ஆப்கனில் “ஜனநாயகத்தை” நிலைநாட்டும் அமெரிக்கா!

{mosimage}காபூலுக்கு வடக்கே கபிஸா என்ற இடத்தில் தாலிபான்கள் தனது இராணுவத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் திருப்பித் தாக்க "நேர்ந்து" திங்களன்று ஒன்பது பேர் அமெரிக்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் ஐவர் பெண்கள்; இருவர் குழந்தைகள். மற்றொரு அமெரிக்க இராணுவத் "தற்காப்புத்" தாக்குதலில் 16 பொதுமக்கள் மாண்டனர்; மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

நேட்டோ கூட்டுப்படையின் மீது தாக்குதல் நடைபெற்றதால்  வான்வழி (air strike), தரைவழிப் பெரும் ஆயுதங்கள் (heavy artillery) மூலம் திருப்பித் தாக்க வேண்டி இருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நங்கார்ஹர் என்னும் இடத்தில் பொதுமக்களின் மீது நடைபெற்ற கண்மூடித்தனமான தாக்குதலினால் ஆறு மைல் நீளத்திற்கு இரத்தக்கறை இருந்ததாக சம்பவ இடத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சாலையில் வந்த கார்கள் பேருந்துகள் மிதிவண்டிகள் அனைத்தின் மீதும் அமெரிக்க இராணுவம் காட்டுத்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஆப்கன் அதிபர் கார்சாய் கண்டித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பெரும் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் கார்சாய்க்கும் அமெரிக்காவுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலம் சென்றததகாவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய சிலர் அமெரிக்க இராணுவத்தினர் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டை மிக அருகாமையிலிருந்தே நடத்தியுள்ளனர் என்றும் ஊர்வலம் நடத்தியோர் பொதுமக்கள் என நன்கு தெரிந்தும் அவ்வாறு நடந்து கொண்டனர் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாலிபான் ஆட்சி அராஜகமான முறையில் இருந்ததாகவும் அதிலிருந்து ஜனநாயக விடியலைக் கொண்டுவருவதாகவும் சொன்ன அமெரிக்கா தனது உறுதிமொழிக்கு முரணாகத் தானே பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறது என்பது இச்சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது.