைச் செய்த அமெரிக்க இராணுவத்தின் படைப்பிரிவு தலைவரான ஃப்ராங்க் வூட்டரிக், 12 பேரை கொலை செய்வதில் நேரடியாக பங்கெடுத்ததாகவும் மற்றும் ஆறு பேரை கொலை செய்ய உத்தரவிட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. விசாரணை பூர்த்தியாகி தீர்ப்பு வழங்கப்பட்டால் சம்பந்தப்பட்ட இராணுவத்தினருக்கு ஆயுள்தண்டனை வரை தண்டனை கொடுக்க வாய்ப்பிருக்கிறது.
இச்சம்பவம் நடந்து முடிந்து 3 மாத காலத்திற்கு பிறகும் அமெரிக்கா இதனைக் குறித்த விசாரணைக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தது. அதன் பின்னர் இச்சம்பவத்தைக் குறித்த ஒரு வீடியோ ஆதாரத்தை மனித உரிமைக் கழகம் ஒன்று பகிரங்கமாக வெளியிட்டவுடன் சர்வதேச குற்றச்சாட்டிலிருந்து தற்காத்துக் கொள்ள அமெரிக்கா விசாரணைக்கு உத்தரவிட்டது.
இராணுவ நீதிமன்ற தரப்பின் இக்கண்டறிதலை பிரபல மனித உரிமைக்கழகம் ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் வரவேற்றது. குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அது கோரிக்கை விடுத்தது. ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தினர் நடத்தும் அநேக அநியாயங்களில் ஹதீஸா கூட்டுகொலை ஒரு உதாரணம் மட்டுமே என்றும் மனித உரிமை கழகத்தினர் முன்பே குற்றம் சுமத்தியிருந்தனர்.
அதேநேரம் "எத்தனை உயிர்களும், பணமும் நஷ்டமடைந்தாலும் ஈராக்கில் இராணுவ நடவடிக்கை தொடரும்" என அமெரிக்க ஸ்டேட் செக்ரடரி கோண்டலீஸா ரைஸ் அறிவித்துள்ளார். ஹதீஸா படுகொலைச் சம்பவம் பற்றிய விசாரணை முடிவுகளைக் குறித்து கருத்து தெரிவிக்கும் பொழுது அவர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.