நமக்குச் சொந்தமான நம் வீட்டு முற்றத்தில் மாற்றான் ஒருவன் காயலான் கடை வைத்து வியாபாரம் செய்தால் நாம் என்ன செய்வோம்? அதே வேலையை அரசுக்குச் சொந்தமான இடத்தில் ஒருவன் செய்தால் அரசு என்ன செய்யும்? செய்ய வேண்டும்?
அனைவரும் ஒருமித்தக் குரலில் ஏற்றுக் கொள்வது, அரசு இடத்தைக் கள்ளத்தனமாக ஆக்ரமித்தவனை சட்டத்தின் முன் நிறுத்தி சட்டப்படியான தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டும்; ஆக்கிரமிப்பை முறையாக அகற்ற வேண்டும் என்பதாகத் தான் இருக்கும்.
அதுவே அரசு இடத்தில் கள்ளத்தனமாகப் பள்ளிவாசல், சர்ச், கோயில் இன்னபிற வழிபாட்டுத் தலங்களை யாராவது எழுப்பி விட்டால் என்ன செய்வது? சாதாரணமாக அரசு செய்யும் காரியம், சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலத்துக்கு யாராவது பொறுப்பாளர் இருப்பின் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி விட்டு சம்பந்தப்பட்ட இடத்திலிருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றி அவ்விடத்தை மீட்பதாகும்.
அவ்வாறு ஒரு நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு என்னுமிடத்தில் நடந்தது. அத்துடன் சம்பந்தப்பட்ட இடத்தை நீதிமன்ற ஆணையுடன் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அரசு அதிகாரிகளையும் உலகிலிருந்தே “அகற்றும்” பணி சுற்றிக் கூடியிருந்த மக்கள் முன்னிலையில் பட்டப்பகலிலேயே நடைபெற்றது.
சம்பவம் என்னவெனப் பார்ப்போம்:
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகேயுள்ள உடையார்விளையில் சாலையோரம் நாராயணசாமி கோயில் என்றொரு கோயில் அரசு நிலத்தில் உள்ளது. இந்த கோயில் அரசின் புறம்போக்கு நிலத்தில் அமைந்திருப்பதாகவும் அதனால், கோயிலுக்குப் பின்புறம் உள்ள வீட்டுக்கு செல்ல கோயிலை இடித்து பாதை வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள், “அரசு நிலத்தில் உள்ள கோயிலின் சுவரை இடித்துப் பாதை அமைத்துக் கொடுக்க” உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழக நெடுஞ்சாலைத்துறை தக்கலை உதவிக் கோட்ட அலுவலர் எல்.அந்தோணி சேவியர், இளநிலை அலுவலர் சி.சுந்தரம் மற்றும் அதிகாரிகள் காவல்துறைப் பாதுகாப்புடன் கோயில் சுவரை இடித்துக் கொண்டிருந்தனர்.
இதற்குக் கோயில் தர்மகர்த்தா அர்ஜுனன், அவருடைய மனைவி அனிஷ்பாய், மகன் செந்தில்குமார் மற்றும் அவர்களின் வழக்கறிஞர் அவ்விடத்தில் நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் தங்களுக்கு உயர்நீதிமன்றம் கட்டளையிட்ட பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். உதவிக் கோட்டப் பொறியாளர் அந்தோணி சேவியர், இளநிலை பொறியாளர் சுந்தரம் மற்றும் திருவட்டாறு காவல் சரகத்தைச் சேர்ந்த தலைமைக்காவலர் எட்வின் ஆகிய 3 பேரும் சாலையோரம் நின்று, இடிப்புப் பணியைக் கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது ஒரு கார் கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக வந்து அவர்கள் 3 பேரையும் இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பொறியாளர் அந்தோணி சேவியர் படுகாயம் அடைந்துச் சிகிச்சைக்காக நாகர்கோயிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அதிகாரிகளைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே அவர்கள் மீது காரை மோதவிட்டதாகவும், அந்தக் காரை ஓட்டியவர் கோயில் தர்மகர்த்தா அர்ஜுனனின் மகன் செந்தில்குமார் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக திருவட்டாறு காவல்துறையினர் அர்ஜுனன், அவருடைய மனைவி அனிஷ்பாய், மகன் செந்தில்குமார், அவரது வழக்கறிஞர் ரசல்ராஜ் உள்பட 6 பேர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் அர்ஜுனனும், அவருடைய மனைவியும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வு நடைபெற்ற இடத்தில் ஆக்ரமிப்பை அகற்றிக் கொண்டிருந்த அதிகாரிகள் அரசு ஆவணத்திற்காக ஆக்ரமிப்பு அகற்றும் பணியினை வீடியோவில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த வீடியோ பதிவில் அதிகாரிகள் மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்றக் காட்சியும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இதற்கிடையே சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் வழக்கறிஞர் ரசல்ராஜை காவல்துறையினர் தாக்கியதாக வழக்கறிஞர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் வெற்றிவேல் கூறும் பொழுது:
“திருவட்டாறு அருகே வேர்கிளம்பியிலுள்ள உடையார்விளை கோயில் பிரச்சினையில் எதிர் மனுதாரரின் வழக்கறிஞர் என்ற முறையில் வழக்கறிஞர் ரசல்ராஜ் அங்குச் சென்று, எந்த அடிப்படையில் கோயில் சுவரை இடிக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் காவல்துறையினர் அவரை அடித்து இருக்கிறார்கள். சாதாரண மனிதனைக்கூட காவல்துறையினர் அடிக்கக்கூடாது. அப்படி இருக்க வழக்கறிஞரைத் தாக்கியிருக்கும் இந்தச் சம்பவம் ஜனநாயகத்துக்கு விரோதமானது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது கார் மோதிய வீடியோ காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் தயாரிக்கப்பட்டது. நடந்த சம்பவத்தின் உண்மை வீடியோ காட்சியை நாங்கள் நீதிமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறோம்.
வழக்கறிஞர் ரசல்ராஜை தாக்கிய காவல்துறை அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதற்கு முன்னதாக நாளை மறுநாள் (அதாவது நாளை) குமரி மாவட்ட வக்கீல் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். போராட்டத்தை மிகப்பெரிய போராட்டமாக, மறியல் போராட்டமாக நடத்துவது பற்றி ஆலோசிப்போம்.” என்று கூறியுள்ளார்.
ஆக்ரமிப்பை அகற்றுவது அதுவும் கள்ளத்தனமாகப் பொதுச் சொத்தில் பொது மக்களுக்கு இடையூறாக ஆக்ரமிப்புச் செய்திருந்ததை நீதிமன்ற உத்தரவுடன் அகற்றுவது தவறா? தவறு தான் – அது கோயில் விஷயம் என வரும் பொழுது மட்டும். அது தனி மனிதனின் சொத்தாக இருந்தாலும் சரி; அரசு சொத்தாக இருந்தாலும் சரி.
அது தமிழ்நாட்டில் நடந்தாலும் சரி; மலேசியாவில் நடந்தாலும் சரி.
இதில் மலேசியா எங்கிருந்து வந்தது என நினைப்பவர்கள் மட்டும், கடந்த மாதங்களில் பரபரப்பாக இருந்த “மலேசியா ஆக்ரமிப்புக் கோயில் அகற்றல்” சம்பவமும் அதனை வைத்து மத ஆதாயம் தேட முயன்ற மலேசியாவின் RSS கிளையான “ஹிண்ட்ராஃபின்” செயல்பாடுகளும் சமூக ஒருங்கிணைப்பைக் குலைக்க முயற்சித்த ஹிண்ட்ராஃபை சுருட்டிக் கட்டி வைக்க முயன்ற மலேசியாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக திருவாய் மலர்ந்த அமெரிக்கா மற்றும் தமிழக முதல்வரின் அறிக்கைகளையும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
இதில் பரிதாபத்திற்கு உரியவர் பாவம் தமிழக முதல்வர் தான். முன்பு இதே விவகாரத்தில் மலேசியாவிற்கு எதிராக அறிக்கை விட்டது போன்று இப்பொழுது தனது அரசுக்கே எதிராக அறிக்கை விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மலேசிய அரசுக்கு எதிராக அறிக்கை விட்டது போன்று, அராஜகங்கள் நடக்கும் இடங்களில் அண்ணனாக வரும் அமெரிக்காவின் கண்டன அறிக்கையை, கோயிலை இடித்து அதனைத் தடுக்க முயன்ற அப்பாவிகளின் மீது காவல்துறையை ஏவி அராஜகம் புரிந்துள்ளத் தமிழக அரசுக்கு எதிராகவும் விரைவில் எதிர்பாப்போம்.
தங்களின் பணியினைச் செய்யச் சென்ற அரசு அதிகாரிகளின் மீது கார் ஏற்றும் கண்கொள்ளாக் காட்சியினை இங்கே கண்டு களியுங்கள்.
காசுக்காக நீதியையும் உண்மையையும் குழி தோண்டிப் புதைப்பதற்கு எவ்விதத் தயக்கமும் காட்டாத, தான் எடுத்த வழக்கில் தான் வெற்றி பெற எதை வேண்டுமென்றாலும் செய்யத் தயங்காத வழக்கறிஞர்களுக்கும் கொலைகார வெறியர்களே நேரடியாக ஒத்துக் கொள்ளும் காட்சிகளை எவ்வித வெட்கமும் இன்றி அவை புனையப்பட்டப் பொய்காட்சிகள் என மக்கள் முன் எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி மறுக்கும் பொய்யால் வார்த்தெடுக்கப்பட்டக் கொலைகாரக் கூட்டம் சங்பரிவாரத்துக்கும் வேண்டுமெனில் இது கிராபிக்ஸாக இருக்கலாம்.
ஆனால் உண்மையை ஏற்றுக் கொள்ளத் தயங்காத நடுநிலை மக்களுக்கு இந்த வீடியோ காட்சி உண்மையைத் தெளிவாக எடுத்துச் சொல்லவே செய்யும்.