சாவிலிருந்து தப்பியிருக்கக் கூடிய ஒரு மில்லியன் உயிர்கள்!

US தலைமையிலான கூட்டுப்படையினரின் இராக்கிய ஆக்கிரமிப்புக்குப் பின் நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட ப்ளூம்பர்க் மருத்துவக்கல்லூரி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை பிரிட்டனின் மருத்துவ இதழான தி லான்செயும் (The Lancet) ஆஸ்திரேலியாவின் 27 தலைசிறந்த மருத்துவ நிபுணர்களும் உண்மைதான் என சான்று பகர்ந்துள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்புக்கு முந்தைய இராக்கில் நடைபெற்ற தவிர்த்திருக்கக்கூடிய உயிரிழப்புகளை விட இது அதிர்ச்சி தரக்கூடிய அளவில் அதிகமாக உள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதுவும் அவ்வுயிரிழப்புகள் கடுமையான ஐநா தடைகளினால் ஏற்பட்டவை என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட இராக்கில் தற்போது 3.8 மில்லியன் இராக்கியர்கள் அகதிகள் ஆக்கப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. உலக சுகாதார நிறுவனக் கணக்கெடுப்பின்படி இராக்கில் ஒரு நபருக்கு ஆகும் மருத்துவச் செலவு 64 டாலர் ஆகும். (ஒப்புமைக்காக ஒரு தகவல்: ஆக்கிரமிக்கப்பட்ட ஆப்கனில் இது 23 டாலர், பிரிட்டனில் 2,389 டாலர், ஆஸ்திரேலியாவில் 2,874 டாலர், US-ல் 5,711 டாலர் ஒரு நபருக்கான மருத்துவ செலவு -per capita medical expenditure)

ஒருமில்லியன் உயிரிழப்புகள் அப்பட்டமான ஜெனிவா ஒப்பந்த மீறலாகும். ஆக்கிரமிக்கும் நாடு தன் ஆக்கிரமிப்பில் இருக்கும் பொது மக்களை உயிருடன் வைத்திருக்கவேண்டும் என்று இந்த ஒப்பந்தத்தில் ஒரு கூற்றாகும்.

இறந்த பொதுமக்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். புஷ் அரசின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான போராகத் தற்போது மாறிவிட்டது. இது அப்பட்டமான மனித உரிமை மீறலோடு, படுகொலை புரியும் போர்குற்றமாகும்.

நன்றி: மில்லிகெசட்