பெண்ணைப் பொன்னில் பொதிந்தது யார்? (புதிய தொடர்) பாகம்-1

Share this:

லகம் அதிவேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் தகவல் புரட்சி யுகத்தில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனித சமுதாயம், இன்றைய காலகட்டத்தில் உலகின் ஒரு பக்கம் பொருளாதாரத்தில் எந்த அளவு தன்னிறைவு கண்டுள்ளதோ அதனை விட மிகக் கடுமையான அளவில் மற்றொரு பக்கம் வாழ்வாதார சூழ்நிலை ஏதுமின்றி வாழ்வின் அடிப்படை விஷயங்களான வசிக்க ஒரு நிரந்தர இருப்பிடமின்றி, அணிய முழுமையான ஓர் ஆடையின்றி, புசிக்க ஒருவேளை உணவு கூட முழுமையாக கிடைக்காத சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டுள்ளது என்றாலும் பெண்களுக்கிடையில் ஆபரண ஆசையும் அதற்கு ஏற்ற விதத்தில் நகை வியாபாரமும் உலகில் பெருகிக் கொண்டே வருகிறது.

இதன் காரணமாக பல தரித்திர நிலையில் இருக்கும் குடும்பங்கள் பல்வேறு நிலையில் கண்ணீர் குடிக்கின்றன. அதிலும் பெண்களை பெற்ற குடும்பமோ சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இஸ்லாம், வரதட்சணை என்னும் சமூக கொடுமையினை பெண்ணை திருமணம் புரிய அவள் கேட்கும் மஹர் எனும் தட்சணையை கொடுக்க வேண்டும் எனக்கூறி அடியோடு இல்லாமலாக்கினாலும், பெண் வீட்டாரிடமிருந்து கொள்ளையடித்து உண்டு கொழித்து, சமூகத்தில் ஆண் என்ற அகந்தையில் உலாவரும் சமூக விரோத காட்டுமிராண்டிக் கூட்டம் என்னமோ இன்னமும் தொட்டதெற்கெல்லாம் பெண் வீட்டாரைச் சீண்டி விளையாடும் நிலை தான் சமூகத்தில் நிலவுகிறது.

பெண்களின் நகை மோகத்திற்கு இதனை ஒரு காரணமாக சிலர் கூறிச் சென்றாலும், ஆண்களின் வரதட்சணை என்னும் கொடுமைக்குப் பின்னால் மற்றுமொரு பெண் தான் ஒளிந்துள்ளாள் என்பதையும் மறுக்க இயலாது.

அதே வேளையில் அதிவேக உலகில் பணத்தை அள்ளி எடுக்கப் போட்டியிடும் வியாபார நிறுவனங்கள், கோடிக்கணக்கில் விளம்பரங்களுக்கு அள்ளியிறைத்து சமூகத்தில் நகையைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பெண்ணிற்கு, அக்கணத்தில் தான் மட்டுமே அழகானவள் என்ற ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த எண்ணம் பெண் சமூகத்தில் நிரந்தரமாக திணிக்கப்பட்டுக் கொண்டே இருப்பது இன்று கண்கூடாகும்.

ஆணாதிக்கச் சமூகம் தனது பணத்தாசைக்கு பெண் சமூகத்தின் பொன்னின் மீதான ஆசையை ஒரு கருவியாக வைத்துக் கொண்டு போற்றப்பட வேண்டிய தாய்மையை வியாபாரத்திற்காக விளம்பரம் என்னும் கண்கட்டு வித்தையால் இன்று விலைபேசி விற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பொன்னின் மீதான ஆசையால் ஆபரணங்களுக்கு அடிமையாகி, வக்கிர எண்ணம் கொண்ட மனித மிருகங்கள் உலாவரும் பொருட்காட்சியில் வெறும் காட்சிப்பொருளாக பெண்ணியம் தனது மகத்துவத்தையும், தனித்தன்மையையும் இழந்து, தான் படைக்கப்பட்டதன் மகத்தான நோக்கத்தை மறந்தவர்களாக உலாவந்து கொண்டிருக்கின்றது.

ஆபரணத்தின் மீதான இந்த அளவுகடந்த மோகத்தினால் பலியாவது என்னமோ தரித்திரத்தில் உழலும் பாமர குடும்பங்களே!. சமூகத்தில் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இந்த மாய கண்கட்டு வித்தை தொடரும்? பொன்னாசையைக் குறித்த ஒரு மறுவாசிப்பு இந்த சமூகத்திற்கு தற்போது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

கேரளத்தின் பிரபல தினப்பத்திரிக்கையான “தேஜஸ்” முஸ்லிம் பெண்கள் அமைப்புகளையும், பல பிரபலங்களையும் ஒன்றிணைத்து இது தொடர்பாக ஒரு மனம் திறந்த சர்ச்சையை சமீபத்தில் நடத்தியது.

அதில் கலந்து கொண்டவர்களிடம் 6 கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அக்கேள்விகளையும், அதற்குப் பதிலளித்து பேசிய முஸ்லிம் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரபலங்களின் கருத்துக்களை இங்கு காணலாம்.

கேள்விகள்:

1) பெண்கள் சமூகத்தை கவர்ந்து புசிக்கும் ஆபரணத்தின் மீதான ஆசையைக் குறித்த கண்ணோட்டம் என்ன?

2) திருமணச் சந்தையில் கண்ணீர் குடிக்கும் நிலைக்கு ஆளாகும் பெண்களின் மோசமான நிலைக்கு முக்கியக் காரணம் பெண்களின் ஆபரணத்தின் மீதான அளவுகடந்த ஆசையா?

3) நகைக்கடைகள் பரவலாக முளைப்பதன் பின்னணியில் உள்ள வியாபார இலட்சியங்களைக் குறித்த கருத்து என்ன?

4) ஆபரண ஆசையில் பல்வேறு மதப் பெண்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகள் உண்டா? அதன் காரணம் என்ன?

5) முஸ்லிம் பெண்களின் நகையின் மீதான ஆசைக்குக் கடிவாளம் இட மார்க்க உபதேசங்கள் எவ்வளவு தூரம் பயன்படுத்தப்பட வேண்டும்? இதில் மார்க்க அறிஞர்கள் மற்றும் இயக்கத் தலைமைகளின் பங்கு என்ன?

6) ஆபரணத்தின் மீதான அளவுகடந்த ஆசையில் இருந்து பெண்கள் மட்டும் மீள்வதன் மூலம் பிரச்சினைகளுக்குப் பரிகாரம் கிடைக்குமா?

இக்கேள்விகளின் மீதான பல்வேறு பிரபலங்கள் மற்றும் முஸ்லிம் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளின் ஆணித்தரமான, கருத்தாழமிக்க விமர்சனங்களை அடுத்த பகுதியில் காணலாம்.

— அபூசுமையா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.