ஈராக் – அமெரிக்க படையினரின் அட்டூழியம்

அமெரிக்கப்படையினர் ஈராக்கில் ஒரு சிறுமியைக் கற்பழித்து அவள் குடும்பத்தினரைக் கொலை செய்த வழக்கில் கண்ணால் கண்ட 3 சாட்சியங்கள் {mosimage}நேற்று முன் தினம் (06-08-2006) நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலங்களின் மூலம் கொதிப்படைந்த ஈராக்கிய மக்கள் ஏற்படுத்திய நெருக்கடி பிரதமர் நூரி அல் மாலிக்கிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மார்ச் 2006-ல் பாக்தாக்திற்கு அருகில் உள்ள மஹ்மூதியா நகரத்தில் உள்ள சம்பவம் நடந்த வீட்டில், 14 வயது நிரம்பிய சிறுமியான அபீர் காஸிம் ஹம்ஜா அல் ஜனபியை ஆடையின்றி இடுப்பின் மேற்பகுதி முழுவதும் எரிந்து, இடக்கண்ணில் குறிவைத்து சுடப்பட்ட நிலையில் கண்டதாக நேரில் கண்டவர் சாட்சியம் கூறியுள்ளார். இச்சிறுமி மூன்று அமெரிக்கப் படை வீரர்களால் கற்பழிக்கப்பட்டு பின்பு கொலை செய்யப்பட்டார் என்று "த நியூயார்க் டைம்ஸ்" அளித்த செய்தியில் பதிவாகியுள்ளது.

மேலும் ஆறே வயது நிரம்பிய ஹம்ஜாவின் தங்கை பின்னந்தலையில் சுடப்பட்டு ஓர் அறையில் கிடந்ததை பார்த்ததாகவும், பெற்றோர் இருவரும் உடல் சல்லடையாக்கப்பட்டு இறந்து கிடந்ததையும் கண்டதாக சாட்சியம் கூறியவர் தெரிவித்தார்.

மஹ்மூதியா வழக்கு என்று பெயரிடப்பட்டுள்ள இது போன்ற கொடூர சம்பவங்கள் பல ஆங்காங்கே ஈராக் மண்ணில் அமெரிக்கப் படையினரால் தினசரி நடத்தப்படும் அட்டூழியங்கள்தான் என்றாலும் அவற்றில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இது ஐந்தாவது வழக்காகும்.  

நேரில் பார்த்த சாட்சிகளில் ஒருவர், அமெரிக்கப்படையினர் தங்களால் அச்சிறுமி கற்பழித்துக் கொல்லப்பட்ட விஷயம் ஊடகங்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்காக, தற்செயலாக தீப்பிடித்தது போன்று காண்பிக்க முழு வீட்டிற்கும் தீவைத்ததாக கூறினார். மேலும் இவர் இப்பயங்கரத்தை நேரில் கண்டதன் தாக்கத்தில், மூன்று வாரங்கள் உடலும் மனதும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.  

இவ்வழக்கில் குற்றம் சாற்றப்பட்டுள்ள அமெரிக்கப்படையினரில், ஹம்ஜாவின் தந்தையை குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்த ஸ்டீவன் கிரீன் மற்றும் சர்ஜண்ட் ஆண்டனி ஆகியோரை படைப்பிரிவில் இருந்து அமெரிக்கா நீக்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரப்பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.  

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான அமெரிக்கப்படை வீரர்கள் ஜெஸி ஸ்பில்மேன், ஜேம்ஸ் பார்க்கர், சர்ஜண்ட் பால், ப்ரேயான் ஹொவார்ட் ஆகியோரின் குற்றம் நிரூபணமானால் அவர்களுக்கு ஈராக் மண்ணில் மரண தண்டனை கிடைப்பது உறுதி என்று சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.