{mosimage}பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து புனித ஹஜ்ஜுக்குச் சென்ற ஹாஜிகள் எகிப்தின் ரஃபா எல்லை வழியே நுவைபா அடைந்து அங்கிருந்து கப்பல் மூலம் ஜெத்தா துறைமுகம் அடைந்து மக்கா சென்றிருந்தனர். எகிப்து தனது ரஃபா எல்லையை ஹாஜிகளுக்குத் திறந்து விட்டதை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்திருந்தது.
இப்போது ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் இந்த ஹாஜிகள் நுவைபா துறைமுகத்தை நெருங்கும் போது எகிப்திய அரசு அனுமதி தராததால் கடலில் இரு நாட்களாகக் கப்பலிலேயே தவித்தனர். பின்னர், அவர்களை எகிப்து கரையிறங்க அனுமதித்து அவர்கள் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் கர்ம் ஸாலேம் என்ற இடம் வழியாக காஸா திரும்பவேண்டும் எனக் கூறிவருகிறது.
இதற்குப் பாலஸ்தீன ஹாஜிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துத் தாங்கள் ரஃபா வழியாகவே காஸா திரும்ப விரும்புவதாகக் கூறி வருகின்றனர். இதற்கிடையே இவர்களை அல்-அரீஷ் என்ற இடத்தில் இருக்கும் முகாம்களில் தங்க வைத்து எகிப்து அவர்களுக்கு உணவும் குடிநீரும் வழங்கியது. இதனை ஏற்க மறுத்த ஹாஜிகள், "நாங்கள் பிச்சை கேட்டு எகிப்து வரவில்லை; எங்களை ரஃபா வழியாக எங்கள் தாயகம் திரும்ப அனுமதித்தாலே போதும்" எனக் கோபத்துடன் கூறிவருகின்றனர்.
இந்தப் பாலஸ்தீன ஹாஜிகளில் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகச் சந்தேகிப்பதாகவும் அவர்கள் காஸாவிற்குள் பணம், ஆயுதம் இவற்றைக் கடத்த இருப்பதாகவும் இஸ்ரேல் புகார் கூறியுள்ளதை அடுத்தே எகிப்து இந்நிலையை மேற்கொண்டுள்ளது.
இந்த ஹாஜிகளில் பெரும்பாலானோர் முதியவர்களாவர். இந்தச் சிக்கல் தொடங்கியதிலிருந்து இதுவரை மூவர் இறந்துள்ளனர் என்பது கவலையளிக்கும் செய்தியாகும். "பாலஸ்தீன ஹாஜிகளின் இந்தச் சிக்கலை சுமுகமாக விரைவில் தீர்ப்போம்" என எகிப்து அதிபர் ஹுஸ்னி முபாரக் கூறியுள்ளார்.