ஜின்னா… பள்ளிப்பாடம் சொல்லிக் கொடுத்ததைத் தவிர கூடுதலாக அவரைப் பற்றிய அறிமுகம் இல்லாததால், எல்லோரையும் போல எனக்கும் அவர் எதிரியாகியே போயிருந்தார்… ஆனால் அவரைப் பற்றிய தேடலில் கிடைத்த தகவல்களின் வழியே என்னைக் கவர்ந்த ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார்.
எதிரியை நண்பனாக்கவும், நண்பனை எதிரியாக மாற்றவும் முடிந்த வாய் திறமை, எந்த நிலைப்பாடு எடுத்த போதிலும் சமரசத்திற்கு இடமளிக்காத தன் கருத்தின் மீதான அதீத நம்பிக்கை, எதிர்கால வாழ்க்கைக்கான பாதையைச் சரியாக தீர்மானித்தல், பின்வாங்காமை, பிடிவாதம், எடுத்த தீர்மானத்தில் உறுதி, ஒவ்வொரு சிறு விஷயத்துக்கும் கடைபிடிக்கும் நேர்த்தி, தனிமனித ஒழுக்கம் என அவரின் ஒவ்வொரு அங்குலத்திலும் அதிகப்பட்ச பலம், கொஞ்சூண்டு பலவீனம்… அந்தப் பலம் பெரிய அளவில் இஸ்லாமியர்களுக்கு பயன் தராதது சோகத்தின் உச்சம்..! இஸ்லாத்தில் செலுத்தாதது உச்சகட்ட துரதிஷ்டம்!
ஜின்னாவின் அரசியல் வாழ்க்கையினுள் செல்லும் முன்னர் அவருடைய குடும்பம், பிறப்பு, வளர்ப்பு குறித்து சுருக்கமாக பார்த்துவிடுவோம். அது, அவருடைய அரசியல் செயல்பாடுகளுக்குப் பின்னணியிலுள்ள உளவியலை நாம் புரிந்துகொள்ள உதவும்.
ஜின்னாவின் தாய் பெயர் மித்திபாய். தந்தை பெயர் ஜின்னாபாய் பூன்ஜா. இவரின் தாய் மஹிமா யாரா ஜின்னா(Mahima Yara Jinnah), தந்தை பூன்ஜா கோகுல்தாஸ் மெஹ்ஜீ (Poonja Gokuldas Meghji). இவர் இந்து மதத்தில் லோஹானா என்ற வகுப்பைச் சார்ந்தவர். பீர் சத்ருதின் என்பவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய அழைப்பாளர். கோஜா இஸ்மாயிலீ என்ற பிரிவை உருவாக்கியவர். இது, முஸ்லிம்களிலுள்ள அரசியல் பிரிவான ஷியா குழுவின் ஒரு பகுதி. லோஹானா என்ற ஜின்னாவின் தந்தை சார்ந்து வாழ்ந்திருந்த இந்து பிரிவினர் கோஜா பிரிவைத் தழுவினர். இப்படித்தான் ஜின்னாவின் குடும்பம் முஸ்லிம் ஆனது. அதாவது, நம்முடைய தந்தை, அவரின் தந்தை, அவருக்குத் தந்தை என பல தலைமுறைகளுக்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்றதுபோல் அல்லாமல் மிக நெருக்கமான தலைமுறையிலேயே இஸ்லாத்திற்கு, அதுவும் ஷியா பிரிவுக்கு மாறியிருந்தது ஜின்னாவின் குடும்பம்! பூர்வீகம், குஜராத்-கத்தியவார்-பனேலி கிராமம். (அன்றைய குஜராத் – பாம்பே பிரசிடன்சி என்றழைக்கப்பட்டது)
முஹம்மத் அலி ஜின்னாவின் தந்தை முஸ்லிமாக மாறியதற்கு வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன. கோகுல்தாஸ் மீன் வர்த்தகம் செய்தார் என்றும் லோஹானா பிரிவு சுத்த சைவம் என்பதால் அவர் மீன் வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டது எனவும் அப்போது நடந்த சண்டையின் போது ஊர் விலக்கம் செய்யப்பட்டார் என்றும் அதன் பின்னரே இஸ்லாத்திற்கு மாறினார் என்றும் சொல்லப்படுகிறது. மற்றொன்று, ஜின்னாவின் தாத்தா-பாட்டிக்குப் பிறந்த குழந்தைகள் எல்லாம் வரிசையாக இறந்துவிட…. பாட்டி மஹீமாவிடம் ஆஷூரா நாளில் ஷியா இமாம்பாரா என்ற தலத்திற்குச் சென்று வேண்டிக்கொள்ள வேலைக்காரர் ஆலோசனை கூறியதற்கிணங்க தம்பதிகளும் அவ்வாறே செய்ய, அதன்பின் பிறந்த குழந்தைக்கு ஹுசைன் (ரலி)யின் குதிரைப்பெயரான ஜுல்ஜின்னா(ஜுல்ஜெனா) என்பதிலிருந்து ஜின்னா என்பதை மட்டும் வெட்டி எடுத்து வைத்துக்கொண்டனர் என்றும் இதற்கு நன்றிக்கடனாகவே அவர்கள் இஸ்லாத்திற்கு மாறினர் என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ…. இந்துவாக இருந்த ஜின்னாவின் தந்தை குடும்பத்தினர் முஸ்லிமாக மாறினர்!
ஜின்னாவின் தாய் மித்திபாய்க்கும் தந்தை ஜின்னாபாய் பூன்ஜாவிற்கும் பூர்வீக ஊரிலேயே திருமணம் நடந்தது. ஜின்னாபாய் பூன்ஜா வெற்றிகரமான வியாபாரி. வியாபாரத்திற்காகவே ஆங்கில மொழியை கற்றுகொண்டதால் ஆங்கிலேய வியாபாரிகளிடத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆங்கிலேய வணிகருடன் தொழில் ஒப்பந்தம் வைத்து, ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தார். அதன் தொடர்ச்சியாக கராச்சியில் ’க்ராம் ட்ரேடிங் கம்பெனி’ என்ற பெயரில் நிறுவனம் தொடங்கினார். இதனால், திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதிகள் குஜராத்திலிருந்து கராச்சிக்கு இடம்பெயர்ந்தனர்.
வாசீர்மேன்சன் என்ற மூன்று அடுக்கு வீட்டின் இரண்டாவது அடுக்கில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து 1874 ஆம் ஆண்டு ஜின்னாபாய் பூன்ஜா தம்பதியினர் குடிபுகுந்தனர். டிசம்பர் 25, 1876 ல் சராசரி குழந்தைகளைவிட குறைவான எடையில் ஆண்குழந்தை அவர்களுக்குப் பிறக்கிறது. கவலை கொள்ளாத மித்திபாய், அம்மகவுக்கு முஹம்மத் அலி ஜின்னாபாய் என்று பெயரிட்டு கண்ணும் கருத்துமாக வளர்த்தாளாக்கினார்.
குடும்பத்தில் ஜின்னா தான் மூத்த பிள்ளை. அவருக்குப் பின்னர் 6 பேர். 2 தம்பிகள், 4 தங்கைகள். அஹ்மத் அலி, பாண்டே அலி, ரஹ்மத் பாய், பாத்திமா, ஷிரீன்பாய், மர்யம் பாய் ஆகிய அறுவரில், பாத்திமா என்பவர் ஜின்னாவைப் போன்று பிரபலமானவர். ஜின்னா வாழ்க்கை நெடுகிலும் துணையாக வந்தவர். அவரைப் பற்றி தனியாக பார்ப்போம்.
அக்காலகட்டத்தில் குழந்தை பிறந்ததும் நகராட்சியில் பதிந்து பிறப்பு சான்றிதழ் வாங்கும் வழக்கம் இருக்கவில்லை! 20.10.1875 பிறந்த தேதியாக ஆரம்பப் பள்ளி பதிவேடு குறித்துகொண்ட தேதியை மாற்றியதோடு, அவர் பெயரோடு ஒட்டியிருந்த “பாய்” என்ற குடும்பப் பெயரும் நீக்கப்பட்டது. இதெல்லாம் நடந்தது ஒரு கிறிஸ்தவ பள்ளியில்… ஆனாலும் வரலாறு தோண்டி துருவி விஷயத்தைக் கக்கிவிட்டது!
1900 ஆம் ஆண்டு வாக்கில் தொழில் நலிவுற்றதால் கராச்சியைவிட்டு சொந்த ஊருக்கே தந்தை ஜின்னாபாய் பூன்ஜா கிளம்பிவிட்டார். ஜின்னா பிறந்த இடமான வாசீர்மேன்சன் அரசு சொத்தாக்கப்பட்டு நினைவு சின்னமாக மீண்டும் புதுபிக்கப்பட்டுள்ளது. தற்போது மியூசியமாகவும் தேசியகாப்பகமாகவும் ஜின்னாவின் நினைவைச் சுமந்து நிற்கிறது, அவரைப் போலவே மிக மிக கம்பீரமாக!
தொடரும்..
– ஆமினா முஹம்மது.