வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் US நிறுவனமான எக்சான் மொபில் தனது வெனிசூலா நாட்டிலிருக்கும் சொத்துகளை முடக்கினால், US-க்கான கச்சா எண்ணெய் வழங்கலை நிறுத்தப் போவதாகப் புதிய மிரட்டலை விடுத்துள்ளார்.
"எமக்கு எவரும் தீங்கு செய்ய எண்ணினால், அவர்களுக்கு நாங்களும் தீங்கு விளைவிப்போம்" என்று அவர் அறிவித்தார்.
"இதனைக் குறிப்பெடுத்துக் கொள்ளவும், அபாயத்தின் மறுபெயரான புஷ்ஷே!" என்று அவர் அப்போது கூறினார்.
வெனிசூலாவில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களை அதிபர் சாவேஸ் தேசியமயமாக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளார். இதனால் வெனிசூலா நாட்டில் இருக்கும் தனது சொத்துகளை முடக்கும் முயற்சியில் US நிறுவனமான எக்சான் மொபில் தொடங்கியுள்ளது. இதனையடுத்தே சாவேஸ் இப்புதிய மிரட்டலை விடுத்தார்.
வெனிசூலா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் (OPEC) அங்கம் வகிக்கிறது. இதன் எண்ணெய் ஏற்றுமதியில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமாக US பெறுகிறது. அதேபோல US தனது எண்ணெய்த் தேவைக்காகப் பெருமளவில் வெனிசூலாவையே சார்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.