கைவிட்டுப்போன பள்ளியை மீட்ட கானூத்!

{mosimage}2007ஆம் ஆண்டின் ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த உதைபந்தாட்ட வீரரான ஃப்ரெடிரிக் உமர் கானூத், தான் பணியாற்றிவரும் ஸ்பெயின் நாட்டில் செவீல் நகரில் முஸ்லிம்கள் கையை விட்டுப்போன மஸ்ஜிதைத் தன் சொந்தப் பணத்தைக் கொடுத்து மீட்டார்.

கானூத், செவீல் நகரின் செவீல் உதைபந்தாட்ட மன்றத்திற்காக விளையாடி வருகிறார். அந்நகரில் முஸ்லிம்கள் ஒரு தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பள்ளி அமைத்துத் தொழுகை நடத்தி வந்தனர். இப்பள்ளிக்கான வாடகை ஒப்பந்தம் முடிவுற்ற நிலையில் தனியார் அப்பள்ளி இருந்த இடத்தை மீட்க முனைந்தனர். இதனால் அங்குத் தொழுகை நடத்திவந்த முஸ்லிம்கள் செய்வதறியாது திகைத்த போது, கானூத் அப்பள்ளியை ஏழு இலட்சம் அமெரிக்க டாலர் செலுத்தித் தம் பெயருக்கு வாங்கினார். தான் வாங்கிய பள்ளியை உள்ளூர் முஸ்லிம்கள் தொழுகை நடத்த ஏற்பாடு செய்தார்.

 

இது குறித்து அவர் எதுவும் கருத்து வெளியிடாத போதும், செவீல் நகராட்சி மன்றம் அப்பள்ளி அவர் பெயருக்குப் பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.

 

ஏழு இலட்சம் டாலர்கள் கானூத்தின் ஓராண்டு ஊதியத்தை விட அதிகமான தொகையாகும். கானூத் ரமளான் மாதத்தின் போது நோன்பு நோற்றவாறே விளையாடிய போதும் தனது அபாரமான ஆட்டத்திறமையால் ரசிகர்களை அசத்தினார்.