முன்னாள் பாக் பிரதமர் பேநஸீர் கொல்லப்பட்டார்!

{mosimage}இருமுறை பாகிஸ்தான் பிரதமர் பதவி வகித்த திருமதி. பேநஸீர் புட்டோ இன்று ராவல்பிண்டியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். கொலையாளி அவரை முதலில் துப்பாக்கியால் சுட்டுவிட்டுப் பின்னர் தற்கொலை வெடிகுண்டு வெடிக்கச் செய்து மாண்டுபோனதாகத் தெரிகிறது. இதில் மேலும் 22 பேர் இறந்து போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கழுத்தில் சுடப்பட்ட பேநஸீர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராவல்பிண்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், 35 நிமிடங்கள் செயற்கை சுவாசம் அளிக்கும் முயற்சிகள் பலனளிக்காமல் அவர் இறந்து போனதாகவும் மருத்துவமனை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உளவுத்துறையும் முஷரஃப் அரசுமே காரணம் என திருமதி புட்டோவின் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், பாக் அதிபர் முஷரஃப் இது பயங்கரவாதிகளின் தாக்குதல் எனக் கூறியுள்ளார்.

ஜனவரி 8 அன்று பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கோர நிகழ்வு நடந்தேறியுள்ளதால் இத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக பேநஸீரின் கட்சியான PPP தெரிவித்துள்ளது. இன்னொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீஃப் தனது கட்சியும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

திருமதி புட்டோவின் இழப்பு பாகிஸ்தானின் ஜனநாயக நடைமுறைக்குப் பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளதாக இந்திய அரசு தனது அதிகாரப்பூர்வச் செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங், ஒரு சிறந்த ஜனநாயகவாதியை தெற்காசியா இழந்துவிட்டதாகத் தமது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.