எனக்கு அறிமுகமான ஜின்னா -பகுதி 4!

எனக்கு அறிமுகமான ஜின்னா -பகுதி 4!

தொழிற்கல்வி பயில லண்டன் சென்ற ஜின்னா அங்கு என்ன செய்தார் என்பதைப் பார்க்கும்முன், அவர் சகோதரி பாத்திமா ஜின்னா குறித்து சிறிது அறிந்துகொள்வோம்.

அது யார் பாத்திமா ஜின்னா? தேசத்தாயாம்(மதர் இ மில்லத்).. ஜின்னா பற்றி படிக்கும் போதெல்லாம் தவிர்க்க முடியாத அளவுக்கு அவர் பெயருடனே ஒட்டி நிற்கும் அளவுக்கு பாத்திமா ஜின்னா என்ன சாதனை புரிந்தார்?

இத்தகைய பல்வேறு கேள்விகளுடன் அவரைக் குறித்து தேடுவோரெல்லாம் ஒரு முடிவுக்கு வருவது நிச்சயம்! முஹம்மத் அலி ஜின்னாவின் வாழ்க்கையாகட்டும், அரசியலாகட்டும்… பாத்திமாவை தவிர்த்து எழுதிவிட முடியாது! தம் சகோதரனின் நிழலாக, மனசாட்சியாக, கண்ணாடியாக இருந்த இரும்பு மனுஷி அவர்!

ஜின்னாவின் ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திர போராட்டங்களுக்கும், அவரின் அரசியல் கொள்கையோடு ஒன்றிய நிர்வாகங்களுக்கும் தோளோடு தோள் நின்று உதவிய பாத்திமா ஜின்னாவின் தைரியத்தையும் திறமையையும் நினைத்துப் பார்த்தால் வியப்பு மேலிடுகிறது. சமையலறையோடு தங்கள் கடமைகள் முடிந்துவிட்டதாக கருதும் இன்றையகால பெரும்பாலான பெண்களுக்கு பாத்திமா ஜின்னா நிச்சயமாக ஒரு எனர்ஜி டானிக் தான்.

வீட்டின் முதல் பிள்ளையான ஜின்னாவுக்கும் கடைசி பிள்ளையான பாத்திமாவுக்கும் இடையே 17 வயது வித்தியாசம். ஜின்னாவுக்கு உடன்பிறந்தவர்கள் ஆறுபேர் இருந்த போதும் பாத்திமா அளவுக்கு அவருடன் மிக நெருக்கமாக யாரும் இல்லை. அவ்வளவு ஏன், பாத்திமா தம் சகோதரர் ஜின்னாவுடன் நெருங்கிய அளவுக்கு அவர் மனைவியோ, மகளோ, நண்பர்களோ கூட இருந்ததில்லை! காரணம் ஒன்றே தான்… பாத்திமாவிடம் காணப்பட்டது எதிர்பார்ப்பில்லாத அன்பு! செய்நன்றி மறவாப் பண்பு; தம் சகோதரனின் ஆளுமையின் மீதான பற்று; ஜின்னா என்ன முடிவெடுத்தாலும் அது சரிதான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை. ஜின்னாவிற்கும், அவருடைய அரசியல்வாழ்வில் நம்பிக்கையான சுயநலமில்லாத உறவு தேவையாக இருந்தது.

ஜின்னா பிறந்த அதே வாசீர்மேன்சனில் தான் 1893ல் பாத்திமாவும் பிறந்தார். சிறுவயதிலேயே புத்திக்கூர்மை! தெளிந்த பார்வை…. தம் தங்கையை அறிவாளியாக, திறமைமிக்கவராக, உறுதியானவராக வார்த்தெடுத்ததில் ஜின்னாவின் பங்கும் மிக மிக அதிகம். 1901 ல் தந்தையை இழந்த அந்த 8 வயது சிறுமிக்கு ஜின்னாவே தந்தையாக மாறினார். அதிகம் பணம் ஈட்ட வேண்டும், அதிக பேரும் புகழும் பெற வேண்டும் என்ற லட்சியங்களோடு தம் தங்கை பாத்திமாவிற்கு சிறந்த கல்வி கொடுத்தாக வேண்டுமென்பதும் ஒட்டிக்கொண்டது. தரமான கல்வி வேண்டுமென்பதற்காக மும்பையில் மிகப்பிரபலமான பந்தாரா கான்வண்ட் ஸ்கூலில் தங்கையைச் சேர்த்தார். “என்றானாலும் கல்யாணம் செய்துகொண்டு கணவனோடு போகப்போகிறவளுக்கு கான்வன்ட் கல்வி எதற்கு?” போன்ற பெரிசுகளின் வழக்கமான வசனங்களையெல்லாம் ஜின்னா காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பாத்திமாவும் தமக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பள்ளிப் படிப்பை நல்லபடியாக நிறைவு செய்தார்!

உயர்கல்வி பெற, அந்நாளில் போட்டி மிகுந்த கல்கத்தா பல்கலைகழகத்தின் டாக்டர் ஆர். அகமது பல் மருத்துவகல்லூரியினை ஜின்னா தேர்வு செய்தார். 1919 ஆம் ஆண்டு அக்கல்லூரியில் பாத்திமா சேர்ந்தார். இப்போதும் “பெண்பிள்ளைக்கு எதற்காக இவ்வளவு படிப்பு? அவ்வளவு தூரம் போய் படித்துத்தான் ஆகவேண்டுமா? போதும் இத்துடன் நிறுத்து” என்ற எதிர்ப்புக் குரல்கள் குடும்பத்திலிருந்து எழுந்தன. அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாத ஜின்னா, தம் தங்கைக்குச் சிறந்த கல்வியைக் கொடுக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருந்தார். பாத்திமாவும் தம் மீது சகோதரனுக்கு இருந்த நம்பிக்கையைச் சிதைக்காமல் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி, பல் அறுவை சிகிச்சையில் பட்டம் பெற்று மும்பை திரும்பினார்.

மருத்துவரான பாத்திமா சேவையாற்ற, மும்பையில் அப்துர் ரஹ்மான் தெருவில் 1923 ஆம் ஆண்டு மருத்துவமனை ஒன்றைக் கட்டிக்கொடுத்தார் ஜின்னா. பாத்திமா தம் சேவையை அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், தோபிதலோவ் முனிசிபல் மருத்துவமனையில் மக்களுக்கு இலவச மருத்துவசேவையும் அளித்தார்.

6 ஆண்டுகள்! 1929ல் ஜின்னாவின் இரண்டாம் மனைவி தன் 29 ஆம் வயதில் காலமானார். இந்திய அரசியலிலும் தமது வழக்கறிஞர் தொழிலிலும் ஜின்னா பரபரப்பாய் செயல்பட்டுக்கொண்டிருந்த நேரம் அது. தம் உடல்நிலையையும் குடும்பத்தையும் சரிவர கவனிக்க முடியாமல் நேரப்பற்றாக்குறையால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியிருந்தார். இப்படியே போனால் தம் சகோதரனின் உடல்நிலை மோசமாகிவிடாதா? நீதிமன்றம், வழக்கு, சுதந்திரபோராட்டம், தேர்தல், அரசியல் என எந்நாளும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழன்றுகொண்டிருந்தால் எப்படித்தான் தம்மைக் கவனித்து கொள்ளமுடியும்? தம்மைக் குழப்பிக்கொண்டிருந்த கேள்விக்குத் தாமே விடையும் கண்டுபிடித்தார்…. முடிவெடுத்தார்!

தமது மருத்துவ சேவைக்கு முற்றுப்புள்ளியிட்டு, ஆசை ஆசையாய் கட்டிய தமது மருத்துவமனையுடன் சேர்த்து தம் வாழ்நாள் கனவான சிறந்த மருத்துவர் என்ற ஆசையையும் மூட்டைகட்டிக்கொண்டு, தம் சகோதரனின் ”goanese பங்க்ளா”விற்குக் குடிபுகுந்தார். அன்று முதல் ஜின்னாவின் செவிலிப்பெண்ணாக, ஆலோசகராக, உதவியாளராக, சொத்துகளைப் பாதுகாக்கும் நிர்வாகியாக… சுருங்கக்கூறின் ஜின்னாவின் ஒருபாதியாகவே பாத்திமா மாறிப்போனார். பாத்திமாவின் வருகைக்குப்பின் ஜின்னாவால் தம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடிந்தது… மிகப் பெரும்பாரங்கள் சற்றுகுறைவானதுபோலவே உணர்ந்தார்.

ஒருமுறை ஜின்னா தம் தங்கை குறித்து இவ்வாறு கூறினார்: “நான் வீட்டிற்கு வந்து என் தங்கையின் முகத்தைப் பார்க்கும்பொழுதெல்லாம் அதில் பிரகாசமான ஒளிவீச்சை உணர்கிறேன். (என் வாழ்க்கையில்) கவலைகளும் சோர்வுகளும் சேர்ந்து உடல்நிலையை மோசமானதாக்கிக் கொண்டிருக்கையில் பாத்திமா என் மீது நிதானத்தைத் திணித்தார்”.

1930ம் ஆண்டு… இந்திய அரசியலில் ஜின்னாவிற்கு எதிரான சூழ்ச்சிகள் தொடங்கிய காலகட்டம். “உங்க அரசியலும் வேண்டாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்” என அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு லண்டனிற்கு புறப்பட்ட போது, ஜின்னாவுடன் பாத்திமாவும் புறப்பட்டார். அங்கே தான் ஜின்னாவின் ஒரே மகள் டினா படித்துக்கொண்டிருந்தார். தம் தங்கையின் பொறுப்பிலேயே தம் மகளையும் ஒப்படைத்தார் ஜின்னா. டினாவின் கல்வி, ஒழுக்கம், குர்ஆன் ஓதுதல் என அனைத்துக்கும் பாத்திமா ஆசானாக மாறினார். சிலரின் வற்புறுத்தல் பேரில் இந்தியாவிற்கு 1934ம் ஆண்டு ஜின்னா திரும்பினார். பாத்திமாவும் உடன் வந்தார். அதுவரை குடும்பப் பொறுப்புகளையும் சகோதரனின் உடல்நிலையையும் கவனித்து வந்த பாத்திமா, அன்று முதல் ஜின்னாவுடன் சேர்ந்து அரசியலிலும் ஈடுபட்டார். சுருங்கக்கூறின், ஜின்னாவின் நிழலாகவே பாத்திமா மாறிப்போனார்.

முஸ்லீம் லீக்கின் மும்பை மாகாண செயற்குழு உறுப்பினராக பொறுப்பேற்று 1947 வரை தொடர்ந்தார். 1941ல் டெல்லியில் அகில இந்திய முஸ்லீம் பெண்கள் மாணவ கூட்டமைப்பை ( All India Muslim Women Students Federation) நிறுவினார். 1947 காலகட்டத்தில் அனைத்திந்திய பெண்கள் நிவாரண குழு உருவாக்கினார். இதுவே பின்னாளில் “பாகிஸ்தான் மகளிர் சங்கம்” (All Pakistan Women’s Association – APWA) உருவாக வழிவகுத்தது. லியாக்கத் அலிகான் மனைவி ராணா உடன் இணைந்து பாகிஸ்தானில் இந்த மகளிர் சங்கத்தை உருவாக்கியவரும் பாத்திமாதான். பாகிஸ்தான் தேசம் உருவாவதற்கான நிதி ஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தைகளில் பாத்திமாவின் பங்கு குறிப்பிடத்தக்கது.

ஜின்னா இறுதியாக உலகைப் பார்க்கும் அந்த நொடியிலும் பாத்திமா, ஜின்னாவின் அருகிலேயேதான் கவர்னர் ஜெனரல் மாளிகையில் இருந்தார். மரண தருவாயில் அவஸ்தைபட்ட ஜின்னாவை ஒரு தாயைப்போன்று கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார். 1965ல் தனது 71 ம் வயதில் பாகிஸ்தான் அதிபர்தேர்தலில் அய்யூப்கானை எதிர்த்து போட்டியிட்டார். ஜமாத்தே இஸ்லாமி இயக்கமும் பெண்கள் நாட்டை ஆள்வது தொடர்பான நிலைபாட்டை அப்போது மாற்றிக் கொண்டிருந்தது. துரதிஷ்டவசமாகவோ சூழ்ச்சியாலோ தோற்கடிக்கப்பட்டார். அய்யூப்கான் மீது பாத்திமாவிற்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை; தமது அண்டைவீட்டுவாசியான பூட்டோவிடம் பாத்திமா அடிக்கடி இவ்வாறு சொல்வதுண்டு: “அய்யூப்கானை நம்பாதே”.

ஜின்னாவின் மரணத்துக்குப் பின்னர் பாத்திமா தனிவீட்டுக்கு மாறினார். அங்கிருந்தே தமது அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்தார். பாகிஸ்தானை உருவாக்குவதில் உதவி புரிந்தவர் என்பதாலும் தமது அரசியல் ஆசானான தம் சகோதரனின் உழைப்பாலும் உருவான தேசமென்பதாலும் பாகிஸ்தானின் ஒவ்வொரு அசைவிலும் தம் பார்வையைச் செலுத்திவந்தார். மோசமான செயல்பாடுகளின் போது எழும் முதல் கண்டன குரல் பாத்திமாவிடமிருந்தே வரும் அளவுக்கு ஜின்னாவின் இறப்புக்கும் பிறகு அவரின் செயல்பாடுகள் இருந்தன.

பாத்திமா, பாகிஸ்தானிய பெண்கள் பலருக்கும் ரோல்மாடல் ஹீரோயினாக மாறி போனதில் ஆச்சர்யமில்லை. தாம் வசித்திருந்த அந்த வீட்டிலேயே ஜூலை 1967 ல் மாரடைப்பால் மரணமடைந்தார். ஆனால் அவர் அநியாயமாக கொல்லப்பட்டதாகவும், அவரின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் அவரின் அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களால் சந்தேகமும் எழுப்பப்பட்டது. நாட்டுருவாக்கத்தில் சிறப்பாக பணியாற்றிய பாத்திமாவுக்கு மரியாதை செலுத்தும் முகமாக, ஜின்னாவின் சமாதி இருக்கும் Mazar-e-Quaid ல் பாத்திமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஹெக்டார் பாலிதோ எழுதிய “பாகிஸ்தான் சிற்பி ஜின்னா”(Jinnah Creator of Pakistan” : Hector Bolitho) என்ற புத்தகம் 1954ம் ஆண்டு வெளியானது. அதில் ஜின்னாவின் அரசியல் வாழ்க்கை முழுவதுமாக பிரதிபலிக்காத குறையை உணர்ந்தார் பாத்திமா. ஆகவே, ஜின்னாவின் முழு அரசியல்வாழ்வையும் தெளிவாக விவரிக்கும் வகையில் ஜின்னாவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுத தீர்மானித்தார். அதற்காக சிறந்த எழுத்தாளரைத் தேடி, G. அல்லனா-வைத் தேர்ந்தெடுத்தார். அவருடன் சேர்ந்து சுமார் 18 மாதங்கள் ஜின்னா பற்றிய புத்தக உருவாக்கத்தில் செலவழித்தார். இதற்கிடையில், தேர்தல் பணிகள் அழுத்தியதால் புத்தகம் வடிவம் பெறுவது தள்ளிப்போனது. இறுதியில் பாத்திமாவால் அப்புத்தகம் வெளியிட முடியாமலேயே போய்விட்டது. பாத்திமாவின் இறப்புக்குப்பின் அவரிடன் வீட்டிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட நகல்களைக் கொண்டு ஷரிப் அல் முஜாஹித் என்பவரால் தொகுக்கப்பட்டு காயிதே ஆஸம் அகாடமி 1987ம் ஆண்டு “மை ப்ரதர்” எனும் பெயரில் அப்புத்தகத்தை வெளியிட்டது. ஜின்னாவின் புறத்திலிருந்து அவரைப் பற்றியும் அவர் அரசியல் நிலைபாடு குறித்தும் சகிக்கமுடியா இறுதிநாட்கள் குறித்தும் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் பெரிதும் உதவுகிறது.

பாத்திமாவின் இறப்புவரை வந்தபின்னரும் அவரின் திருமண வாழ்வு, கணவர் குழந்தைகள் பற்றிய தகவல் ஏதும் வரவில்லையே என்ற எண்ணம் வாசிப்போருக்கு ஏற்படலாம். சரியான எண்ணம்தான். பாத்திமா ஜின்னா திருமணம் செய்துகொள்ளாததாலேயே அது குறித்து எதுவும் கூற இயலவில்லை.  ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதற்கான காரணம் தெரியவில்லை. திருமணத்தின் மீது ஆர்வம் ஏற்படவில்லையா? அல்லது படிப்பு, மருத்துவசேவை என பரபரப்பாய் இருந்ததால் திருமணத்தைப் பற்றி  யோசிக்கவில்லையா? அல்லது தமது சகோதரனையும் அவரது குடும்பத்தையும் கவனித்து கொள்வதற்காக திருமணத்தை மறுத்தாரா? எதற்கும் விடையில்லை. சிறந்த கல்வியைக் கொடுத்த ஜின்னாவால் வாழ்க்கையின் சிறந்த அந்தஸ்தான திருமண உறவை தம் தங்கைக்கு ஏற்படுத்திக்கொடுக்க முடியாது போய்விட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை!

ஜின்னாவுடன் இணைந்து இந்திய விடுதலை போராட்டத்திலும் தொடர்ந்து பாகிஸ்தான் உருவாக்கத்திலும் சிறப்பாக பங்களிப்பு செய்த பாத்திமாவை பாகிஸ்தான் சிறப்பாக கவுரவப்படுத்தியுள்ளது.

* 1946ல்  ‘சர் கங்காராம் மருத்துவக் கல்லூரி’ அடித்தளமிடப்பட்டது.  அம்மருத்துவக் கல்லூரியின் நிறுவனர், பிரிவினைக்குப் பிறகு இந்தியா சென்றுவிட்டதால் பாதியிலேயே அக்கல்லூரி திட்டம் கைவிடப்பட்டது. மருத்துவ நிபுணர் பேராசிரியர் சுஜாத் அலியின் முயற்சியால் மருத்துவப்பயிலகமாக அது தொடர்ந்து நடத்தப்பட்டது.  ஜின்னாவிடம் அவர் தங்கையின் பெயரைத் தங்கள் மருத்துவமனைக்கு வைக்கும்படி சுஜாத் அலி அனுமதி கேட்க ஜின்னாவும் அனுமதியளித்தார். பாத்திமா ஜின்னா மருத்துவ கல்லூரி,  சர் கங்காராம் மருத்துவமனையுடன் இணைந்து தனது சேவையைத் தொடர்கிறது.

* பாகிஸ்தானின் முதல் பெண்களுக்கான பல்கலைக்கழகத்திற்கு “பாத்திமா ஜின்னா பெண்கள் பல்கலைக்கழகம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

* மைக்கேல் ஜாபிரோ என்பவரின் ஐந்துவருட கால வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது “பாத்திமா ஜின்னா பார்க்”

* நகரின் மையப் பகுதி ஒன்றுக்கு பாத்திமா ஜின்னா காலனி என பெயரிடப்பட்டுள்ளது.

* அரசு மட்டுமன்றி மக்களிடத்திலும் பாத்திமா ஜின்னா நன்மதிப்பு பெற்று விளங்கினார் என்பதன் அடையாளமாக தனியாரால் அமைக்கப்பட்ட “பாத்திமா ஜின்னா பல் மருத்துவ கல்லூரி” விளங்குகிறது.

பின்னர் விரிவாக பார்க்க இருக்கும் ஜின்னாவின் அரசியல் வாழ்வில் ஊடாக வரும் பாத்திமா ஜின்னா குறித்து அறிந்துகொள்ள இக்குறிப்புகள் போதுமானவை. வரும் பகுதியில், லண்டன் சென்ற ஜின்னா அங்கு என்ன செய்தார் என்பதைப் பார்ப்போம்.

தொடரும்..

– ஆமினா முஹம்மது.