செங்கடலில் தவிக்கும் பாலஸ்தீன ஹாஜிகள்!

{mosimage}காஸா பகுதியைச் சேர்ந்த பாலஸ்தீன மக்கள்  தம் ஹஜ் பயணத்தை நிறைவேற்ற வசதியாக சில வாரங்களுக்கு முன் எகிப்து தனது ரஃபா எல்லையைத் திறந்து விட்டிருந்தது. எகிப்தின் இச்செயலுக்கு இஸ்ரேல் தனது கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

இப்போது ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பும் வழியில் கப்பல் மூலம் நுவைபா திரும்பிய பாலஸ்தீன ஹாஜிகளை எகிப்திய அரசு எகிப்தினுள் நுழைய அனுமதி மறுத்துள்ளதால்,  அவர்கள் செங்கடலில் இரு கப்பல்களில் நுவைபா துறைமுக எல்லையில் கடந்த இரு நாட்களாகத் தத்தளித்துக் கொண்டுள்ளார்கள்.

 

இவ்விரு கலங்களிலும் உணவுக்கையிருப்பும் சுகாதார நிலையும் மோசமடைந்து வருவதாகவும் அவர்களை நாடு திரும்ப அனுமதிக்குமாறும் காஸா பகுதியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் எகிப்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

"அமெரிக்க, இஸ்ரேலிய அரசுகளின் அழுத்தத்தினாலேயே எகிப்து இவாறு நடந்து கொள்கிறது எனத் தெரியும். இருப்பினும் இவற்றுக்குப் பணிந்துவிடாமல் ஹாஜிகளை ரஃபா எல்லை மூலம் நாடு திரும்ப அனுமதிக்க எகிப்து அரசினை வேண்டுகோள் விடுக்கிறோம்" என ஹமாஸ் கூறியுள்ளது.

 

இஸ்ரேலிய அமைச்சர் யஹூத் பராக்கின் எகிப்து வருகைக்குப் பின் நடந்த பேச்சு வார்த்தையின் பிறகே எகிப்து இந்நிலையை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.