மத்திய கிழக்கில் சுற்றும் கழுகன் – குறிக்கோள் என்ன?

Share this:

{mosimage}தனது பதவிக் காலம் முடிய இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் திடீரென மத்திய கிழக்கில் ஒரு சுற்றுப்பயணத்தை அறிவித்துச் சுற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் புஷ், இன்றைய நிலையில் அனைத்துத் தலையாயப் பிரச்சனைகளையும் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு உலகின் அனைத்து ஊடகங்களின் தலைப்பினையும் ஆக்ரமித்துக் கொண்டுள்ளார். நடுநிலையாளர்கள் முதல் பிரபல அரசியல் வித்தகர்கள் வரை இவரின் தற்போதையப் பயணத்தின் நோக்கத்தினைக் குறித்தும் அதனால் விளைய இருக்கும் நல்ல/தீய விளைவுகளைக் குறித்தும் அலசி ஆராய்ந்துக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவால் உருவாக்கி வளர்த்து விடப்பட்டுள்ள அல்காயிதாவின் தலைவர் உசாமா பின் லாடன் இவரை குண்டுகளைக் கொண்டும் துப்பாக்கி ரவைகளைக் கொண்டும் வரவேற்க வேண்டும் என அழைப்பு வேறு விடுத்தார். உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் இன்றைய இவரின் வருகைக்கான இலட்சியம் என்ன?

இன்றைய மத்திய கிழக்கின் அமைதி வாழ்விற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் இஸ்ரேலின் அடாவடித்தனமான, மண்ணின் மைந்தர்களிடமிருந்து சூழ்ச்சி மூலம் ஆக்ரமித்து வைத்துள்ள பாலஸ்தீனப் பிரச்சனைக்கு இறுதி முடிவு காண வந்துள்ளாரா? இல்லாத ஆயுதங்களின் பெயரைக் கூறி இதுவரை சுமார் இரண்டரை இலட்சத்திற்கும் மேலான அப்பாவி இராக்கிய மக்களை அநியாயமாக காவுகொள்ளக் காரணமான அமெரிக்காவின் இராக் ஆக்ரமிப்புத் தொடர்பாக இறுதி தீர்வு காணவும் இராக்கியரின் அமைதி வாழ்விற்கான வழிகளை ஆராயவும் வந்துள்ளாரா? அவரின் சுற்றுப்பயண விவரம் மற்றும் இதுவரை வெளிவந்துள்ள அவரின் அறிக்கைகளிலிருந்தே இதனை ஆராய்ந்தால் சரியாக இருக்கும்.

புஷ்ஷின் மத்திய கிழக்கு சுற்றுப்பயணத்தில் முதலில் சென்ற இடம் இஸ்ரேல்-பாலஸ்தீனம்.

இஸ்ரேல் அதிபரையும் பாலஸ்தீன ஆணையத்தின் (Palestinian Authority) தலைவரையும் சந்தித்த பின் புஷ் வெளியிட்ட அறிக்கை இவ்விடங்களில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் நோக்கம் வெளிப்படுத்தும்.

புஷ்ஷின் பலஸ்தீன – இஸ்ரேல் சுற்றுப்பயண அறிக்கை:

"விரைவில் சுதந்திரப் பாலஸ்தீனம் உருவாகும். 2009-க்குள் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படியான உடன்படிக்கை ஏற்படும்".

முதல் வார்த்தைக்கும் இரண்டாவது வார்த்தைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டைப் பார்ப்பது இருக்கட்டும். விரைவில் உருவாகப்போகும் சுதந்திரப் பாலஸ்தீனம் எப்பொழுது உருவாகும்? எப்படி உருவாகும்? எந்தத் திட்டமும் இல்லை. அதை விடுவோம், இதே நாளில் இஸ்ரேலும் பாலஸ்தீன் ஆணையத்தின் தலைவரும் விடுத்த அறிக்கை என்ன தெரியுமா?

இஸ்ரேல்: காஸாவில் தீவிரவாதத்தை ஒழிக்கும் வரை சமரசப் பேச்சுக்கே இடமில்லை.

பாலஸ்தீன ஆணையம்: மேற்குக்கரையிலுள்ள இஸ்ரேலின் ஆக்ரமிப்பை விலக்கிக் கொள்ளும் வரை இஸ்ரேலுடனான சமரசப் பேச்சுக்கு இடமேயில்லை. சமரசத்துக்கு முதல் முட்டுக்கட்டையான ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் குடியேற்றம் நிறுத்தப்படவேண்டும்.

புஷ்: ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் புதிய குடியேற்றங்களை நிறுத்துமாறு இஸ்ரேலைக் கேட்டுக் கொள்கிறேன்.

எவ்வித நோக்கமோ திட்டமோ அறிவிக்காமல் ஒரு அவசர மத்தியக் கிழக்கு சுற்றுப்பயணத்தை அறிவித்த புஷ், தான் கண்ணுற்ற முக்கிய மத்திய கிழக்கின் பிரச்சனைக்குரிய நாடுகளின் பிரச்சனையில் அவர்களைச் சந்தித்தபின் வெளியிட்ட அறிக்கையினைப் பார்த்து உலகமே சிரிக்கிறது!

அடுத்து குவைத். மத்திய கிழக்கில் உள்ள தனது படைத்தளங்களில் மிகப்பெரியவைகளில் ஒன்றான அமெரிக்காவின் செல்லப்பிள்ளை. குவைத் மன்னருடனான சந்திப்பிற்குப் பின் வெளியான புஷ்ஷின் அறிக்கை இராக்கைக் குறித்துப் பேசுகிறது.

"இராக் மீதான யுத்தத்தில் அமெரிக்கா எந்தத் தவறையும் இழைக்கவில்லை. அது மிகச் சரியான முடிவுகளையே இராக் விஷயத்தில் எடுத்துள்ளது. இன்னும் ஆறு மாதக் காலத்தில் 20,000 படை வீரர்களை இராக்கிலிருந்து அமெரிக்கா விலக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்".

இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வது இருக்கட்டும். இராக் மீதான போர் நியாயமானது தான் என சிலாகிக்கும் புஷ், "உலகை அழிக்கும் அதி பயங்கர உயிர் கொல்லி ஆயுதங்கள் இராக்கில் உள்ளன" என இது தொடர்பான உலக அணு ஆயுத அமைப்பின் அறிக்கையினைக் கூட உண்மைக்குப் புறம்பானது எனக் கூறி அல்லவோ இராக்கின் மீது போர் தொடுத்தார். இராக்கை ஆக்ரமித்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டப் பின்னரும் தனக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறப்போவதாகக் கணக்கிட்ட சதாமை அநியாயமாகக் கொன்றொழித்தப் பின்னரும் இதுவரை எத்தனை உயிர் கொல்லி ஆயுதங்கள் இராக்கிலிருந்துக் கண்டெடுக்கப்பட்டுள்ளன?.

இக்கேள்வியை யார் கேட்பது? நிச்சயமாக குவைத் கேட்காது என நம்புவோம். விசுவாசமான செல்லப்பிள்ளை.

சரி. உலகிற்கு ஜனநாயகத்தைக் கற்றுக் கொடுக்க விழையும் ஜனநாயகக் காவலனான புஷ்ஷின் விசுவாசமான செல்லப்பிள்ளையான ஜனநாயத்திற்குச் சாவு மணியடிக்கும் குவைத் மன்னரின் அறிக்கை என்ன என பார்க்க வேண்டாமா?

"குவாண்டனமோ சிறையில் வாடும் குவைத் நாட்டினர் மீது நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்".

ஆகா. என்ன ஓர் அருமையான அறிக்கை. எவன் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன? நான் மட்டும் நன்றாக இருந்தால் சரி தான். சரி தனக்குரிய உரிமையையாவது ஒழுங்காக முழுதாகக் கேட்கத் தெரிகிறதா? அநியாயமாக எவ்வித விசாரணையும் இன்றி குவாண்டனமோவில் கொடுமைப்படுத்தப்படும் உயிர்களுக்காக நியாயமாக ஒருவன் எவ்வாறு குரல் கொடுக்க வேண்டும்.? குறைந்தபட்சம், "அநியாயமாகக் கொடுமைபடுத்தப்படும் அப்பாவிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்றாவது அறிவிக்க வேண்டாம். அதுவும் வேண்டாம், "அநியாயமாக குவாண்டனமோ சிறையில் இடப்பட்டுள்ள குவைத் நாட்டினரை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்றாவது அறிவிக்க வேண்டாமா? 

அடுத்து புஷ் சென்றது பஹ்ரைன். மத்திய கிழக்கிலுள்ள தனது படைத்தளங்களில் மற்றொன்று. இங்கும் செல்வதற்கான காரணம் தனியாக விளக்க வேண்டிய அவசியமில்லை. வந்திறங்கி பின் அங்கிருந்து விட்ட அறிக்கை, "இராக் மக்களுக்கு ஜனநாயகத்தை மீட்டுக் கொடுத்துவிட்டோம். எனவே வரும் காலங்களில் படைகளைத் திரும்பப் பெறுவோம்". பஹ்ரைனோடு ஒரு வணிக உடன்படிக்கையிலும் கையெழுத்திட்டுள்ளார்

பஹ்ரைனுக்கு அடுத்து இன்று மத்தியகிழக்கு நாடுகளுள் மிக முக்கிய சக்திகளில் ஒன்றாக விளங்கும் அமீரகத்திற்கு வந்துள்ளார். வந்த கையோடு என்ன பேசியிருக்கிறார்? "உலகிலேயே அதிகமாகப் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்குவது ஈரான் தான்; அல்காயிதாவிற்கும் ஹமாஸிற்கும், ஹிஸ்புல்லாவிற்கும், இஸ்லாமிக் ஜிஹாதிற்கும், இராக்கிய ஷியா பயங்கரவாதிகளுக்கும் ஆயுதங்கள் அளிப்பது ஈரான் தான். ஈரானியர்கள் தமது உரிமையை மறுக்கும் அரசின் கீழ் வாழக்கூடாது; அவர்கள் உரிமையை மதிக்கும் அரசு விரைவில் அமையும்; அப்போது அவர்களின் சிறந்த நண்பனாக அமெரிக்கா விளங்கும்"

இனி சவூதி அரேபியாவிற்குச் சென்று விட்டு நாடு திரும்ப இருக்கிறார்.
சவூதிக்கும் சென்றுவிட்டு என்ன அறிக்கை வெளியிடப்போகிறாரோ? எதுவாக இருப்பினும் மத்தியகிழக்கின் சாமானிய மக்களுக்கு நன்மையோ அமைதியோ பயக்கும் படியாக எதுவும் இருக்கும் என நிச்சயம் எதிர்பார்க்க வேண்டாம்.

ஆனால் அதற்குள் சவூதி அரேபியா சற்று எழுந்து நின்று கொண்டு, "குவாண்டனமோ சிறையில் அடைத்து வைத்துக் கொடுமை படுத்தும் 150 க்கு மேற்பட்ட பிரஜைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விடம் மற்றொரு விஷயம் குறிப்பிட்டாக வேண்டும். இவ்வறிக்கையினை வெளியிட்ட சவூதி சர்வதேச மனித உரிமைகள் அமைப்பானது, "ஒரு இந்தோனேஷிய வேலைக்காரப் பெண்ணை மிருகத் தனமாகக் கொடுமைப்படுத்திய சவூதி மாணவனுக்கு 27 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு குவாண்டனமோவில் அடைத்துக் கொடுமைப்படுத்துவதைக் குறிப்பிட்டு அவனை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் கோரியுள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிராகத் திறக்கப்பட்ட ரகசியக் கொடுமைக் கூடத்தில் மற்றைய குற்றங்களுக்கும் தண்டனையா? பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். திரைக்கு அப்பால் மற்றொரு முகத்தை வைத்துக் கொண்டு ஜனநாயகத்தின் பாதுகாவலனாக வலம் வரும் அமெரிக்காவின் உண்மை முகத்தைக் கண்டால் மிருகங்களும் தலைதெறிக்க ஓடி ஒளிந்துக் கொள்ளும்.

இனி புஷ்ஷின் எவ்வித முக்கியத்துவமும் இல்லாத இந்தச் சுற்றுப்பயணத்தின் மறைமுக நோக்கத்தினைக் குறித்துச் சற்றுக் கூர்ந்து கவனிப்போம்.

1. கடந்த GCC நாடுகளுக்கிடையிலான மாநாட்டின் பொழுது மத்திய கிழக்கு நாடுகள் தங்களின் வர்த்தகத்தை டாலரிலிருந்து மற்றொரு நாணயத்திற்கு மாற்றுவதுத் தொடர்பாக முதன் முதலாக ஆலோசனை நடத்தின.

2. சவூதி மற்றும் ஈரானுக்கிடையிலான அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ஓர் ஈரான் அதிபர் இஸ்லாமியர்களின் புனிதக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற சவூதி மன்னர் அழைப்பு விடுத்தார். ஈரான் அதிபர் அஹ்மதிநிஜாதும் முதன் முறையாக ஹஜ்ஜை நிறைவேற்ற சவூதி சென்றது மட்டுமின்றி சவூதி மன்னருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

3. சமீப காலத்தில் ஈரான் அரபு நாடுகளுக்கு இராணுவ, பாதுகாப்பு விஷயத்தில் முன்னேறிய அறிவியல் தொடர்பான தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொடுக்க அழைப்பு விடுத்தது. அதன் அணு ஆயுதப் பரிசீலனை தொடர்பாக அதிகம் கூறத் தேவையில்லை.

4. பனிப்போர் காலகட்டத்திற்குப் பின் அமெரிக்கச் சதியால் நிலைகுலைக்கப்பட்ட உலகின் இரண்டாவது மிகப்பெரிய வல்லரசான சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் உலகில் தனது ஆதிக்கத்திற்குச் சவாலாக வரும் என அமெரிக்காவால் கணிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய சமூகத்தில் அரசியல் ரீதியாகப் பிரிந்து இயங்கும் இரு பெரும் பிரிவுகளான ஷியா மற்றும் சுன்னாஹ் பிரிவுகள், சவூதி மற்றும் ஈரானிலுள்ளப் பல பிரபல இமாம்களின் சகோதரத்துவத்திற்கான அழைப்பிற்கு முதன் முதலாகச் செவிதாழ்த்தத் துவங்கியுள்ளனர்.

5. ஈரானுடனான அரசியல் மற்றும் வணிக உறவுகளை சமீபத்தில் அமீரகம் பலப்படுத்துவதற்கான முயற்சிகளை வரவேற்றுள்ளது.

6. ஈரான் மற்றும் சிரியா மீதான ஆக்ரமிப்பிற்கு மத்திய கிழக்கின் மிக முக்கிய சக்திகளான அமீரகம் மற்றும் சவூதியின் துணை தேவை.

7. அமெரிக்க மக்களில் மிகப்பெரும்பாலானவர்களும் இராக் யுத்தத்தின் மூலமாக அவசியம் ஏதுமின்றி ஆயிரகணக்கான அமெரிக்கப் படைவீரர்களின் உயிர்களை புஷ் பலிகொடுத்து விட்டதாகவும் அதன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சீர்குலைவை அவர் ஏற்படுத்தி விட்டதாகவும் கருதுகின்றனர். 2009ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருப்பதையும், 2009க்குள் பாலஸ்தீன் – இஸ்ரேலுக்கிடையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியான உடன்பாடு ஏற்படும் என உளறியிருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

8. மேற்கண்ட காரணங்களுடன் அமெரிக்காவிற்கு எப்பொழுது தான் விசுவாசமாகத் தான் இருப்பேன் 20 வருட அடிமைச்சாசனம் எழுதிக் கொடுத்து தனது குடிமக்களின் இருப்பிடங்களுக்கு மத்தியில் உலகில் அமெரிக்காவிற்கு வெளியே இருக்கும் படைத்தளங்களிலேயே மாபெரும் படைத்தளத்தை அமைக்க விட்டிருக்கும் வளர்ந்து வரும் கத்தருக்கு புஷ்ஷின் இந்தச் சுற்றுப்பயணத்தில் கடைக்கண் பார்வை விழாததையும் சேர்த்துக் கொள்ளலாம்.

எப்பாடு பட்டேனும் மத்தியகிழக்கு, வளைகுடா நாடுகளுக்கும் ஈரானுக்கும் பகையை வளர்த்து இராக்கை உருக்குலைத்தது போல ஈரானையும் சின்னாபின்னப்படுத்த ஒரு வெள்ளோட்டம் பார்க்கவே புஷ் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதோடு பாலஸ்தீனர்களுக்குத் தனிநாடு அமைவதற்கு எனத் தாளில் மட்டுமே அறிக்கை மூலம் முயற்சி செய்துள்ள இரட்டை வேடத்தையும் அவதானிக்க முடிகிறது.

மொத்தத்தில் புஷ்ஷின் முக்கியமற்ற மத்திய கிழக்கு சுற்றுப்பயணம், நாக்கைத் தொங்க விட்டு ஆடுகளுக்கிடையில் அலையும் ஓநாயை நினைவுபடுத்துகிறது!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.