”தந்திரம்” ஒர் விளக்கம்

அனைத்து புகழும் அல்லாஹ்விற்கே. அல்லாஹு தஆலா தனது படைப்புகளில் கண்ணியமிக்க படைப்பாக மனித இனமாகிய நம்மை படைத்து நமக்கு வழிகாட்டியாக நபிமார்களில் கடைசி நபியாகிய முஹம்மத் (ஸல்) அவர்களை அனுப்பிவைத்தான். நபி (ஸல்) அவர்கள் தனது உம்மத்தினராகிய நமக்கு உலக வாழ்க்கையை முழுமையாக கற்றுத்தந்தார்கள். அப்படி கற்றுத்தந்த விஷயங்களில் ஒன்று தந்திரம் செய்வது பற்றியாகும்.

“தந்திரங்கள்” என்பது அரபி மூலத்தில் “அல்ஹியல்” என்று சொல்லப்படும். ஒரு காரியத்தைச் சாதிக்கக் கையாளும் சாமர்த்தியமான வழிமுறைக்கே “தந்திரம்” என்பர். தடை செய்யப்பட்ட ஒன்றிலிருந்து தப்பிப்பதற்காகவும், பாவத்திலிருந்து தவிர்ந்து கொள்வதற்காகவும் தந்திரத்தைக் கையாள்வது மார்க்கத்தில் வரவேற்கப்படுகிறது. அதே சமயம், ஒருவரின் உரிமையைப் பறிப்பதற்காக தந்திரம் செய்வது சட்டமீறலும் பாவமுமாகும்.

தந்திரங்களை அறிஞர்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கின்றார்கள்,

1. உண்மையை மறுப்பதற்கோ, பொய்மையை நிலைநாட்டுவதற்கோ தந்திரம்  செய்வது. இது தடை செய்யப்பட்டதாகும்.

2. உண்மையை நிலைநாட்டுவதற்கோ, பொய்மையை அழிப்பதற்கோ தந்திரம் செய்வது. இது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

3. வெறுக்கப்பட்ட செயலில் இருந்து தப்பிப்பதற்காக தந்திரம் செய்வது. இதுவும் அனுமதிக்கப்பட்டதாகும்.

4. விரும்பத் தகுந்த செயலைக் கைவிடுவதற்காக தந்திரம் செய்வது. இது வெறுக்கப்பட்டதாகும்.

இவை அனைத்திலும் தந்திரத்திற்காக மேற்கொண்ட வழிமுறை அனுமதிக்கப்பட்டதாக இருக்கவேண்டும். இல்லையேல் இவற்றில் எந்த வகையும் கூடாது. (ஃபத்ஹுல் பாரி)

எடுத்துக்காட்டாக, இறைத்தூதர் அய்யூப் (அலை) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம். அன்னார் நோயுற்றிருந்தபோது, தம் துணைவியார் மீது ஏற்பட்ட ஒரு கோபத்தால் ”நான் குணமடைந்த பிறகு உன்னை நூறு கசையடி அடிப்பேன்” என்று சத்தியம் செய்துவிட்டார்கள். நோய் குணமான பின், இவ்வளவு காலம் தம் மீது பிரிவு காட்டி பணிவிடை புரிந்த துணைவியாரை அடிக்க அவர்களுக்கு மனம் ஒப்பவில்லை. அதே நேரத்தில் சத்தியத்தை நிறைவேற்றாமல் இருக்கவும் முடியாது. இப்பிரச்சினைக்கு அல்லாஹ் ஒரு தீர்வை அறிவித்தான். ”ஒரு கைப்பிடி புற்களைக் கொண்ட ஒரு கற்றை எடுத்து அதைக்கொண்டு உம் துணைவியாரை அடிப்பீராக!” என அல்லாஹ் கட்டளையிட்டான். இதன் மூலம் துணைவியாரை கசையடியிலிருந்து காப்பது மட்டுமின்றி, சத்தியத்தை மீறிய குற்றத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இதை அல்குர்ஆனின் 38:44ஆவது வசனம் எடுத்துரைக்கிறது. (தஃப்ஸீர் இப்னு கஸீர்)

நல்ல நோக்கத்திற்காக சில வேளைகளில் தந்திரங்களை கையாள்வது அனுமதிக்கப் பட்டதாக இருப்பினும், பொதுவாகத் தந்திரங்களைக் கைவிட்டு நேர்வழியைக் கையாள்வதே சிறந்ததாகும். பின் வரும் ஹதீஸில், உம்மு கைஸ் எனும் பெண்மணியை மணமுடிப்பதற்காக ஹிஜ்ரத் செய்த ஒருவரைப் பற்றிக் கூறும்போது,

”அதுதான் அவருக்கு கிடைக்கும், ஹிஜ்ரத்தில் நன்மை கிடைக்காது” என நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் (நூல்: புகாரி, உம்ததுல் காரீ, ஃபத்ஹுல் பாரி).

இது ஒரு தந்திரம். தந்திரம் செய்பவரின் எண்ணத்திற்கேற்பவே அவரது செயலுக்குப் பலனும் கிடைக்கும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹ்வின் ஆணைப்படி) கடமையாக்கிய ஜகாத்தைப் பற்றி எனக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் (கடிதம்) எழுதியபோது,

“ஜகாத் கொடுப்பதற்கு அஞ்சி, பிரிந்தவற்றை ஒன்று சேர்ப்பதும் ஒன்று சேர்ந்தவற்றைப் பிரிப்பதும் கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார்கள் (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் நூல்: புகாரி).

ஒருவர் தம் மீது கடமையாகியுள்ள ஜகாத்தை வழங்காமல் இருப்பதற்காக கணக்கு வழக்கில் தந்திரம் செய்வது கூடாது. இருவருக்கு கூட்டாக உள்ள பொருளை மொத்தமாகக் கணக்கிட்டால் ஸகாத் கடமையாகிவிடும் என அஞ்சி, தனித்தனியாக பிரித்துக் காட்டுவதும், தனித்தனியாக கணக்கிட்டால் கூடுதல் ஜகாத் வழங்க வேண்டி வந்துவிடும் என்பதற்காக மொத்தமாக கணக்குக் காட்டுவதும் இவ்வகை தந்திரத்தில் சேரும்.

உதாரணமாக, 40 முதல் 120 ஆடுகள் வரை இருந்தால் ஒரு ஆடு ஜகாத்தாக வழங்கப்படவேண்டும் என்பது சட்டம்; இந்நிலையில், இருவருக்கு தலா 40 ஆடுகள் வீதம் 80 இருந்தன. முறைப்படி அவ்விருவரில் ஒவ்வொருவரும் தலா ஓரு ஆடு ஜகாத்தாக வழங்க வேண்டும். இந்த அளவை குறைப்பதற்காகத் தனித்தனியாக இருந்த பங்குகளை மொத்தமாக கணக்குக்காட்டி 80 ஆடுகளுக்கு ஓர் ஆட்டை மட்டும் அவர்கள் ஜகாத்தாக வழங்க தந்திரம் செய்தனர். இதைப்போன்றே, இருவருக்கு கூட்டாக 40 ஆடுகள் இருந்தன. இப்போது ஓர் ஆடு ஜகாத்தாக வழங்கப்பட வேண்டும். ஆதலால், ஜகாத் கொடுக்காமல் தப்பிப்பதற்காக தலா 20 ஆடுகள் என்று தனித்தனியாக கணக்குக் காட்டி தந்திரம் செய்தனர். 40 ஆடுகளுக்கு குறைவாக இருந்தால் ஜகாத் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஜகாத்தில் தந்திரம் செய்வது கூடாது. (இர்ஷாதுஸ் ஸாரி)

அவ்வாறே திருமண விஷயத்தில் அல்லாஹ் கடமையாக்கிய மஹர் வழங்காமல் இருப்பதற்காக தந்திரத்தை மேற்கொள்வதும் தவறானதாகும்.

நாஃபிவு (ரஹ்) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஷிகார்’ திருமணத்தை தடை செய்தார்கள்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று என்னிடம் தெரிவித்தார்கள்.

உடனே நான் நாஃபிவு அவர்களிடம், ஷிகார் திருமணம் என்றால் என்ன? என்று கேட்டேன். அவர்கள் ஒருவர் மணக்கொடை (மஹர்) ஏதுமில்லாமல் இன்னொருவரின் மகளை மணந்துகொண்டு (அதற்கு பதிலாக) அவருக்கு தனது மகளை மணமுடித்து வைப்பதாகும். அவ்வாறே மணக்கொடை ஏதுமில்லாமல் ஒருவர் மற்றொருவரின் சகோதரியை மணந்து கொண்டு (அதற்கு பதிலாக) அவருக்கு தன் சகோதரியை மணமுடித்து வைப்பதாகும் என்று பதிலளித்தார்கள் (அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் அல்அம்ரீ (ரஹ்) நூல்: புகாரி).

ஒரு கொடுங்கோல் மன்னனின் பிடியிலிருந்து தனது மனைவியை காப்பாற்றுவதற்காக இப்றாஹீம் (அலை) அவாகள் தனது மனைவியை தன் சகோதரி என கூறினார்கள்.  இது போன்ற சந்தர்ப்பத்தில் தந்திரத்தை கையாள்வது தவறில்லை என்பதை இப்றாஹீம்(அலை) அவர்கள் அவ்வாறு கூறியதை இறைவன் கண்டிக்காமல் அக்கொடுங்கோல் மன்னன் அவர் மனைவியை நெருங்கிய பொழுது இறைவன் உதவியால் அவன் கைகள் செயல்பட முடியாமல் போனதும் அவர் மனைவியின் துவாவினால் அது சரியானதிலிருந்தும் விளங்கிக்கொள்ள முடிகிறது. எனவே ஒருவரை ஒரு இக்கட்டிலிருந்து பாதுகாப்பதற்காக தந்திரம் கையாள்வதில் தவறில்லை என்பதையும் இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் பள்ளிவாசலில் இருந்தபோது ஒருவர் வந்தார். அவர் “யாரஸூலுல்லாஹ் என்னை கடுமையான பசி வாட்டுகிறது!” என்றார். உடனே நபி (ஸல்) அவாகள் தனது மனைவியர்களிடம் ஒரு ஸஹாபியை அனுப்பி, பசித்த மனிதருக்காக உணவு கேட்டு வாங்கி வரும்படி அனுப்பினார்கள். பின்னர், தனது மனைவிமார்களிடத்தில் எந்த உணவும் கிடைக்கவில்லை என்று அறிந்த நபி (ஸல்) ஸஹாபாக்களை பார்த்து, “இன்றிரவு ஒரு மனிதர் விருந்தாளியாக வந்திருக்கிறார், அவருக்கு விருந்து கொடுக்க யாராகிலும் இருக்கின்றீர்களா? அல்லாஹ் ரஹ்மத் செய்வான்!” என்று சொன்னார்கள்.

உடனே ஒரு அன்ஸாரி தோழர் எழுந்து, “நான் அழைத்துச் செல்கிறேன் யா ரஸூலுல்லாஹ்!” என்று சொன்னார். பின்பு பசித்தவரை அழைத்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்குச் சென்றார்கள். தன்னுடைய மனைவி இடத்தில் “இவர் ரஸூலுல்லாஹ்வின் விருந்தாளியாவார். உணவு எது இருந்தாலும் மறைத்து வைக்காமல் கொண்டுவா!” என்றார்கள். அந்த அன்ஸாரியின் மனைவி “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, குழந்தைகளுக்குரிய உணவைத் தவிர வீட்டில் வேறு ஏதும் இல்லை” என்றார்கள். நிலைமையை உணர்ந்த அன்ஸாரித் தோழர் தனது மனைவியிடத்தில் “குழந்தைகளை உறங்க வைத்துவிடு. பிறகு விளக்கை அணைத்துவிடு. நாம் அனைவரும் இன்றிரவு பட்டினியாக இருந்துவிடுவோம்!” என்றார்கள். அவ்வாறே விருந்தாளியை கவனித்து அனுப்பிவைத்தார்கள். மறு நாள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் வந்த போது நபி (ஸல்) அவர்கள், இன்னார் விடயத்தில் அல்லாஹ் ”தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர்.” என்ற வசனத்தை (59:9) வஹி இறக்கினான் என்று சொன்னார்கள் (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி)

இதிலிருந்து பொதுவாக நல்ல காரியங்கள் செய்வதற்கும், மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கும் மார்க்க வரம்பை மீறாத வகையில் தந்திரங்களை கையாள்வதில் தவறில்லை என்பது மட்டுமல்ல அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட செயல் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே மார்க்கம் அனுமதித்த வழிகளில் நல்ல காரியங்களுக்கு மட்டும் தந்திரங்களை சரியான முறையில் கையாளும் நல்லோர்களாக நம் அனைவரையும் வல்ல நாயன் ஆக்கியருள்வானாக. ஆமீன்.

தொகுப்பு: சதக்கத்துல்லாஹ் ரஹ்மானி, தோஹா-கத்தர்